Monday, May 31, 2010

வதைமுகாமில் கண்டெடுக்கப்பட்ட வாழ்வின் சாவி!

நாசிகளின் வதை முகாமில் அகப்பட்டு மீண்டவர் டொக்டர் விக்டர் ப்ராங்க்ல்.வதைமுகாமில் ஒரு மனோவைத்தியர் சிக்கிக்கொண்டு மீண்டது மனிதசமுகத்துக்கு நல்லதாகப்போய்விட்டது.ஒரு பெரும் அழிவிலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தை அவர் ஆக்கபூர்வமாக மாற்றியிருந்தார்.
         தனது மனைவி பெற்றோர் சகோதரர் என எல்லோரும் படுகொலைசெய்யப்பட்டுவிட வதைமுகாமில் அவர் உயிர் தப்பி மீண்டுவர என்ன காரணாமாயிருந்தது என்பதையும், வாழ்க்கையின் மிக உச்ச கொடூரபக்கங்களுக்குள் சிக்கிக்கொண்ட மனிதர்கள் எப்படி செயற்படுவார்கள்,சிந்திப்பார்கள் என அனுவப்பட்டு தெரிந்துகொண்டதை அவர் ஒரு சிறு நூலாக எழுதி வெளியிட்டார்.’’ மனிதனின் அர்த்தங்களுக்கான தேடல்’’ என்ற நூலில் அவர் தன் அனுபவங்களோடு லோகொதெரபி எனப்படுகிற சிகிச்சை முறையையும் முன் வைக்கிறார்.
      அவர் வாழ்க்கையின் இழப்பும் அனுபவமும் தொடர்ந்தும் உயிர்வாழ்தலும் அவருள் எழுப்பிய வினா இழப்பதற்கு என்று எதுவுமற்ற நிலையில் , எதிர்காலம் பற்றியறியமுடியாத ஒரு இருளிலும் ’’எது ஒரு மனிதனை தொடர்ந்தும் உயிர்வாழ வைக்கிறது ’’என்கிற வினாவாகும்.
அதற்கு விடையாக அவர் கூறுவது ‘’ ஒவ்வொருவரும் தம் வாழ்வின் அர்த்தத்தை தேடும் இயல்பே அவர்களை தொடர்ந்தும் உயிர்வாழச்செய்கிறது ’’என்பதாகும்.அவர் அனுபவம் அதைத்தெளிவாகவே அவருக்கு உணர்த்தியிருந்தது.
    வதை முகாமில் ஒருவர் வாழவேண்டுமென்ற  தூண்டுதலை இழத்தல் என்பதே அவருக்கு மரணத்தைத்தரப்போதுமானதாக இருந்தது என்கிறார்.ஆனாலும் உச்சத்துன்பத்திலும் மனிதர்கள் உயிரைக்கையில் பிடித்தபடி இன்னொரு நாளுக்காகக்காத்திருக்கத்தான் செய்தார்கள்.
  .
மனிதனை வாழ உந்தித்த்தள்ளும் சக்தி எது என்பது பற்றிய மாறுபட்ட கோட்பாடுகள் இருந்தன.
மகிழ்வை அடைவதற்கான உந்துதல்தான் வாழ்வின் உந்துசக்தி என்பது  ஒன்று.(ப்ராய்ட்). வாழ்வின் உயர்வதற்கான விருப்பமே மனிதனை வாழ்வில் இழுத்துச்செல்வதாக இன்னொன்று.
 துன்பத்தின் உச்சியில் ,இனிவரும் காலமும் துன்பத்தின் தொடர்ச்சியே என்ற நிலையில், வாழ்க்கைதுன்பக்கேணிக்குள் கிடக்கையில் மகிழ்வு,முன்னேற்றம் உயர்வு என்பன வாழ்வுக்கான  உந்துதலாய் எவ்வாறு இருக்கமுடியும்?
இப்படி அனுபவத்தினூடாக எழுந்தவினாவின் விளைவான லோகோதெரபி, மற்றும் வாழ்வின் அர்த்தங்களை தேடல் என்பனவற்றின் அடிப்படை  இருத்தலியல் வாதம் ஆகும்

துன்பங்களும் பயங்கரங்களும் பழகிப்போய் தினசரி வாழ்க்கையான மனித வாழ்வில் மதிப்பாய் இருந்த அனைத்தும் அற்ற நிலையில்,
இப்படித்துன்பப்படுவதற்கான காரணம் என்ன?
 இந்த வாழ்க்கை அடுத்த கட்டம் எப்படியிருக்கப்போகிறது? இன்னும் நான் தாக்குப்பிடித்துச்செல்வது எந்தவரையில்? எனக்கு என்ன காத்திருக்கிறது? என்றெல்லாம் வினாக்கள் எழுகிறது என்கிறார் அவர்.
துன்பங்களுக்கு காரணத்தை கண்டறியும்போது துன்பங்கள் வலுவிழந்து போகின்றன.
அதைத்தான் பட்ட கஷ்டம் வீண்போகவில்லை என்று சொல்கிறோம்.
மேலும் தவிர்க்கவே முடியாத துன்பத்தை முழுமனதாக ஏற்று அனுபவித்து கடந்துவிடவேண்டும் என்கிறார்.துன்பங்களை ஏற்கிறபோது மனம் உறுதியாகிவிடுகிறது.
விக்டர் பிரான்க்ல் தன் கோட்பாடுமூலமாக சொல்வதை மீண்டும் மீண்டும் அவரது வாழ்க்கை உறுதி செய்கிறது.
அவர் துன்பத்தின் உச்சத்தினுள் வாழவேண்டுமென்ற எண்ணத்தை தக்க வைத்து உயிரோடு வெளியே வந்ததற்கான அர்த்தம் அவருக்கு மட்டுமல்ல உலகத்துக்கே உணர்த்தப்பட்டுவிட்டது.

நாம் துன்பப்பட்டோம். துன்பப்படுகிறோம்.இழப்பதற்கு எதுவுமில்லை.ஆனால் நேர்ந்துவிட்ட இந்தத்துன்பங்களை ஏற்று த் தாங்கி கடந்து செல்ல எம் வாழ்வு இன்னும்பெறுமதியுள்ளதாகிவிடும்.அப்போது இந்தத்துன்பங்கள் அர்த்தமுள்ளவையாகிவிடும்.சாட்சி விக்டர் ப்ரான்க்ல்

3 comments:

ரோஸ்விக் said...

தங்களின் துறை சார்ந்த பதிவுகளையும், சமூகம் சார்ந்த பதிவுகளையும் பதிவுலகில் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி...

தங்களை அறிமுகம் செய்வதில் மகிழ்கிறேன்.

http://blogintamil.blogspot.com/2010/06/new.html

natbas said...

அருமையான பதிவு. மிக்க நன்றி.

A doctor said...

thanks