Sunday, May 2, 2010

நோயொடு பேசுதல்!

அடர்ந்த காட்டில் சிக்கிக்கொண்டிருக்கிறீர்களா?
அதுவும் உயர்ந்தமரங்களோடு, செடிகள் பின்னப்பட்டு பகலிலும் இருண்டு போயிருக்கும் காடு. செடிகளும் கொடிகளும் புதர்களுமாய் சருகுகளில் மறைந்த தரை விஷ ஜந்துகளும், ஆட்கொல்லி மிருகங்களுமாய் எப்போது நிழலில் மறைந்திருக்கும் ஆபத்துக்களோடு அச்சத்தை,  ஒவ்வொரு அசைவிலும் கலந்து தரும் காடு,காட்டின் மொழி தெரியாத ஒரு மனிதனுக்கு மரண பீதியத்தரும். ஒவ்வொரு இலையின் அசைவும் நிழலும் காலடியில் நொருங்கும் சருகின் ஒலி கூட பயங்கரமாக இருக்கும். திசை தடுமாறலுமாய் திகைத்துப்போய் நிற்கவேண்டி வரும்.கொடி பாம்பாகவும் பாம்பு கொடியாகவும் தெரியும்.
 காட்டின் மொழி அறிந்த ஒரு காட்டு வாசிஅருகிலிருப்பானானால் காடு பயந்தருவதில்லை.காட்டின் மொழியறிந்தவனோடு காடு பேசும்.சருகுகளின் சப்தம். நிழல்களின் அசைவு, தடங்களின் திசை, காற்றி வாசம் என காட்டின் சங்கேதம் புரிந்தவன் வீட்டிலிருப்பதுபோல உணர்வான்.
   நோய் ஒரு காடு;.நோய்வாய்ப்படுதல் என்பது ஒரு காட்டுக்குள் சிக்கிக்கொள்வது போன்றது.காட்டைக்கடந்து போகும்வரை உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு செல்லவேண்டியிருக்கிறது.
சில நோய்கள் பரிச்சயமானவை. சில நோய்கள் மர்மம் நிறைந்தவையாக இருக்கின்றன.இந்த உடலில் ஏதோ நிகழ்கிறது என்ன நடக்கும்? நான் இதிலிருந்து வெளியே வருவேனா என்றெல்லாம் பீதி எழுகிறது. வழிதெரியாதகாட்டின் நடுவே சிக்கிக்கொண்ட உணர்வுதான்.வழிதெரியாத உணர்வு;அறியாமையின் விளைவு;அதீத அறியாமை பயத்தைத் தருவதில்லை.அதனால் தான் சிறு பிள்ளை பயம் அறியான் என்கிறார்கள்.அறிந்தவர்கள் எச்சரிக்கை உணர்வு கொள்கிறார்கள்.அரைகுறை அறிவு பயத்தை தருகிறது.என்ன நடக்கும் என்று தெரியாததால் வருகிற உணர்வு அது.
    மருத்துவர்கள், இந்த நோய்க்காட்டின் மொழிஅறிந்தவர்கள்.நோயினூடே ஒருவரை வழிகாட்டி அழைத்துச்செல்லப் பயிற்றுவிக்கப்பட்டவர்கள்.
   நோயின் மொழி சங்கேதம். அது தடயங்களை தந்து கொண்டே இருக்கும். ஒரு மருத்துவர் காது கொடுத்து கேட்கிறார். கவனமாக அவதானிக்கிறார்.தொடர்ச்சியாக புலன்களை கூர்மையாக்கி,கருவிகளை பயன்படுத்தி, உடலின் வெளியிலும் உள்ளேயும் நடைபெறும் மாற்றங்களை,தடயங்களை சேர்த்துக்கொண்டே இருக்கிறார். திசையறிந்து, வரக்கூடிய ஆபத்துக்களை உணர்ந்து தவிர்த்து, வழி கண்டுபிடித்து செல்லுகிற அதே வேலைதான் மருத்துவருக்கும்.
.     நோய்கள் சாதாரண மனிதர்களோடு புரிந்த மொழியில் பேசுகின்றன. காய்ச்சல், வலி, தலிச்சுற்று, வாந்தி ,களைப்பு இப்படி சொல்வதற்கு ஏராளமான வெளிப்பாடுகள் இருக்கின்றன.இவை அறிகுறிகள் (symptoms)எனப்படுகின்றன..
மருத்துவர் முதலில் நோயாளியோடு உரையாடுவார். நோயாளியின் வார்த்தைகளூடே நோய்தான் பேசும். நோயுற்றவரை, அவர் உணர்வதை,  அவரை இந்த நிலைக்கு இட்டுச்சென்ற எல்லா காரணங்களையும் மருத்துவர் கேட்டறிவார்.இது நோயின் சரிதம்(history) எனப்படுகிறது. இது நோயைக்கண்டறிவதற்கான  முதற்படி.
  ஒருவர் ஒரு மருத்துவரிடம் போய் உட்கார்ந்து கொண்டார்.
‘’எங்கே டாக்டர் எனக்கு என்ன வியாதி என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்’’
’’சொல்லுங்கள், நீங்கள் உணர்வதை சொல்லுங்கள்’’
’’நான் ஒன்றும் சொல்ல மாட்டேன் நீங்கள்தான் கண்டு பிடித்துச்சொல்லவேண்டும்’’
’’ஓகோ அப்படியா, எனக்கு அந்தளவுக்கு திறமையில்லை, அடுத்த கட்டிடத்தில் நீங்கள் சொல்லாமலேயே உங்கள் நோயைக் கண்டு பிடிப்பார்கள்,போய்பாருங்கள்’’ என்றார் மருத்துவர்.
அடுத்த கட்டிடத்தில் இருந்தது மிருகவைத்திய சாலை. இது நான் முன்பு படித்த ஜோக்.(ஆனாலும் மிருகங்களின் சார்பாக வளர்ப்பவர் பேசுவார்)
மருத்துவர் நோயுற்றவரிடம் பேசி நோய் பற்றிய சகல விபரங்களையும் திரட்டுவது ஒரு கலை.இப்படி
பேசிப்பெற்ற விபரத்துடன் வைத்தியர் உடலை பரிசோதிப்பார்(examination). கண்களை , நாக்கை என உச்சி முதல் உள்ளங்கால் வரை தடயங்களை தேடுவார்.இவை நோய்க்குறிகாட்டிகள்(signs) எனப்படும்.இந்த தடயங்கள் போதவில்லையென்றால் பரிசோதனைகள்(investigations) மூலம் உடலினுள்ளே நோய் தரும் க்ளூக்களை சோதிப்பார்.
பெற்ற தடயங்களை தொகுத்து நோயைக்கண்டுபிடித்தல் –DIAGNOSIS , வரக்கூடிய சிக்கல்கள்,- COMPLICATIONS,சிகிச்சை TREATMENT, வரமுன்னரேயே தடுத்தல்/ PREVENTION, வரமுன்னரேயே சிகிச்சையளித்து வராமல் தடுத்தல்-PROPHYLAXIS,நோயின் பாதை எப்படியிருக்கும் என்பதை ஊகித்தல்- PROGNOSIS  என மருத்துவர் ஒரு நோயை உள்ளும் புறமும் அறியவேண்டியிருக்கிறது.ஒவ்வொரு நோயினதும் மொழியை கற்றுத்தேறவேண்டியிருக்கிறது.அதனால்தான் மருத்துவக்கல்வி நீண்டதாகவும் ,கடினமானதாகவும் இருக்கிறது. ஆனால்  இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் நோயைக்கண்டறிதல் துரிதமாக்கப்பட்டுவிட்டது.
            *                *                       *
   ஒரு வைத்தியர் தன் உதவியாளனோடு தன் நோயாளியைப்பார்க்க போயிருந்தார்.அவரைப்பரிசோதித்தவர், ‘’நீங்கள் இனிப்பு சாப்பிடவேண்டாம் என்று சொல்ல கரும்பு சாப்பிட்டிருக்கிறீர்கள்’’ என்று கடிந்து அறிவுரை சொன்னார். உதவியாளனுக்கு ஆச்சர்யமாகப்போய்விட்டது.
திரும்பும் வழியில் எப்படிக்கண்டுபிடித்தார் என்று அவரைக்கேட்டான். ‘’வைத்தியருக்கு அவதானம் முக்கியம். அவரது அறையில் மூலையில் கரும்புச்சக்கை இருந்தது’’ என்றார்.
இன்னொரு முறை இந்த உதவியாளன் ஒரு நோயாளியை தனியே சென்று பார்க்க வேண்டி வந்தது.
அந்த நோயாளிக்கு வயிற்று வலி. வெளியே மரத்தடியில் கட்டிலைப் போட்டுப் படுத்திருந்தார். இவன் அவரருகில் போய் பேச்சுக்கொடுத்தபடிசுற்றுமுற்றும் பார்த்தான்.யாரோ,கட்டிலருகில் ஒரு சட்டியில் மாட்டுக்கு வைப்பதற்காக புண்ணாக்கை வைத்திருந்தார்கள்.
’’நீங்கள் புண்ணாக்கு சாப்பிட்டிருக்கிறீர்கள் அதுதான் இந்த வயிற்று வலி’’ என்று ஒரு போடு போட்டானாம் உதவியாளன்(அம்புலிமாமாவில் படித்த கதை) .

   ********************************************************************************************

0 comments: