Saturday, May 1, 2010

நீ,நான் மற்றும் நீரிழிவு!

 ’’அதென்னப்பா இந்த சலரோகம்?..உடம்பிலை எங்கை பிசகு?’’’  என்று கேட்டார் தாத்தா?
தாத்தாவுக்கு நீரிழிவு என்று சொல்லியிருந்தார்கள். அவருக்கு ஒன்றும் பிடிபடவில்லை.
இவன் மருத்துவக்கல்லூரியிலிருந்து வந்திருந்தான்.விறாந்தையில் இருந்து விளக்குமாறு கட்டிக்கொண்டிருந்தான்.
 ’’குளுக்கோசு தெரியுமா அப்பு’’.
 ’’குளுக்கோசு எந்த அலுக்கோசுவுக்கும் தெரியுமடாப்பு’’.
’’சொறியணையப்பு’’
குளுக்கோசு சின்னப்பெட்டிகுள் எல்லாக்கடையிலும் கிடைத்தது. ஒரு காய்ச்சல் ,அல்லது ஒரு விளையாட்டுப்போட்டி என்றால் குளுக்கோசு பெட்டிகள் ஊரில் உலாவும்.

’’நாங்கள் சாப்பிடுகிற பாண் பிட்டு இட்லி தோசை எல்லாம் சமிபாடடைந்து குளுக்கோசாகத்தான் இரத்தத்தில் சேருகின்றன.’’

“ அப்ப வெத்திலைக்கு என்ன நடக்குது” என்றார் இடக்காக.

’’சொல்லச்சொல்லிப்போட்டு பிறகென்ன கிண்டல்.
நீ உவருக்குச்சொல்லி ஒண்டும் நடக்கப்போவதில்லை” என்றாள் பாட்டி அடுக்களையில் இருந்து.
 ’’சரி சொல்லு’’ என்றார் கிழவர்.

’’இந்தக்குளுக்கோசுதான் உடலின் பெற்றோல்.இது இல்லையென்றால் பெற்றோல் முடிஞ்ச  வோட்டப்பம்ப் போல உடல் இயங்காது போய்விடும்.’’
குடலிலிருந்து இரத்தத்தில் கரைந்த குளுக்கோசு உடலுறுப்புகளுக்கு இரத்த வாய்க்காலில் பயணிக்கும்.

வாய்க்காலில் வருகிற தண்ணியை மறிச்சு பாத்தி மாற மண்வெட்டியோடு காத்திருப்பவர் இன்சுலின் என்கிற ஒரு சுரப்பு.

அவர்தான் மூளை தசை என உடல் உறுப்புகளுக்குள் இந்த இரத்தவாய்க்கால் குளுக்கோஸை பார்த்து பார்த்து பாச்சுவார்.

அப்பு அந்த இன்சுலின் அண்ணாச்சி தான் பிரச்சனைக்குரியவர்.

பாத்தி கட்டுகிறா ஆள் பிசகினால் என்ன நடக்குமணை அப்பு’’

’’வாய்க்காலிலை தண்ணி வேகமாவரும் நிரம்பி வாய்க்காலை உடைக்கும்.’’
’’உடம்பிலையும் அதுதான் நடக்குது.குளூக்கோசை பாத்து திருப்பிவிட ஆள் சரியில்லாமல் இரத்த வாய்க்காலில் நிறையும் இரத்தக்குழாயை பாதிக்கும்.
சேரவேண்டிய இடத்துக்கு தண்ணி போகாது. அதே போல குளுக்கொசும் உடலுக்குச்சேராது. அதுதான் களைப்பாக இருக்கும்”

தாத்தா திடீரென சிரித்தார்.பாட்டியும் உள்ளிருந்து சிரித்தாள்
“ அட என்னணை  இது இப்ப நான் என்னத்தைச்சொன்னனான்.”


துண்டால் முகத்தைத்துடைத்து விட்டு தாத்தா சொன்னார்.
”அந்த வரியம் மரவள்ளி வைத்திருந்தனாங்கள்.இரவு தண்ணியிறைக்க வாடா எண்டு லிங்கத்தானை.., படத்துக்கு போக வெளிக்கிட்டவனை,.. கெஞ்சித்தான் கூட்டி வந்து தண்ணி மாற விட்டணான்”
அது துலாவிறைப்பு நான் இறைக்க அவன் தண்ணி மாறினவன்.இருட்டுக்குள்ளை அவன்ரை வெள்ளைச்சட்டை தெரிஞ்சுகொண்டிருந்தது.பாதிகிணறு இறைச்சிருப்பன் சத்தத்தை காணேல்லையெண்டு பாக்கப்போணன் பாத்தியல்லாம் உடைச்சு தண்ணி பாய்ஞ்சு கொண்டிருந்துது.
 சட்டை அசையவில்லை.சத்தமும் இல்லை எனக்கு பதறிப்போச்சுது.பாம்பு கீம்பு கடிச்சிருக்குமோ என்டுதான் ஓடிப்போனனான்.’’
’’மண்வெட்டிக்குமேல  அவண்ரை சட்டையப்போட்டுவிட்டு அவன் படத்துக்கு போய் விட்டான்.ஒரு கிழமை அவனை தேடித்திரிஞ்சனான்.ஒளிச்சுத்திரிஞ்சவன்.ஊரெல்லாம் கதை பரவி சிரிப்பாய் போயிட்டுது”
‘’ அண்ணையிட்டை  மொக்கையீனப்படுறதுதான் இவற்ரை வேலை” என்றாள் பாட்டி பெருமையாக உள்ளேயிருந்தபடி.

’’முதல்லை தமையன் பிறகு தங்கச்சி அந்த குடும்பமே என் தலையில் அரைச்சுத்தான் என்ரை தலை வெள்ளனவே மொட்டை விழுந்துபோச்சுது” கிசு கிசுப்பாய்ச் சொன்னார் இவர்.
இருவரும் சிரித்தார்கள் பலமாக.
”என்ன சிரிப்பு அங்கை”
அது பாட்டி.
தாத்தா சிரிப்பை நிறுத்தி,
’’சரி விடு நீயும் எனக்கு ஒண்டும் விளங்காதெண்டு வாய்க்கால் வரப்பு கதையெல்லாம் எடுத்து விடுறாய் என்ன?” என்றார்.

”சரி இப்படிசொல்லுகிறேனே..
நீரிழிவு ஒரு வினியோகப்பிரச்சனை.அதாவது குளுக்கோஸின் வினியோகம் சரிவர நடப்பதில்லை. அதற்கு காரணம் ஏக வினியோகஸ்தரான இன்சுலின் என்கிற ஓமோன்.’’


.’’சாப்பாட்டுக்கடையில் ஐம்பது பேர் இருக்கிறார்கள். எல்லோரும் தோசைக்கு ஓடர் கொடுத்திருக்கிறார்கள். தோசை போடுபவர் ஒடருக்கு ஏற்ப தோசை போட்டுக்கொண்டே இருக்கிறார்.தோசை குவிகிறது. பரிசாரகர்( தமிழில்.. சர்வர்) இல்லை.
’’ஆக விநியோகப்பிரச்சினை தான்.’’

”உந்த மனுஷனுக்கெங்கை விளங்கபோகுதடா தம்பி’’ சொல்லிக்கொண்டே ,பாட்டி தேனீர் கொண்டு வந்து வைத்தாள்

”அதை விளங்கித்தான் என்னத்தை செய்யிறது. இதை விளங்காமலே கூட அம்பது வருசம் வாழ்ந்தாச்சுது”

என்றார் தாத்தா பாட்டியை பார்த்தபடியே.
’’எனக்கு உங்களை  விளங்கினபடியாலதான் அம்பது வருஷம் சமாளிக்க முடிஞ்சுது” என்றாள் பாட்டி. விடுவாளா என்ன.

நீரிழிவுக்கு விளங்காது, மனிதர்களின் வாழ்வு. நாம்தான் நீரிழிவை விளங்கிக்கொள்ளவேண்டும். புரிந்தால் அது நோயல்ல.

.


2 comments:

Abarajithan said...

அருமையான பதிவு மாமா... அம்மாவும் அப்பாவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் விட்டுச் சிரிச்சாங்கள்...

நீங்க நல்லா கதை எழுதுவீங்கன்னு அம்மா சொன்னா... அதுக்கொரு தனி ப்ளாக் ஆரம்பிச்சு சிறுகதை தொடர்கதை எல்லாம் எழுதலாமே? விரைவில் எதிர்பார்க்கிறேன்...

வரசித்தன் said...

நன்றிகள்