வீட்டின் பின்புறம் வேலியில் காவோலை நொருங்குகிற சத்தமும் தடிதண்டு முறிகிற சத்தமும் கொஞ்சம் பலமாகவே கேட்டது.
செல்லையர் படுக்கையிலிருந்து துள்ளியழுந்தார்.
‘’ டாய்’’ கத்திக்கொண்டு அருகில் தயாராய் வைத்திருந்த உலக்கையைத்தூக்கிக்கொண்டு வெளியே ஓடினார். அவரைத்தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் ஆளுக்கொரு தடி,இரும்பு கையில் கொண்டு ஓடினார்கள். செல்லையரின் தாய் சின்னாச்சிக்கிழவி தட்டுத்தடுமாறி எழுந்து உட்கார்ந்தாள். செல்லையரின் மனைவி அவிழ்ந்த கூந்தல் அவிழ விளக்குமாற்றோடு அவளைக்கடந்து ஓடினாள்.
இந்த முன்னிரவின் அல்லோலகல்லோலத்துக்கு காரணம் ஒரு பாதைப்பிரச்சினை.
செல்லையரின் வளவினூடாக பின்காணிக்கு செல்லும் ஒரு பாதையை செல்லையர் மூடி அடைப்பதும் அதை சுப்பர் பிரிப்பதுமாக இருந்தது இன்றைக்கு ஒரு பதிலடி கொடுப்பதாக செல்லையர் குடும்பம் தீர்மானித்திருந்தது.
இதற்கெல்லாம் காரணம் இந்தச் சின்னாச்சிக்கிழவி
’’உரிமையை விடக்கூடாது. அவங்கள் ஏமாத்திப்பிடுங்கினது.’’
என்று சொல்லிக்கொண்டேயிருந்தது மனுசி.கிழவி மெல்ல எழுந்து காதைதீட்டிக்கொண்டு தாழ்வாரத்தால் இறங்கினாள்.
அவர்கள் போன வேகத்துக்கு ஏற்ற சத்தம் சந்தடியைக்காணவில்லை.ஒரு மயான அமைதி நிலவியது.குரைத்த நாய் கூட அமைதியாகிவிட்டது.
கிழவிக்குப்பக்கென்றது.போனவர்கள் எங்கே?கிழவி மெல்ல அடியெடுத்துவைத்து வளவின்பின்புறம் நடக்கத்தொடங்கினாள்.
செல்லையருக்கு மட்டுமல்ல எங்கும் பாதைகள் எப்போதுமே பிரச்சனையாகத்தானிருக்கின்றன.அந்தக்காலத்தில் பாதைகளை கண்டு பிடிப்பது பெரிய சாகசமாயிருந்தது.பாதைகள் மனிதவாழ்க்கைக்கு அத்தியாவசியமாயிருந்தன.
பாதைகள் வாழ்வின் ஆதாரம் என்று சொன்னால் யாராவது மறுப்பீர்களா?.உலகின் அரசியலை பாதைகள் தான் தீர்மானித்தன.உலகின் யுத்த்ங்கள் பாதைகளை மூடுவதிலும் பாதைகளைப்பிடிப்பதற்காகவும்தான் நிகழ்ந்தன என்று சொன்னால் மிகையாகாது.பாதைகளைக்கைப்பற்றுவதன் மூலம் ஒரு நாட்டைக்கைப்பற்றமுடியும்.பாதைகளைப் பாதுகாப்பதன் மூலமே ஒரு நாட்டைப்பாதுகாக்கமுடியும்.
அதனால்தான் தெருக்களில் காவலரண்கள் முளைக்கின்றன. பாதைகளும் வாசல்களும் கண்காணிக்கப்படுகின்றன.
எதற்காக இந்தக்கதையளப்பு என்று கேட்கிறீர்களா.அது எங்கள் உடல் நலம் சம்பந்தப்பட்டது. உடல் நலத்துக்கும் பாதைக்கும் என்ன சம்பந்தம்?
அண்டத்திலுள்ளதே பிண்டத்திலுள்ளதென்பார்கள். இந்தப்புறவுலகில் உள்ளது நம் உடலுக்கும் பொருந்தும்.
உடல் ஒரு கோட்டை போன்றது.ஒரு காற்றால் சூழப்பட்ட தேசம் என்றும் சொல்லலாம். உடலுக்குப் பாதைகள் இருக்கின்றன. வெளியுலகத்தோடு தொடர்பு கொள்ள. உள்ளேயும் பல பாதைகள் ஓடுகின்றன.
காற்றையும் உணவையும் உடல் சூழலிலிருந்து பெற்றுகொள்கிறது. வாய் உடலின் பிரதான பாதை.மூக்கு காற்றுச்செல்லும் பாதை.இது தவிர கண்கள் ஒளி செல்லும் சாளரம்.காதுகள் ஒலிவாங்கிகள்.வெளியகற்றும்பாதைகள் சிறுநீர், விந்துப்பாதை,மலவாசல்,பெண்களில் குழந்தைவருவதற்கானதும் இனப்பெருக்கத்துக்குமான பாதை இப்படி உடலில் பாதைகள் அமைந்திருக்கின்றன.
உடலின் இந்த வாசல்கள் வழியாகத்தான் ஆபத்தும் நுழைகிறது.தோல் ஒரு கவசம். அது உடலை மூடிப்பாதுகாத்தாலும் உடலின் பலவீனம் இந்தப்பாதைகளிலேயே தங்கியிருக்கிறது.
உடலின் பிரதான எதிரிகள் நோய்க்கிருமிகள்.அவை காற்றில் இருக்கின்றன. நீரில் இருக்கின்றன. உணவில் இருக்கின்றன.
அதற்கு உணவும் நீரும் காற்றும் அத்தியாவசியமானவை.அவையின்றி இந்த உடல் வாழாது. ஆனால் இதுதான் உடலின் தலை விதி,அபாயமும் இவற்றுடன் சேர்ந்து உள்ளே வரும்.
உடல் இந்தப்பாதைகளை மிக உயர்ந்த பாதுகாப்புக்கடவைகளாக அமைத்துக்கொண்டிருக்கிறது. நாங்கள் தூங்கினாலும் உடல் விழிப்பாக இருக்கிறது.
சாத்தியமான எல்லாவழிகளிலும் அது உள்ளே செல்லும் உணவைக்கண்காணிக்கிறது.சுத்தஞ்செய்கிறது.காற்றை வடிகட்டுகிறது.
எப்படி என்று விரிவாகப்பார்த்தால் அது ஒரு பாதுகாப்புக்கட்டுரைபோல இருக்கும்.
வாய்
வாயை எடுத்துக்கொள்ளுங்கள். (வாயை எப்படி எடுப்பது)
வாயுக்கு உணவை அரைத்து உடலுள்ளேயான பிரயாணத்துக்கு ஏற்றவாறு தயார் செய்யும் பொறுப்பு.அதற்காக பற்களும் நாவும் உள்ளன.
நாவுக்கு வேறு பொறுப்புக்களும் இருக்கின்றன.
உணவை தேர்வு செய்வதும் உணவை உண்பதற்கான விருப்பத்தை உருவாக்குவதுந்தான் அவை. சுவையுணர்வு உடலுக்கு ஒரு பாதுகாப்புத்தான்.ஒரு நீரிழிவாளர்( நோயாளி என்று சொல்வது பொருத்தமில்லாதது) இனிப்பை தவிர்க்கக்கூடியதாக இருப்பதுவும் உடலின் பாதுகாப்புத்தானே.
அத்தோடு உமிழ்நீர் கிருமிகளை கட்டுப்படுத்துகிற பதார்த்தங்களைக் கொண்டிருக்கிறது.
வாய்ச்சுகாதாரம் எமது உடலாரோக்கியத்துக்கு அத்தியாவசியமானது.பல்துலக்குதல் எமது நாளாந்தக்கடமையாகிறது. உமிழ்நீரின் கிருமிகளிற்கு எதிரான பலம் சிறியதே. கிருமிகளில் பலரகம்.இவைகளில் சில வாயிலேயே வளரக்கூடியன.விளக்காத வாய்கள் அவைகளுக்கு சொர்க்கம்.
சிலருக்கு பற்களில் சொத்தை விழுந்திருக்கும்.
இந்த சொத்தை என்கிற பல் ஓட்டை உடலின் பாதுகாப்பில் விழும் ஓட்டை.கிருமிகளுக்கு ஒரு குறுக்குவழியென்கிறார்கள். சிலவேளைகளில் இதற்கூடாக கிருமிகள் உடலினுள் புகுந்து இதயத்தில் தொற்றை ஏற்படுத்தலாம். மிக அரிது என்றாலும், இது சொத்தைப்பல்லை அகற்றும்போது இந்த ஆபத்து கொஞ்சம் அதிகரிக்கிறது. இதய வால்வு ச்சிக்கல் போன்ற இதயநோய் உள்ளவர்களில் இந்த ஆபத்து அதிகம்.அதனாலேயே அவர்கள் நுண்ணுயிர்கொல்லி மருந்துகளை முன்கூட்டியே தந்துவிட்டு பல்லை அகற்றவேண்டிவருகிறது.
வீட்டுவாசலை சுத்தமாகவைத்திருந்தால் புழு பூச்சி அண்டாது அல்லவா?
பதிவு நீள்வதால் பாதைகள் இன்னொருபதிவுக்குள்ளும் நீள வேண்டியிருக்கிறது.
அது சரி செல்லையருக்கும் குடும்பத்துக்கும் என்ன நடந்தது?
வேலியருகே போனபோது கிழவியை பிடித்து இழுத்து இருத்தியது இரும்புக்கரம்.செல்லையா குடும்பத்தினர் எல்லோரும்
இருட்டுக்குள் குந்தியிருந்தார்கள்.அது அவர்கள் விதி.அன்றிரவு வேலியைப்பிரித்ததும் வந்ததும் இராணுவம்.
(ஆரம்பகாலங்களில் அவர்கள் எப்போதும் பின்வேலியைப்பிரித்துக்கொண்டுதான் வளவுக்குள் வருவார்கள்.அதுவும் இந்தியராணுவம் ஒரு முறை என்னையும் பிடித்து வேலி பிரிக்க விட்டார்கள். அது ஒரு தனிக்கதை.கொல்லைப்புறங்களுக்கூடான ஒரு பயணம் அது. ஏனிப்படியென்றால் பாதைகள் அபாயம் நிறைந்தவை பாருங்கள்.
பிறகு ஊரையே பிரித்து மேய்ந்துவிட்டார்கள்.)
(பெயர்கள் யாவும் கற்பனை)

0 comments:
Post a Comment