Sunday, November 27, 2011

நீங்கள் போராடிக்கொண்டிருந்தபோது ,நான் படித்துக்கொண்டிருந்தேன்.




நான் படிக்கத்தொடங்கியபோது
நீங்கள்
போராடத்தொடங்கியிருந்தீர்கள்
நான் வகுப்பறைகளில்
புத்தகங்களிலும்
இலக்கியத்திலும் 
மூழ்கியிருந்தபோது
நீங்கள்
காடுகளிலும் காவலரண்களிலும்
உறக்கம் தவிர்த்திருந்தீர்கள்


உங்கள் உடலங்கள்
ஊர் திரும்புகிறபோதுகளில்
கறுப்புக்கொடி கட்டி
தோரணங்களைத்தொங்கவிட்டு
அஞ்சலி செலுத்துவேன்
ஆயினும்
அடுத்த பரீட்சைக்காக
என் படிப்பு
தொடர்ந்து கொண்டேயிருக்கும்

இடம் பெயரும்போது
புத்தகங்களையும் காவியபடிதான்
ஓடியிருக்கிறேன்.
ஷெல்களுக்கும்
விமானம் வீசும் குண்டுகளுக்கும்
விழுந்து படுத்துவிட்டு
ஓய்ந்தபின்
எழுந்து படிக்க
என்னால் முடிந்திருக்கிறது.

காய்ந்து இறுகிய
கரங்களில்
துப்பாக்கிகளோடு
நீங்கள்,..
என்
மென்மையான
கைகளில் புத்தகங்களோடு
நான்..
எத்தனைமுறை
கடந்து சென்றிருப்போம்
ஏன்
என்னைக்குறுக்கிடவேயில்லை
நீங்கள்?

படிப்பில் நான்
வென்றுவிட்டதாக
சொல்லிக்கொள்கிறார்கள்.
இப்போது….

நீங்கள்
போராடிக்கொண்டிருந்தபோதுதான்
நான் படித்துக்கொண்டிருந்தேன்.

Saturday, November 19, 2011

ஒரு கவிதை அகழ்வு!



எனக்கு புதையல் தோண்டுவதுபிடிக்கும்.
மட்டான வரைபடத்தை வைத்துக்கொண்டு இடத்தைக்கண்டு பிடித்துவிட்டால் கடப்பாரையோ மண்வெட்டியோ மாங்கு மாங்கென்று தோண்டினால் ஒரு இடத்தில் மூன்றுசுழி ணாண இங்கண்ணவோடு மோதி ’ணங்’ என்ற சத்தம் வர நிறுத்தி மண்ணை வழித்து பெட்டியை திறக்கவேண்டியது..இதுதான் என் வழி ,தோண்டுதல்,தோண்டுதல்,தோண்டுதல்.
நட்பாஸ் தோண்டுவதில்லை. அவர் அகழ்கிறார்.அவருக்கு புதையல் தேடுவதில் ஒரு பக்குவம் இருக்கிறது.கைதேர்ந்த அகழ்வாராய்ச்சி நிபுணர்போல கவனத்துடன் நிலத்தை படைபடையாக வெட்டுகிறார். அதை விட திறந்த மனத்துடன் பாவனையின்றி இருக்கிறார்.கிடைக்கப்போவது பற்றி ஏற்கனவே அறிந்திருக்கிறேன் என்ற பாவனையோ முன்முடிபுகளோ இல்லை.
அதனால் பக்குவமான அகழ்வு. மண்ணையும் கிடைத்தவற்றையும் அலசுகிறார்.கிடைக்க இருப்பது எதுவோ அதை முழுமையாக சேதமின்றி எடுப்பதில்தான் அவர் கவனம் இருக்கும்.
யாரோ ட்ரன்ஸ்டேமராம்.நோபல் பரிசு பெற்றவராம்.கவிதைகள் எழுதியிருக்காராம்.சுவீடீஷ்காரராம்.
நம்ம நட்பாஸ்தான் போய்ப்பார்த்துவிட்டு வந்து சொன்னார்.
”திண்ணையில்கிடக்கிறார்”
”உங்கவூட்டுதிண்ணையிலா” என்று வாரிச்சுருட்டிக்கேள்வி கேட்கிற அளவுக்கு நான் ஒண்ணும் மக்கு இல்லை.
இணையத்தில் எல்லாம் இருக்கு. சந்தைதான் பெரியது.அதுதவிர கூச்சல்கள் கும்மாளம்.
இணையத்தில் கோயில் இருக்கிறது. சிலரை சொற்களால் கோயில் கட்டி ஆறுகாலத்துக்கும் பூசை செய்கிறார்கள்.சிலரை துரத்தியடித்து சொற்கள் எறிந்து கொல்லவும் செய்கிறார்கள். ஆங்காங்கே பலிபீடங்களும் போட்டிக்களங்களும் கோஷங்களும் அப்பப்பா..
இப்படி சந்தடிமிக்க சூழலில் நம்ம நட்பாஸ் ஆரவாரவில்லாமல் ஒரு வித்தியாசமான ஒரு பணியைச்செய்துவருகிறார்.
அகழ்வும் ஆராய்வும் செய்து பொக்கிஷங்களை வெளிக்கொணர்கிறார்.இங்கு பார்வைக்குத்தருகிறார் நெடுநாளாகவே.
பாருங்களேன்.இந்த சுவிடீஷ்காரரின் கவிதையை.
Midwinter
A blue glow
Streams out from my clothes.
Midwinter.
A clinking tambour made of ice.
I close my eyes.
Somewhere there’s a silent world
And there is an opening
Where the dead
Are smuggled over the border.
[Translated from the Swedish by Robert Bly]

சுவிடீஷ் மொழியில் எழுதப்பட்டு ஆங்கில மொழிக்கு வந்து பிறகு தமிழில் கிடைக்கப்பெற்றது இந்தக்கவிதை.இந்த இடத்தில் எனக்கு ஏனோ
The Three Burials of Melquiades Estrada என்ற சினிமா ஞாபகம் வந்தது. ஆயினும் அதைக்கடந்து சொல்லவந்ததைச்சொல்கிறேன்.
நட்பாஸின் ஒரு பக்குவமான அகழ்வுக்காரனின் மனநிலையுடனான கவிதையின் சிதைவுறாத மொழிபெயர்ப்பை நோக்கிய தேடல் வியக்கவைக்கிறது.சங்கேதக்குறிகள் போல எனக்குத்தோன்றும் அறியாத சுவிடீஷ் மொழியினை கூட தேடி எடுத்து பார்க்கிறார்.வாலைமட்டும் வெட்டி யெடுத்துவிட்டு டைனோசோர் என்று திருப்திப்பட்டுக்கொள்ள அவரால் இயலவில்லை.
கடந்த சில நாட்களாக அவர் உறைபனியின் , பரவியிருக்கிற நீலநிற பின்ணணியொன்றில் டம்போரின் என்கிற அவர் கேட்டறியாத ஒரு வாத்தியக்கருவியின் இசையைக்கேட்கமுயல்கிறார். கவிஞனின் குரலை அவனது மனத்தை படம்பிடிப்பதற்காக கானகத்தில் எங்கோமறைந்திருக்கிற எப்போதாயினும் ஒருமுறை தோன்றிப்பாடுகிற ஒரு பறவையினைப் பதிவுசெய்ய கானகமெங்கும் அலைகிற புகைப்படக்கலைஞனின் தவிப்பும் அர்ப்பணிப்பும் அவரில் தெரிகிறது.
இந்த இடத்தில் நான் ஒரு மில்லியனராக இல்லைஎன்ற கவலை எனக்கு வருகிறது.அப்படியிருந்திருந்தால்
”வாருங்கள் நட்பாஸ் சுவீடனுக்கு போவோம் உறைபனியில் அமர்ந்து ட்ம்போரின் கேட்போம்”
என்றழைத்திருந்திருப்பேன் சுவீடனுக்கான விமானச்சீட்டுக்களோடு.
இனி அவரின் தேடலைப்படியுங்கள்:
********************************************
நீலக் கிளரொளி
என் ஆடைகளின்று பெருக்கெடுத்தோடும்.
இடைபனிக் காலம்.
உறைபனி வெண் பறைகளின் சலங்கை.
என் கண்கள் மூடும்.
ஓசைகளற்ற ஓர் உலகம்
ஆங்கோர் திறப்பு
களப்பட்டோர் அவ்வழி
கவர்படும் புலம்.
(நட்பாஸின் மொழிபெயர்ப்பு)
அதற்கு முன் முடிந்த கதை/ கவிதை: தெரியாத மொழியில் வந்த கவிதையை இடைமொழியின் துணை கொண்டு மொழிபெயர்ப்பதில் உள்ள சில சிக்கல்களை/ வாய்ப்புகளைச் சுட்டும் விதமாக-
பயன்படுத்தப்பட்ட ஸ்வீடிஷ் அகராதி இது –
http://folkets-lexikon.csc.kth.se/folkets/folkets.en.html
இரண்டு ஆங்கில மொழிபெயர்ப்புகள் காணக் கிடைக்கின்றன:
http://www.guernicamag.com/poetry/47/midwinter/
http://www.blackbird.vcu.edu/v10n1/poetry/crane_p/017pc_page.shtml
இவற்றிடையே உள்ள பெரிய வித்தியாசம்- ஒரு கவிதையில் ஒற்றைப் பறை, இன்னொன்றில் பன்மை.
பயன்படுத்தப்பட்ட ஸ்வீடிஷ் சொல்: tamburiner.
பொருள்: tamburin noun, tambourine
ஒரு இடத்தில், “Forming the plural of Swedish nouns is not quite as simple as in English. You will see that the great majority of nouns have plurals ending in -r, however some get -or, some get -ar, and some get –er…. -er suffix: Many foreign words fall in this category, as well as those words with irregular plurals ” என்று படிக்கிறேன். எனவே பன்மையைத் தேர்வு செய்யத் தோன்றுகிறது.
glow என்றும் light என்றும் மொழிபெயர்க்கப்பட்ட, sken என்ற சொல், “light, glare [figuratively, " semblance, guise"]” என்று பல் வகையில் பொருட்படுகிறது. இதில், ” semblance, guise” என்ற பொருளைத் தமிழுக்குக் கொண்டு வர முடியாது. நீல வண்ணத்தில் ஒளிர்கிறது என் ஆடைகள் என்று சொல்லலாம், இந்தப் பொருளை உணர்த்த நீல வண்ணம் தரித்து ஒளிர்கிறது என் ஆடைகள் என்று சொல்லலாமோ என்னவோ- அதுகூட சரியாக வருவதாக இல்லை.
அடுத்த அடியில் உள்ள strömmar என்ற பதம் stream என்று பெயர்க்கப்படுகிறது. அகராதி, “stream, flow, pour [also used figuratively]” என்று சொல்கிறது. இந்த ஒளி வெள்ளமாய்ப் பெருகிப் பரவுகிறது: தண்ணீரைப் போல்.
யோசித்துப் பார்த்தால், ஒரு தனி மனிதனின் சோகத்தில், அவனது ஆடைகள் நீல வண்ணம் தரித்து, அந்த நீலம் அவற்றிலிருந்து வெள்ளமாய் பரவுகிறது என்ற தோற்றம் எழுகிறது.
குளிர் காலம். இருள். பனி உடைகிறது, உரசுகிறது- Klirrande- clink ஆகும் ஓசை பல திசைகளில் இருந்து கேட்கிறது. இருள், குளிர், சோகம், உடையும் பனிக்கட்டிகள்: பறையின் சலங்கை (http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2c/Pandei_inter.jpg/250px-Pandei_inter.jpg இந்தப் புகைப்படத்தில் உள்ள மணிகளின் ஓசையை சலங்கை என்று சொல்லலாமா?) பறை ஒலிக்கவில்லை,. இரவின் நிசபததில் திசையெங்கும் அமானுடமாய் அதன் மணிகள் கிணிகிணிக்கின்றன.
கவிஞன் தன் கண்களை மூடிக் கொள்கிறான்- கண்கள் என்றால் கண்களை மட்டுமல்ல, புலன்கள் அனைத்தும் உன்முகப் பார்வை கொள்கின்றன. அவனை மௌனம் நிறைக்கிறது.
நிசப்தமான ஒரு உலகம் இருக்கக்கூடும் என்கிறான், தான் அக விழியால் காண்பதால், அந்த உலகுக்கு ஒரு திறப்பு இருக்கக் கூடும் என்று சொல்கிறான்: பனிக்கட்டிகள் உடைவது போல், இந்த பருவுலகம் உடையலாம். அதன் வழியாக இறந்தவர்கள் இவ்வுலகின் எல்லையைத் தாண்டி கடத்திச் செல்லப்படலாம்.
இங்கு dead என்று ஆங்கிலத்தில் பெயர்க்கப்படும் döda என்ற சொல்லின் பொருள் பலதரப்பட்டவை: kill [figuratively, " repress"], cancel, dispatch, eliminate, eliminate, kill off என்றும் இன்னும் பலவுமாக விரிகிறது: http://folkets-lexikon.csc.kth.se/folkets/folkets.en.html#lookup&d%C3%B6da
இவர்களை இறந்தவர்கள், என்று பொதுவாய்ச் சொல்லிவிட முடியாது- இவர்கள் கொல்லப்பட்டவர்கள்: வீழ்ந்தவர்கள், கூற்றுவனால் கவர்ந்து செல்லப்பட்டவர்கள்,
—-
எங்கே? கவிதையில் விடையில்லை. ஆனால் கவிஞனின் உலகை சோகம்/ நீலம் நிறைக்கிறது: (அவனது இதயத்தை உறைபனி என்று சொல்லலாமா?) உறைபனி உடைவதுபோல் ஒரு திறப்பு- அதன்வழி அந்த உலகின் எல்லையைக் கடந்து வீழ்ந்தவர்கள் கொண்டு செல்லப்படுகிறார்கள்- இந்த உலகை நீலம் நிறைக்க வாய்ப்பில்லை, இல்லையா?
—-
ட்ரான்ஸ்ட்ரெமரை mystic poet என்று சொல்கிறார்கள். அவர் மனநல மருத்துவரும்கூட. பொதுவாக mysticகளுக்கு புறவுலகும் அகவுலகும் வெவ்வேறாக இருப்பதில்லை, இல்லையா?
இந்தக் கவிதையில் அவர் தனி மனித மீட்சியைப் பேசுகிறார் என்று நினைக்கிறேன். பறையொலி இசைப்பது வாழ்பவர்களுக்காக, இல்லையா? அது இறந்தவர்களை மட்டுமல்ல, நம்மையும் வாழ்வை நோக்கி அழைக்கிறது.
மேலும் படிக்க:1. பதிவு
                       2 .நடுப்பனிக்காலம்
                       3.http://djthamilan.blogspot.com/2011/11/blog-post_16.html
********************
சில சேர்க்கைகளுடன் மீள்பதிவு.முதல் பதிவிட்டது:கள்ளிப்பெட்டி
நன்றி :நட்பாஸ்

Sunday, August 7, 2011

-கிணற்றுத்தவளைகள்-


கிணற்றில் தவளைகளின் உலகம் பரபரப்பாக இருந்தது.அதற்குக்காரணம் கிணற்றின் சொந்தக்காரவீட்டுக்கு வந்திருக்கிற புதுமருமகள்!
எல்லாத் தவளைகளும்அவளைப்பற்றித்தான்,வியப்பாகப்பேசிக்
கொண்டிருந்தன.

மாரி முடிந்து கோடையேறிக்கொண்டிருந்ததால் கிணற்றின் நீர் வற்றத்தொடங்கியிருந்தது.மாரிக்குள் பிறந்த பல இளந்தவளைகள் அங்கிருந்தன.ஒரு கிழட்டுத்தவளை நீண்டகாலமாக அங்கிருக்கிறது.
அந்த கிழட்டுத்தவளை பேச்சுக்களையெல்லாம் கேட்டுக்கொண்டு ஒரு மூலையாக நீரில்தொங்கிக்கொண்டிருந்தது. அதற்கு இப்போதெல்லாம் சரியாகப்பார்வைதெரிவதில்லை. கேட்குந்திறன் கூடக்குறைந்து வரத்தொடங்கியிருந்தது.

அந்தக்கிணறு ஆழமானது.தண்ணீரும் நிறையவே இருந்தது.சுவர்கள் பொழிந்த கற்கள் அடுக்கப்பட்டு கட்டப்பட்டவை.சில கற்களின் இடுக்குகளின் இடையில் இருந்து செடிகள் முளைக்கும்.. அழிந்து போகும். கிணற்றில் இறங்குவதற்கு
சுவரிலிருந்து நீட்டியபடி நடுவில் துவாரத்துடன் பல படிக்கற்கள் மேலிருந்து கீழிறங்கி நீரில் மறைந்தன. இந்தப்படிக்கல்லில் ஏறித்தவளைகள் குதிக்கின்ற சத்தம் கிணற்றின் சுவரில் எதிரொலித்துக்கொண்டிருக்கும்.கிணறு வளவின் பின்மூலையில் இருந்தது.வளவைச்சூழ இரண்டாள் உயரமதில் எழுப்பப்பட்டிருந்தது.

வழமையாக அந்த வீட்டுக்காரர்கள் அமைதியானவர்கள்.அதிகம் பேசுவதில்லை.அவசர அவசரமாக தண்ணீரள்ளி ஊற்றிவிட்டு வீட்டுக்குள் ஓடுவார்கள்.வீட்டில் இரண்டு பையன்களும் ஒரு பெண்ணும். பையன்கள் ஒரே தோற்றமானவர்கள். பெண் கொஞ்சம் குள்ளமானவள். வருவார்கள் போவார்கள் கூடி நின்று பேசிக்கொள்வதில்லை. விருந்தாளிகள் என்று யாரும் வருவதில்லை.வீட்டுக்காரருக்கு தடித்தமீசையோடு தடித்த குரலும். பல்விளக்கும் போது அடித்தொண்டையில் கைவிட்டு அவர் ஓங்காளம் செய்கிற போது பல தவளைகள் பயந்துபோய் நீருக்குள் மூழ்கி அடிக்குச்சென்றுவிடும்.. சிலவேளைகளில் வீட்டுக்காரார் கோபத்தில் கத்தித்திட்டுவதும் கேட்கும்.இறுகிப்போனமுகத்தோடுதான் ஏதோ யோசனையில் இருப்பவர்களாக நீரள்ளுவார்கள் . வீட்டுக்காரம்மா மாத்திரம் நீண்ட நேரம் கிணற்றடியில் நிற்பாள்.கப்பியை மெதுவாக உருட்டி வாளியை கீழேவிடும்போது அவளுடைய தடித்த கைகளும் உருண்டை முகமும் தெரியும். அவள் கூடச்சிரிப்பதில்லை பொம்மைபோலத்தெரிவாள்.தவளைகள் அவளுடைய பிரசன்னத்தைப்பொருட்படுத்துவதில்லை. வாளி நீரில் மோதும்போது விலகியிருப்பதில் கவனமாக இருந்துகொள்வார்கள்.

கிணற்றின் நீர்மட்டத்தில் இருந்து பார்க்கிறபோது கிணற்றின் விளிம்பு  மேலாக வானம் வட்டமாகத் தெரியும் கிண்ணற்றைச்சூழ நிறைய மரங்கள் நின்றுகொண்டிருந்தன.அவற்றின் கிளைகள் நீளுகிறபோது சிறு இலைகளும் பூச்சிகளும் கூட நீரில் விழும்.அப்படி விழுவது தவளைகளுக்கு கொண்டாட்டமாயிருக்கும்.
ஆனால் மூத்த தவளைகள் இது அழிவின் அறிகுறி என்று சொல்வார்கள்.
கிளைகள் நீளும்போது வீட்டுக்காரர் ஆட்களை வைத்து அவற்றை வெட்டி அகற்றி விடுவார்.
வானம் தெளிவாயிருக்கிறபோது சூரியவெளிச்சம் சிலவேளைகளில் நீரைத்தொடும்.உத்தராயண காலத்தில் சூரியனைக்காணலாம் என்று சில மூத்த தவளைகள் சொல்லியிருக்கின்றன. சில வேளைகளின் கிணற்றின் சுவரோரமாக நின்று பார்க்கிறபோது நிலவைக் காணக்கூடியதாயிருந்திருக்கிறது. அதுவும் தண்ணீர் நிறைந்த மாரிகாலத்தில்தான் சாத்தியாமாகியிருக்கிறது.
ஆனால் அந்தக்கிழட்டுத்தவளை மூன்று முறை முயன்று நிலவைப்பார்த்திருக்கிறது.அது ஒரு சாகசக்கதை. நிலவு பார்த்தகதைகளை கிழட்டுத்தவளை சொல்ல இளந்தவளைகள் ஆச்சரியமாக கேட்டுக்கொண்டிருக்கும்.

நட்சத்திரங்களும் முகில்களும் மழைகளும் நீரில் நடக்கும் பூச்சிகளும் தவளைகளுக்கு நண்பர்களாக இருந்தன.வெயில் உயருகிறபோது சுவரில் விழுகிற கோலங்களை தவளைகள் பார்த்து ரசிக்கும்.
மழை நாட்கள் மிகவும் கொண்டாட்டமானவை.தவளைகள் சேர்ந்து பாடுவதும் உண்டு. 
கோடையோடு வருகிற அசதி எங்கும் சூழ்ந்திருந்தபோதுதான்  புது மருமகள் வந்து சேர்ந்தாள்.
அவள் மற்றவர்களைப்போல இருக்கவில்லை.காலில் சலங்கை அணிந்திருந்தாள்.கைகளில் நிறைய தங்கவளையல்கள் அணிந்திருந்தாள். குழந்தை போல ஒரு துள்ளல் அவளிடமிருந்தது.அவளுடைய கலகலவென்ற பேச்சும் சிரிப்பும் கிணற்றின் சுவர்களில் எதிரொலிக்கத்தொடங்கியது. இன்னும் புதுமணப்பெண்ணாயிருந்ததால் நகைகளை தொடர்ந்தும் அணிந்திருந்தாள். காதுகளில் சிமிக்கிகள் ஆடிக்கொண்டேயிருக்கும். கழுத்தில் புதுத்தாலி மின்னிக்கொண்டிருக்கும்.
புதுத்தம்பதிகளுக்கு வளவின் மூலையில் இருக்கும் மரங்கள் சூழ்ந்த கிணற்றடி தனிமைப்பிரதேசமாக இருந்தது.செல்லப்பேசுக்களும் சிணுங்கல்களும் சிரிப்பொலிகளும் சலங்கைச்சத்தமும் காப்புகளின் குலுங்கல்களும் கிணற்றுத்தவளைகளுக்கு புதுமையாயிருந்தன குதூகலத்தை அளித்தன. அவளுடைய நகைகளில் வெயில் பட்டுமின்னித்தெறிப்பதை  திறந்தவாய் மூடாது தவளைகள் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும்.

குளிக்கும் நேரங்களில் தலைமுடியை உயர்த்திக்கட்டியிருப்பாள். அவள் நல்ல நிறம். சிலவேளைகளில்அடர்ந்த நீண்ட கருமையான கூந்தலை விரித்துதோள்களில் படரவிட்டிருப்பாள்..சிமிக்கிகள் அசைய அவள்வெள்ளைப்பற்கள் தெரியும் சிரிப்பு மின்ன நீரிலிருந்து பார்க்கும்போது தவளைகளுக்கு அவள் முகம்,   இரவுவானத்தில் நட்சத்திரங்கள் சூழ்ந்து பிராகாசிக்கும் நிலவுபோலத்தோன்றும் 

கணவன் வீட்டிலில்லாத நேரங்களில், கோடைவெயில் ஏறும்போது மருமகள் குளிர்மைக்காக கிணற்றுக்கட்டில் உட்கார்ந்திருப்பாள்.
கிணற்றை எட்டிப்பார்த்து தெரியும் தன்பிம்பத்தை,பார்த்துக்கொண்டிருப்பாள்.பிம்பத்துக்கு பழித்துக்காட்டுவாள்.
கூவி அழைத்து கிணற்றில் எதிரொலிக்கும் குரலைக்கேட்டு ரசிப்பாள்.பிம்பத்தோடு பேசவும் செய்வாள்.
தம்மோடு பேசுவதாக தவளைகள் நினைத்துக்கொள்ளும் நீர்மட்டத்தில் எல்லாத்தவளைகளும் கூடிநின்று பிரமிப்போடு கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டுமிருக்கும்

 வீட்டின் மூத்தபையன் அதுதான் அவளது கணவன் அவனும் மாலைநேரங்களில் அவளோடு சேர்ந்து கொள்ளுவான்.கப்பி மரத்தையோ பழைய துலாக்கட்டையோ பிடித்துக்கொண்டு நிற்பான்.முன்பெல்லாம் இறுக்கிப்போனமுகத்தோடு கிணற்றினுள் தெரியும் அவன் முகம் இப்போது பிரகாசமாய் சிரிப்புத்தெறித்தபடி தோன்றும்.
அப்போது அவள் பாடவும் செய்வாள். அவளுக்கு அழகான குரல்.
கிணற்றினுள் கால்களைத்தொங்கவிட்டுக்கொண்டும் அவள் உட்கார்ந்திருப்பதுண்டு.சலங்கையணிந்த கால்களை கிணற்றுச்சுவரோடு தாளத்தோடு மோதும்போது இதுவரை தவளைகள் அறிந்திராத இனிய நாதத்தால் கிணறு நிறையும்.சின்ன ரேடியோப்பெட்டி ஒன்றை கிணற்றுக்கட்டில் வைத்து பாடவிட்டபடி அவள் குளிப்பதுமுண்டு..அதிலிருந்து எழும் சங்கீதமும் அதிர்வுகளும் கிணற்றை நிரப்பி தவளைகளை மயங்கச்செய்யும்.

ஒரு முறை அவள் கிணற்றுக்கட்டில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்துப்பார்த்துக்கொண்டிருந்தாள். மாலைச்சூரிய வெளிச்சத்தை அதில் பிரதிபலித்து கிணற்றினுள் பாய்ச்சினாள்.அது விளிம்புள்ள கண்ணாடி. கிணற்றினுள் ஒளி வண்ணங்களாய்ப்பிரிந்தது.கிணற்றுத்தவளைகள் முதன் முதலாய் வானவில்லை கண்டன.

இப்படி சட்டென்று தம்வாழ்வு வசந்தமானதைப்பற்றி தவளைகள் ஓயாது பேசிக்கொண்டிருந்தன.கிணறெங்கும் ஒரு குதூகலம் நிலவியது. இளந்தவளைகள் துள்ளித்திரிந்தன மகிழ்ச்சியோடு. தண்ணீர் வற்றி எட்டாமல் போய்விட்ட படிக்கல்லுக்கும் சில உற்சாகத்தவளைகள் பாய்ந்தேறி சாகசம் புரிந்தன.அந்தப்படியிலிருந்து பார்க்கிறபோது நிலவு முகம் கிட்டத்தெரியும்,நாதங்கள் துல்லியமாகும் என்பது இளந்தவளைகளுக்கு ஒரு சாதனையாகப்போனது.

எல்லாப்பேச்சுக்களிலும் உற்சாகத்திலும் இந்தக்கிழட்டுத்தவளையால் பங்கெடுக்கமுடியவில்லை.அதற்கு அந்தப்பெண்ணைப் பார்க்கமுடியவில்லை.ஒரு மட்டத்துக்கு அப்பால் எல்லாமே பாசிபடர்ந்தாற்போலத்தான் தெரிந்தது.வானங்கூட நீலநிறப்பாசி.சங்கீதங்கள் பேச்சொலிகள் கூட காதில் விழாமல் யாரோ உறிஞ்சிக்கொண்டுவிடுகிறார்கள் போலிருந்தது.

அது நீர்மட்டத்துக்கு சில அங்குலங்கள் உயர்வாயிருந்த ஒருபடிக்கல்லில் ஏறி ஒரு நாள் முழுக்க உட்கார்ந்துகூடப் பார்த்தது.அதன் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை.காதுகள் ஒலிகளைக்குழைத்துக்கொண்டிருந்தன,

மற்றைய தவளைகளுக்கு வாழ்வின் மாற்றம் தொடர்ந்து கொண்டாட்டமாய்த்தான் இருந்தது.தவளைகள் அந்தப்பெண்ணுக்கு தங்கநிலவு என்று செல்லப்பயர்ச்சூட்டியிருந்தன. 
அவள் சலங்கையொலியைகேட்கிறபோது, காதுக்கூர்மையுள்ள ஒரு தவளை நிலவு வருகிறது என்று பரபரப்பாய் குரல்வைக்கும்.மூழ்கியிருக்கிற தவளைகளும் நீர்மட்டத்துக்கு வந்துவிடும். எல்லோரும் நீரின் எதிர்பக்கமாகப்போய் அவளுடைய முகத்தை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
  
கிழட்டுத்தவளைக்கு நாளுக்கு நாள் விரக்தியும் கோபமும் அதிகரித்தது.
‘நிலவு என்று அந்தப்பெண்ணை யாரும் சொல்லக்கூடாது.’’ 
ஒரு முறை அடக்கமாட்டது அது உரத்த குரலில் சொன்னது.

”நான் நிலவைப்பார்த்திருக்கிறேன் அதன் அழகு எனக்கு மாத்திரந்தான் தெரியும். நீங்கள் யாருமே நிலவைப்பார்த்ததில்லை”

அது கிணற்றுள் பெரும்வாதங்களைக்கிளப்பிவிட்டது.

’நீரும் இந்தப்பெண்ணின் முகத்தைப்பார்த்ததில்லை பார்த்துவிட்டுச்சொல்லும் அதன் பிறகு சொன்னால் ஏற்றுக்கொள்ளுகிறோம்’’
என்றன இளந்தவளைகள் இறுதியாக.

கிழட்டுத்தவளையால் பதில் சொல்லமுடியவில்லை.
பெண்ணைப்பார்க்கவேண்டுமென்ற ஆவல்கட்டுக்கடங்காததாய் ஒரு தன்மானத்துக்கான சவால் போல அதன் முன் எழுந்தது.

துள்ளும் வயதில் கிழட்டுத்தவளை துணிந்த பொல்லாத தவளையாயிருந்தது. மூன்று முறை வாளிக்குள் குதித்து மேலேறி நிலவைப்பார்த்துவிட்டு மீண்டு வந்திருந்தது.அது ஒரு அசாத்தியமான சாதனை.அன்றிலிருந்து இன்றுவரை  அது கிணற்றினுள் கம்பீரமாக உலவிக்கொண்டிருந்தது.
இன்றும் அந்தத்துணிச்சல் மீதமிருந்தது.ஆனால் உடல் தளர்ந்துபோய்விட்டிருந்தது. இளந்தவளைகளின் எதிர்விவாதம் அதனை உசுப்பேற்றியிருந்தது.இரவு முழுவது அது உறங்கவில்லை.

விடிந்து சந்தடியடங்கியபோதுதான் மருமகள் கிணற்றடிக்கு வந்திருந்தாள்.மார்புக்குக்குறுக்காக பாவாடையைக்கட்டியிருந்தாள் தலையைவிரித்துவிட்டிருந்தாள்.எல்லாத்தவளைகளும் எதிர்ப்புறமாக நின்று அவளைப்பார்த்துக்கொண்டிருந்தன.அவள் மார்பில் அணிந்திருந்த ஒரு பதக்கம் மின்னிக்கொண்டிருந்தது.

கிழட்டுத்தவளை வாளி தண்ணீரோடு மோதுமிடத்துக்கருகில் நீந்திச்சென்று அடுத்த வாளிக்காகக்காத்துக்கொண்டிருந்தது.அதற்கு எந்த இடத்தில் நின்றால் வாளிக்குள் தாவலாம் என்ற கணிப்பு தெரியும்.
வாளி நளினமாக இறங்கிவந்தது.அப்படித்தான் அவள் நீரள்ளுவதை தவளைகள் பேசிக்கொள்ளும்.அந்தப்பெண் தண்ணீருக்கும் நோகாமால் வாளிக்கும் நோகாமால் நீரள்ளுவாள் என்று.

முதலில் மற்றத்தவளைக்களுக்கு கிழட்டுத்தவளையின் நோக்கம் புரியவில்லை.
அவைகள் இந்தச்சாகசம்பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றன. பார்த்ததில்லை.
எதிர்பார்க்கவுமில்லை.வழமைபோல கிழட்டுத்தவளை ஒதுங்கிப்போகிறது என்று நினைத்தார்கள்.

கிழட்டுத்தவளை வாளிசரிந்து நீர் நிரம்பும் வரை காத்திருந்தது.வாளி நிமிரும்போது பாய்ந்து ஏறிக்கொண்டது.அதனால் வாளியினுள்ளே சட்டென்று குதிக்கமுடியவில்லை வாலியின் விளிம்பைப்பற்றி தொங்கிக்கொண்டிருக்கத்தான் முடிந்தது. அது பதற்றமடையவில்லை.வயது போய்விட்டது என்று தனக்குள் சொல்லிக்கொண்டது.

வாளி தவளையோடு வேகமாக மேலெறியது. 
எல்லாத்தவளைகளும் மூச்சடைத்துப்போயிருந்தன.கண்கள் விரிய அண்ணாந்து தொங்கிக்கொண்டிருக்கும் தவளையைப்பார்த்துக்கொண்டிருந்தன.

மருமகள் வாளியை இழுத்து வெளியில் எடுத்தபோது அதன் வெளி விளிம்பில் கண்களைவிரித்து அவளை உற்றுப்பார்த்தபடி மூச்சிரைத்தபடி தொங்கிக்கொண்டிருந்த அசிங்கமான ஒரு தவளையைக்கண்டாள்.

திடுக்கிட்டு கைகளை உதறி வாளியை கிணற்றினுள் எறிந்து ஓவென்றலறியபடி பின்வாங்கி அழுதுகொண்டு வீட்டை நோக்கி ஓடினாள்.

கப்பி சுழல வாளி கிணற்றுள் வேகமாக இறங்கிச்சுவரில் மோதி நீர் சிதற பெரும் சப்தத்துடன் நீரில் மோதி மூழ்கியது. தவளைகள் பதகளித்து சிதறிப்பாய்ந்தன.நீரில் முழ்கி மறைந்தன.

கிழட்டுத்தவளை மறுநாள் மல்லாந்தபடி நீரில் மிதந்தது.

கிணற்றைக்கலக்கி இறைத்தவர்கள் வீட்டின் புதுமருமகள் தவளைகளுக்கு பயம் என்று பேசிக்கொண்டார்கள்

மாரி நெருங்கிவிட்டது.  இப்போதெல்லாம் மருமகள் ஏதோ யோசித்தபடியேதான் தண்ணீரள்ளுகிறாள்.
மாலை நேரங்களில், கிணற்றுக்கட்டில் தனித்திருந்து அழுதுகொண்டிருக்கவும் தொடங்கியிருக்கிறாள்.

ஆனால் அவள் அழுவதை எந்தத்தவளைகளும் பார்த்துக் கொண்டிருப்பதில்லை.
ஏனென்றால் கிணறு கலக்கி இறைக்கப்பட்டபோது ஒரு தவளை கூட தப்பவில்லை. மாரிக்கு மீண்டும் புதிதாய்த் தவளைகள் வரும்.
              
                  o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o

Wednesday, June 29, 2011

வெள்ளம்


இணையத்தைத்திறந்தேன்.எழுதத்தொடங்கினேன் பதிவின் முதலாவது வாக்கியம்’வேதாளம் முருங்கை மரத்தில் மீண்டும் ஏறிக்கொண்டது’’ விசைப்பலகையை அழுத்த கணனித்திரையில் எழுத்துக்கள் எழுந்தன.

அப்போது சுந்தரராமனின் கால் வந்தது. அவனோடு நிறையவும் பேசவில்லை. அவன் வள வள. எனக்குப்பேசுவதை விட எழுதினால்பிடிக்கும்.அவன் சொன்னதற்கு சரி என்று பேச்சை முறித்து கைபேசியை அணைத்துவிட்டு கணனித்திரையைப்பார்த்தேன் அடித்த வாக்கியத்தை காணவில்லை.
கைதவறி அழித்துவிட்டேனோ என்று நினைத்துக்கொண்டு ‘’வேதாளம் முருங்கை மரத்தில் மீண்டும் ஏறிக்கொண்டது ’’என்று மீண்டும் அடித்தேன் .

வார்த்தைகள் கணணித்திரையில் தோன்றின. எழுத்துக்கள் தங்கவில்லை. பூக்களைப்போல உதிர்ந்து விழுந்தன.
அப்பொழுதான் கவனித்தேன்.முதலாவது வாக்கியத்தின் எழுத்துக்கள் விசைப்பலகையிலும் கணனிக்கு அடியிலும் சிதறிக்கிடந்தன. ஆச்சரியமாக இருந்தது . ‘க’ என்று அழுத்தினேன். எழுத்துத்தோன்றி மீண்டும் வெளியில் விழுந்தது.

விழுந்திருந்த எழுத்துக்களில் ஒன்றை சுட்டுவிரலினால் வருடிப்பார்த்தேன் மிருதுவாக இறகைப்போல இருந்தது.வழுக்கவும் செய்தது.பாகுபோலவும் இருந்தது.திண்மம் திரவம் பாகு இப்படி நான் இதுவரை அறிந்த பொருட்களுக்கப்பாற்பட்ட கலவையான விசித்திரத்தன்மையோடு இருந்தது.
விழுந்த எழுத்தை விபரிக்கவேண்டுமென்றால் எந்தவார்த்தையைப்பயன்படுத்துவது என்ற வினா இயல்பாக மனத்தில் எழுந்தது.
என் பதிவின் பக்கங்களை திறந்தேன் பாத்திர அடுக்குகளிலிருந்து தவறுதலாகச்சரிந்த அரிசிப்பாத்திரத்திலிருந்து  கொட்டுகிற அரிசி போல எழுத்துக்கள் கணனித்திரையிலிருந்து கொட்டி மேசை விசைப்பலகை குவிந்து தரையிலும் சிந்தின.
எங்கும் கருகிய வாசனை ஒன்று பரவியது.
எழுத்துக்கள் வடிந்து என் பதிவு வெற்றுத்தாளாகக்கிடந்தது.

என்ன நடக்கிறது என்று எனக்குப்புரியவில்லை . இன்னொரு பதிவின் பக்கத்தைத்திறந்தேன்.அந்தப்பதிவிலிருந்த எழுத்துக்களும் கொட்டுண்டன. இப்போது அறையெங்கும்  சுகந்தம் பரவியது.
விசைப்பலகையை கையிலெடுத்து எழுத்துக்கள் எல்லாவற்றையும் உதறிக்கொட்டினேன்.
எனக்குத்தெரிந்த எல்லாப்பதிவுகளையும் ஒவ்வொன்றாக திறக்கத்தொடங்கினேன்.
ஒவ்வொருபக்கங்களிலிருந்தும் எழுத்துக்கள் விதம்விதமாக வெளியில் விழுந்தன.தெறித்து விழுந்தன.அறுந்துவிழுந்தன. பாப்கார்ன் போல வெடித்துப்பறந்தன புழுதி ,பூச்சு போல உதிர்ந்தன. இறகுபோல காற்றில் தவழந்து வந்தன.வாக்கியங்கள் கொத்தாக விழுந்து சிதறின.கோலிக்கொண்டுகள் போல உருண்டோடின. ஜவ்வு போல இழுபட்டு விழுந்தன.
பதிவுகளையும் பக்கங்களையும் திறக்க எழுத்துக்கள்   கொட்டுவதும் தாள்கள் வெறுமையடைவதும்
எனக்கு எல்லையில்லாத ஒரு கிளர்ச்சியைத்தந்தது.எழுத்துக்கள் விழுவது அனுபவித்திராத அனுபவம் வெறிகொண்டவனாக பக்கங்களைத்திறந்துகொண்டேயிருந்தேன். விதம் விதமான எழுத்துக்கள் தொடர்ந்து  குவிந்து கொண்டேயிருந்தன.
எழுத்துக்கள் வெளியில் உதிர்ந்து பரவ கூடவே எழுந்த வாசனைகள் மாறிக்கொண்டேயிருந்தன. பக்கங்களுக்கேற்றவாறு நறுமணத்திலிருந்து முடை நாற்றம் ,அழுகிய எலி,மலச்சிக்கல் குசு,புளித்த கள்ளு, சாக்கடை,இரத்தம் ,பிணம்   இப்படி வாழ்வின் அறையெங்கும் நறுமணமும் நாற்றமும் பரவிக்கொண்டேயிருந்தன..ஒரு கட்டத்தில் நான் நுகர்வுத்திறனை  இழந்துவிட்டிருந்தேன்.
பலவித வண்ணங்களில் இருந்த  எழுத்துக்கள் சில வெதுவெதுப்பாக கதகதப்பாக இருந்தன.சுடச்சட ஆவிபறக்க வந்து விழுந்த எழுத்துகளும் இருந்தன. குளிர்ந்தபடி பனிபடர்ந்தபடி குளிர்வீசி வெம்மைபரப்பி எழுத்துக்களின் வகைகளில் நான் என்னனை மறந்துபோயிருந்தேன்
காற்றில் தவழ்ந்த எழுத்து என் மூக்குக்குள் புகுந்துகொண்டபோது தும்மல் வந்து விட்டது.பலமான தும்மல் .எச்சிலில் நனைந்தபடி எழுத்துக்கள் என்னைச்சுற்றி சுழன்றன.
அப்போதுதான் இந்த மயக்கத்திலிருந்து விடுபட்டு  அவதானித்தேன்.

அறை எழுத்துக்களின் மூட்டத்தால் நிறைந்திருந்தது.தூசைப்போல சாம்பலைபோல எங்கும் எழுத்துக்கள்படர்ந்திருந்தன. அறையில் எழுத்துத்தேங்கத்தொடங்கியிருந்தது.

மனக் கிளர்ச்சி சட்டென்று வடிந்தது.கொஞ்சமாக பயம் எட்டிப்பார்த்தது.நான் அறையைவிட்டு வெளியேற நினைத்து. எழமுயன்றேன் முடியவில்லை.கால்கள் எழுத்துகளினுள் புதைந்திருந்தன.கட்டிப்போடும் எழுத்துக்கள்.

உடல் விதிர்விதிர்த்துப்போனது..நெஞ்சுபடபடத்து வியர்க்கத்தொடங்கியது. என்வியர்வையில்  எழுத்துக்கள் ஒட்டத்தொடங்கியிருந்தன.நெஞ்சின் படபடப்போடு எழுத்துக்களும் சேர்ந்து அதிர்ந்தன. மூச்சை வேகமாக இழுக்க எழுத்துகள் நெருங்கிவந்தன.கைகளை அசைத்து  எழுத்துக்களை விலக்கிக்கொண்டே கைபேசியைத்தேடினேன் கைபேசியைக்காணவில்லை எழுத்துக்குள் மறைந்துவிட்டிருந்தது.

விசைப்பலகை இழுத்து மீண்டும் உதறி எழுத்துக்களை ஒதுக்கித்தள்ளிவிட்டு நடுக்கத்தோடு வேகமாக அடித்தேன்.கூகுள் திறந்துவிட்டது.

நான் கூகுளைத்திறந்திருக்கக்கூடாது.

அது திறக்கக்கூடாதகதவு. திறந்ததுதான் தாமதம் எழுத்துக்கள் மிகவேகமாக கணனியிலிருந்து சொரியத்தொடங்கின.கோடிக்கணக்க்கான விதம்விதமான உலகின் எல்லாமொழிகளிலுமிருக்கும்  எழுத்துக்கள் ஸ்ஸ்ஸ் என்ற ஒரு வகை டிஜிட்டல் இரைச்சலோடு கணனியின் திரையிலிருந்து பாயத்தொடங்கின

எழுத்துக்கள் அறையில் நிறைந்து உயர்ந்து  யன்னல்கள் வழியே வழிந்து ஆறாகி வெளியே ஆறு போல ஓடின.அறையெங்கும் வண்ணமயமாக  எழுத்துக்கள் மேலும் பரவி படர்ந்து அடர்ந்தன

என்னைச்சுற்றி  எழுத்துக்கள் சுழிகொண்டு சுழலத்தொடங்கின. நான் மூழ்கிக்கொண்டிருந்தேன்.மூச்சோடு எழுத்துக்கள் உட்சென்று வெளிவந்துகொண்டிருந்தன. படர்ந்தும் மூச்சோடு ஊடுருவியும் எழுத்துக்கள்  என் உடலெங்கும் பரவத்தொடங்கியிருந்தன.
’எழுத்துக்களில் என்னைத்தேடுங்கள்’ என்று எழுதவேண்டும் போல கடைசிக்கணத்தில் எனக்குத்தோன்றியது 


0o0o0o0o0o0o0o0o0

Tuesday, April 26, 2011

ஆஸ்திரேலியா மூலக்குடிகள் -காலம் கற்றுத்தந்த பாடம்!


மருத்துவமனையின் அறையில் அருகிலிருந்த பாகிஸ்தானிய டொக்டரோடு பேசிக்கொண்டிருந்தபோது ஓய்வுக்குப்போயிருந்த கணினி சிலிர்த்துக்கொண்டது

ஆஸ்திரேலியாவின் மூலக்குடிகளுக்கும்-(அபொரிஜனிஸ்-Aborigines) மற்றையவர்களுக்குமான இடைவெளியை நிரப்புதல் என்ற இலட்சியம் சித்திரிக்கப்படுகிற ஸ்கிரீன் சேர்வர் திரையில் தோன்றி அசையத்தொடங்கியது

மூலக்குடி ஆஸ்திரேலியர்கள், உடல்நலத்தில் மற்றையவர்களை விட பத்து ஆண்டுகள் மேலாக பின்தங்கியிருக்கிறார்கள்(உடல்நலத்தில் மாத்திரமல்ல).அதை இட்டு நிரவுவதற்காக அரசு முயன்று வருகிறது.

மூலக்குடி ஆஸ்திரேலியர்களுக்கான சுகநலத்திட்டங்களில் முக்கியமான அங்கமாக சுகாதாரப்பணியாளர்களுக்கு மூலக்குடிகளின்  பாரம்பரியம், பண்பாடு, ,அவர்கள் கடந்து வந்த கொடூரமான வரலாறு உள்ளடங்கிய ஒரு பயிற்சி நெறி வகுக்கப்பட்டிருக்கிறது.

1770 களில் இருந்து வெள்ளையினத்தவர் குடியேறிய நாள்களில் இருந்து மூலக்குடிகள் தொடர்பாக வேறுபட்ட அணுகுமுறைகளை கையாண்டு வந்திருக்கிறார்கள்.
300000 முதல் மில்லியன் எண்ணிக்கையாக இருந்த மூலக்குடிமக்களின் எண்ணிக்கை 1920 களில் 60000 ஆக குறைந்து விட்டிருந்தது.
நிலத்துக்கான போராட்டத்தில் துப்பாக்கிகளுக்கெதிராக ஈட்டிகளால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை.படுகொலைகளைத்தவிர குடியேற்றக்காரர்கள் கொண்டுவந்த நோய்களும் திணிக்கப்பட்ட வாழ்க்கைமுறைகளும் உயிரிழப்புகளுக்கு பங்களித்தன.
இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த ,மண்ணை தம்மில் ஒரு பகுதியாக கருதிய அவர்களின் இன்றைய பிரச்சினைகளுக்கு காரணமாக கூறப்படுவது Dispossession பறிகொடுத்தமை என்கிறார்கள்.

ஆஸ்திரேலியர்கள் தேசத்தினை முழுமையாக்குவதற்கு இவர்களின் துயரத்தை நூற்றாண்டுக்காலமாய் தொடர்ந்து வருகிற இடைவெளியை எவ்வாறு நிரப்புவதென்று சிந்தித்திருக்கிறார்கள்.பல நூல்கள் உண்மைகளை நேர்மையாக வெளிப்படுத்தி வெளிவந்திருக்கின்றன. ஆய்வுகளும் அப்படியே.
.
அதன் விளைவாக நடந்த கொள்கை மாற்றங்களால் உருவான இந்த மூலக்குடிகளுக்கான வைத்தியசேவைக்கான பயிற்சித்திட்டத்தில் வரலாற்றுப்பாடம் இப்படித்தொடங்குகிறது

‘’ஆஸ்திரேலியாவுக்கு மூலக்குடி மக்கள் குடியேறிவாழத்தொடங்கிய காலம் ஒரு மணித்தியாலமாக( நாற்பதாயிரம் வருடங்களாகிறது)  இருந்தால் , பகிர்ந்து கொள்கிற குடியேற்ற(ஆங்கிலேயர்)காலம்  19 செக்கன்கள் தான்.”


மூலக்குடிகள் நாற்பதாயிரம் வருடங்களாக வாழ்கிறார்கள்.ஆங்கிலேயர் குடியேறி 209 வருடங்களாகிறது.

750 விதமான குழுக்கள்,250 மொழிகள், 40000 வருடங்கள்

கற்பிக்கப்படும் இந்த வரலாறு மூலக்குடிகளின் இழப்பின் பிரமாண்டம் பற்றி மீண்டும் மீண்டும் வலியுறுத்திச்சொல்வதுடன்
காலப்போக்கில் ஆஸ்திரேலிய அரசு கடைப்பிடித்து வந்த கொள்கைகளையும் அதன் விளைவுகளையும் விளக்கிச்செல்கிறது.

ஆரம்பத்தில் அபொரிஜன்களை விரட்டி ஒதுக்கிவைத்தார்கள்.காலப்போக்கில் உள்வாங்கிக்கொள்ளும் சேர்த்துக்கொள்ளும் முயற்சிகளை(Assimilation) கலாச்சார மாற்ற முயற்சிகளை செய்தார்கள்.விளைவுகள் எதிர்மறையாகவே இருந்தன. திருடப்பட்ட தலைமுறை(stolen generations) ஒன்று உருவாகியது

உலக சுகாதார தாபனத்தின்(WHO) ஆரோக்கியம் என்பதன் வரைவிலக்கணம் ஒருவரின் உடல், உள ஆரோக்கியத்தோடு ,சமூகத்தில் அவருடைய ஆரோக்கியமான நிலை என்பதாகும்.
இது ஒரு தனியொருவரின் நலம் பற்றிய கருதுகோள்  தனிநபர் அலகாகாக அணுகுவதிலிருந்து பிறந்தது(individualism)

மூலக்குடிமக்களுக்கான ஆரோக்கியமென்பது உடல் உள சமுக ஆரோக்கியத்தோடு உணர்வு, ஆன்மீக ,கலாச்சார பண்பாடு என்பவற்றை உள்ளடக்கி முழுச்சமுகத்தின் ஆரோக்கியம் என்று விரிவான கருதுகோளாக்கப்பட்டிருக்கிறது.
காரணம் மேலைத்தேயச்சிந்தனைகளின் அடிப்படையிலான தனிநபர் அணுகுமுறைகள் மூலக்குடிகளுக்கு பொருத்தமானதாக இல்லை என்பதாகும்.
அவர்கள் ஒரு சமூகக்குழுவாக இயற்கையோடு ஒன்றி வாழ்ந்துவந்தவர்கள்.நிலத்தோடும் பாரம்பரியத்தோடும் சகமனிதர்களோடுமான அவர்கள் பிணைப்பு தனித்துவமானது.
அவர்களுடைய கலாச்சாரத்தின் வழி ஒருவர் நோய்வாய்ப்படும்போது ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தவேண்டுமென்றால் அவரை மாத்திரம் அணுகினால் போதுமானதல்ல.அது எந்த மாற்றத்தினையும் ஏற்படுத்தாதென்பதாகும்
குடும்பத்தலைவர், சமுகத்தலைவர் பெரியவர்கள் என்ற ஒரு வட்டத்தினூடாக அணுகவேண்டும்.
அவர்களுடைய அடையாளம் கலாச்சார நம்பிக்கைகளினூடாக அணுகவேண்டும் என்பதாகும்.
உள்வாங்குதல் –assimilation என உருவாக்கப்பட்ட கொள்கைகளால் மூலக்குடிச்சிறுவர்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ‘’நாகரிகம்’’ கற்பிக்கப்பட்டது.
அதன் விளைவுகளை, தன் இயல்பான கலாச்சாரத்திலிருந்து பிரிக்கப்பட்டு சுய அடையாளத்தை இழத்தலின் விளைவுகளை திருடப்பட்ட தலைமுறைகளின் வழியாக ஆஸ்திரேலிய புரிந்துகொண்டிருக்கிறது.
மண்ணுக்கும் அவர்களுக்குமான உறவின் ஆழமும் அது பறிக்கப்பட்டதன் தாக்கமும் உணரப்படுகிறது

அதுமாத்திரமல்ல தமது சொந்தக்காலில் தம்மைப்பற்றிய திட்டங்களை தீர்மானிக்கவும் செயற்படுத்தவுமான ஆற்றலை தகர்த்தழித்ததன் மூலம் அபொரிஜன்களை பாலண்டா(Balanda) என அவர்களால் அழைக்கப்படும் வெள்ளையின ஆட்சியின் நுகர்வோர்களாக அல்லது உதவித்தொகைகளில் வாழ்பவராக காலப்போக்கில் உருவாக்கிவிட்ட ஆஸ்திரேலிய அரசு கொள்கையளவில் அவர்களை மீண்டும் சுதந்திர உணர்வுடையவராக மாற்ற முனைகிறது.ஒத்து வாழ்தலின் புதிய கண்ணோட்டம் -(Reconciliation)உருவாகியிருக்கிறது.அந்தச்சமூகத்தின் ஆரோக்கியம் அதன் வெளிப்பாடு 

ஆரோக்கியம் என்பது முதலில் தம்மை ஏற்றுக்கொள்வதிலிருந்து தொடங்குகிறது. மூலக்குடி என்கிற அடையாளம் தனித்துவமானது பெருமைமிக்கது.அவர்களுடைய கலைகள் சிந்தனை முறைகள் மதிக்கப்படுவன என்ற உணர்வை அவர்களில் உருவாக்க வேண்டும் அல்லது வழங்கப்படுகிற சேவைகள் அவர்களை அப்படி உணரவைக்க வேண்டும் என்று பயிற்சி நெறி சொல்கிறது
அவர்களுடைய ஆரோக்கியம் அவர்களுடைய சிந்தனை வழிக்கூடாகவே நிகழ்த்தப்படமுடியும். மேலைத்தேயச்சிந்தனை தாம் சரியென்று கருத்துவதை திணிப்பதன் மூலம் அல்ல என்பதை ஆஸ்திரேலியாவின் சுகாதாரக்கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து செயற்பட முனைகிறார்கள். அது முழுச்சமூகத்தையும் ஆரோக்கியமாக மாற்றுகிற செயற்த்திட்டமாக இருக்கிறது.முழுமையான அணுகுமுறை( wholistic) கொண்டதாக இருக்கிறது

பயிற்சி நெறி மேலும் எப்படி மூலக்குடிமக்களுடன் எப்படி புண்படுத்தாத முறையில் ,நல்ல முறையில் உரையாடுவது என்பதையும் கலாச்சார அதிர்ச்சியை (culture shock)விளங்கிக்கொண்டு அணுகுவதையும் சொல்லித்தருகிறது.
‘’அவர்கள் கண்களைப்பார்த்துப்பேசுவதில்லை.
நேரடிக்கேள்விகளை மரியாதைக்குறைவாக கருதுவார்கள்’
நேரம் என்பது பற்றிய அவர்களது பார்வைக்கும் மற்றைய ஆஸ்திரேலியரின் பார்வைக்கும் வேறுபாடு இருக்கிறது.வாழ்வின் செயல்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள் கால அட்டவனைக்கு அல்ல’
இப்படி அவர்களுடைய பண்பாட்டுக்கூறுகளை புரியவைக்கிறது


அதுமாத்திரமல்ல ’அவர்கள் அப்படித்தான் திருத்தமுடியாது’ என்கிற சாக்குப்போக்குகளை நிராகரிக்கிறது

அவர்களுடைய நிலைக்கு அவர்கள் காரணமல்ல என்பதையும் வெள்ளையினத்தவர் வருவதற்குமுன்னர் அவர்கள் தம்மை நிர்ணயித்துக்கொள்கிறவர்களாகத்தான் இருந்தார்கள். பறிகொடுத்தலின் விளைவே இது என்பதை வலியுறுத்துகிறது.
இதனூடாக அவர்களை பழைய நிலைக்குகொண்டு வருவதற்கான பொறுப்புணர்வை மீண்டும் வலியுறுத்துகிறது

இப்படி அந்தப்பயிற்சி நெறி பலவற்றை விபரித்துச்செல்லுகிறது.

அவர்களோடு உரையாடும்போது அவர்களுடைய பண்பாடு கலாச்சாரத்தைப்புரிந்து வைத்திருங்கள். அவர்களுக்குப்பின்னால் ஒரு நீண்ட காயம் பட்ட வரலாறும் அதன் மனத்தாக்கங்களும் இருக்கிறதென்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.அப்போதுதான் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் வெறும் மருந்துகளும் அட்டவணைப்படுத்தப்பட்ட சேவைகளுமல்ல’’-  இப்படி அந்த கல்வி நெறி சொல்வதை சுருக்கமாக சொல்லலாம்..
இலக்குகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அறிவும் தெளிவும் ஊட்டப்படுகிறது. நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தாலும் சட்டங்களும் திட்டங்களும் இதை நோக்கி ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
விளைவைக் காலம் சொல்லும் 
 இரவு, ஆஸ்திரேலிய வரலாற்றுப்புத்தகப்பக்கங்களை புரட்டிக்கொண்டிருந்தேன்.தொலைக்காட்சியில் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது
 தன் நிலமொன்றிலிருந்து அபொரிஜனை வெளியேறச்சொல்லிவிட்டு  நடந்தபடி போலண்டா(வெ.ஆஸ்திரேலியன்) பாடிக்கொண்டிருந்தான்
‘’இந்த நிலம் என்னுடையது ''This Land is mine..............''
எதிர்ப்பக்கமாக பரந்த நிலத்தின் புதர்களுக்கிடையே நடந்தபடி மூலக்குடி ஆஸ்திரேலியன் பாடிக்கொண்டிருந்தான்
’’இந்த நிலம் நான்.  ''This Land is me........''
{பாடல்: '' This land is mine''       One night the moon என்ற ஆஸ்திரேலியத்திரைப்படத்திலிருந்து)}


வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றது.