Thursday, June 10, 2010

A Beautiful Mind - இன்னுமொரு பார்வை!

நீங்கள் நான் இந்த உலகம் அவரை நேரில் சந்தித்தால் பைத்தியக்காரன் என்போம். அவர்  எங்களோடு கூடப்படித்திருந்தால்
‘’ஒரு மாதிரி’’
‘’கழன்ற கேஸ்’’
‘’மண்டைக்காய் பட் ஒரு லூசு’’
‘’ தான் ஏதோ பெரிய இவன் என்று நினைப்பு’’
 இப்படித்தான் பேசியிருப்போம்.
.
அவர் ஜோன் நாஷ் என்கிற கணித விஞ்ஞானி.  அவர் கேம் தியரி என்பதாக கணிதத்தை பொருளதாரத்துக்கு உதவுமுகமாக ஒரு கருதுகோளை உருவாக்கித்தந்தவர்.
 இந்த மனிதருக்கு உலகம் நோபல் பரிசு கொடுத்து கவுரவித்திருக்கிறது
அழகிய மனம் என்ற திரைப்படம் அவருடைய வாழ்க்கை அனுபவங்களை வைத்து வெளிவந்து பெரும் வெற்றிபெற்றது.

அந்தத்திரைப்படத்தை ஒற்றைவரிக்கதையாகச்சொன்னால் ஸ்கிசோபிரெனியாவோடு வாழ்ந்து வாழ்வை ஜெயித்த மனிதனின் கதை என்று சொல்லலாம்.
ஸ்கிசோபிரனியாவைப்புரிந்து கொண்டால்தான் அந்த படத்தின் ஆன்மாவைப்புரிந்துகொள்ளலாம்.அந்த ஜோன் நாஷுக்கு கிடைத்த விருது இதுவரை அளிக்கப்பட்ட விருதுகளில் மிகப்பெறுமதி வாய்ந்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.
ஸ்கிசோபிரனியா நோயால் பீடிக்கப்பட்ட யாரையாவது சந்தித்திருக்கிறீர்களா?
தெருவில் யாரோடாவது பேசிக்கொண்டோ தனக்குத்தானே சிரித்து கோபப்பட்டுக்கொண்டு அழுக்காய் இன்னொரு உலகத்தில் வாழுகின்ற எங்களால் ‘’பைத்தியங்கள்’’ என்று சொல்லப்படுகின்ற மனிதர்கள் அவர்கள்தான்.
படத்தில் ஒரு காட்சி. ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழக வாசலில் ஜோன் யாரோடோ கோபமாகப்பேசிப்பேசி சுற்றி வருகிறார்.அவரது நடவடிக்கை விசித்திரமாக கேலிக்குரியதாக இருக்கிறது.
மாணவர்கள், ஆசிரியர்கள் என ஒரு கூட்டமே சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.                                        திரைப்படம்எம்மை ஜோன் நாஷ் உடன் அடையாளப்படுத்திக்கொள்ளவைத்துவிடுகிறது. திரைப்படத்தைப்பார்க்கும் எமக்கு அவர் ஏன் அப்படி நடந்துகொள்கிறார் என்பது புரியும்.அவரைச் சுற்றிவர நிற்கிற பார்வையாளர்களுக்கு அது புரியாது அன்னியமாகத்தெரிவார்கள்.

நிஜத்தில் தெருவில் தனக்குத்தானே பேசிக்கொண்டு விசித்திரமாக நடந்து கொள்ளும் மனிதர்களையும் கூட்டங்கூடி பார்த்து சிரிக்கிற பரிதாபப்படுகிற கற்களை வீசுகிற கூட்டத்தோடுதான் நாம் எம்மை அடையாளப்படுத்திக்கொள்வோம்.அவர் ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்பதற்கு எல்லோருக்கும் ஒரே விடைதான் கிடைக்கும். ’’அது பைத்தியம்’’

திரைப்படத்தில் ஜோன் நாஷ் செய்வது சரியென்றே எங்களுக்குத்தோன்றும். அவரோடு பேசும் மனம் உருவாக்கிய மாய மனிதர்களோடு அவர் சண்டைபோட்டுக்கொண்டிருப்பார்.நாங்களும் அந்த மாய மனிதர்களை துரத்தி விடவேண்டும் என்று நினைப்போம்.அந்த மாய உலகச்சண்டையில் அவர் தன் நிஜ உலகத்தை மறந்து விடுவார். எங்கிருக்கிறேன் என்பதை அவர் மறந்துவிடுவார். அட, பல்கலைக்கழகத்துக்கு வந்திருக்கும் புதுப்பேராசிரியர் ஒரு மாதிரி என்று மாணவர்கள் நினைக்கப்போகிறார்களே என்பதை கவனிக்க அவர் மன உலகம் விடுவதாக இல்லை.
        ஸ்கிசோபிரெனியா-Schizophrenia எப்படிப்பட்ட நோய்?அதைத்தமிழில் மனச்சிதைவு என்று சொல்லுவார்கள்.
மனத்தில் எழும் சிந்தனைகள் சாதாரணமான நிஜ உலகில் நியதியிலிருந்து விலகிப்போனவையாக இருக்கும்.விசித்திரமான நம்பிக்கைகள்-Delusions மனதை ஆக்கிரமிக்கும். அவை கற்பனைகள் அல்ல தானாக எழுபவை; விரும்பி உருவாக்கப்படுபவை அல்ல.( கற்பனை என்கிற வார்த்தை இங்கு பொருந்தாது.கற்பனைகள் நாம் உருவாக்குபவை-delusions are believes not imagination)
தானாகவே எழுந்து மெல்ல அவர்கள் உலகத்தையே விழுங்கி விடும் அந்த நம்பிக்கைகள். ஜோன் நாஷுக்கு தான் சிஐஏ இல் ஒரு ஆலோசகனாக தோன்றுகிறது.ரஷ்ய உளவுப்பிரிவு அவரைப்பின்தொடர்வதாக; தான் ஒரு சங்கேதக்குறிகளை உடைக்கும் ஆற்றல் மிக்கவராகத் தோன்றிக்கொண்டேயிருக்கும் நம்பிக்கை அவரை ஆட்டிப்படைக்கிறது.
அவர் எச்சரிக்கையோடும் ஒரு ரகசியத்தன்மையோடும் எவரையும் சந்தேகக்கண்ணோடும் பார்க்கிற இயல்புகளை கொண்டவராகிவிடுவார்.இது பரனொயிட் டிலூஷன் –Paranoid Delusion எனப்படுகிறது.
டிலூஷன் delusions எனப்படுவவை தவறான விசித்திரமான நம்பிக்கைகள் ஆகும்.நோயாளிகளைப்பொருத்தவரை இது ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை.
ஜோன் நாஷ் இதைப்பற்றிக்கூறும்போது ‘’இந்தக்கணித சிந்தனைகள் எப்படி எனக்குள் தோன்றினவோ அதே போலவே இந்த விசித்திர யோசனைகளும் தோன்றின அதனால் நான் அவற்றை நம்பினேன்’’ என்கிறார்.
இப்படி இவர்கள் எண்ணங்கள் இந்தநம்பிக்கையைச்சார்ந்து ஓடுவதால்  முதலில் இவர்கள் எதிர் நோக்குவது சமுக உறவுச்சிக்கல்களைத்தான். தனித்தவர்களாக,கர்வம் பிடித்தவர்கள் போல,சுயநலம் மிக்கவர்கள் போல, நாசூக்காகவோ நளினமாகவோ நடக்கதெரியாதவர்கள்போல தோற்றமளிப்பார்கள்.ஜோன் முதலாவது நாள் சந்திப்பில் டையைப்பற்றி பேசுகிறார்.மனிதர்களை பார்க்கவில்லை.
அனேகமாக திரைப்படத்தில் எமக்குப்பிடித்தமாக தோன்றிய ஜோன் நேரில் எங்களுக்குப்பிடிக்காதவராகவே தோற்றமளிப்பார்.
    மனச்சிதைவின் இன்னுமொரு அறிகுறி காதில் கேட்கும் குரல்கள். மாயத்தோற்றங்கள், மாய உடல் உணர்வுகள்,
 இதை Halucinatons –மாய உணர்வுகள்        என்பார்கள்.
மனச்சிதைவில் ஏற்படுவது பெரும்பாலும் காதில்கேட்கும் குரல்கள்-Auditory Hallucinations தான்.
தான் ஒரு நடமாடும் பிணம் என்று நினைப்பவர்கள்.உடலுக்குள் எதுவும் இல்லை உடல் வெறும் கூடு போல இருப்பது.தலையில்லை இப்படியெல்லாம் விசித்திர நம்பிக்கைகளும் உண்டு.
 இந்தக்குரல்கள் ஜோன் நாஷுக்கும் கேட்கிறது.ஆனால் திரைப்படத்தில் அவை பாத்திரங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.அவர் அவர்களைக்காணுவதாகவே காட்சிகளை உருவாக்கி இருக்கிறார்கள். மூன்று கதாபாத்திரங்கள் அவரைச்சுற்றி வருகின்றன.காதில் கேட்கும் குரல்களை பார்க்கக்கூடிய கதாபாத்திரங்களாக மாற்றி ஜோன் இன் மனவுலகத்தில் நடக்கும் போராட்டத்துடன் பார்வையாளர்களயும் ஒன்றச்செய்தமைதான் இந்தப்படத்தை சிறந்தபடைப்பாக்கியது.

   மேலும் இந்த மனநோய் சிந்திக்கும் திறனை மெல்ல மெல்ல அழித்துக்கொண்டு வரும்.
சிந்திக்கும் தன்மை குழம்பியதாகி, ஞாபகசக்தி குறைவடையும்.மனதின் ஒரு முக ஆற்றல் அற்றுப்போகும்.தங்கள் எண்ணங்களை கோர்வையாக்கி வெளிப்படுத்தும் ஆற்றலை இழப்பார்கள். உணர்வு நடத்தை சிந்தனை ஆகியவை தொடர்பிழந்து ஒரு விசித்திர நிலை தோன்றிவிடும். (disorganized thinking,slow thinking,difficulty understanding,poor concentration,poor memory,difficulty expressing thoughts,difficulty integrating thoughts, feelings and behavior)
இது தவிர இன்னும் பல நுணுக்கமான குணங்குறிகளோடு ஏற்படும் மனச்சிதைவுநோய் ஏற்பட்ட மனிதரின் உள்மன வெளியுலக போராட்டங்களை கற்பனை கலந்து சுவையாக்கி தந்த திரைப்படம் அழகியமனம்.
இந்த படத்தை பார்த்தபோது சந்தோஷமாயிருந்தது. அதற்கு ஒரு நீண்ட விளக்கம் இருக்கிறது.
மனச்சிதைவோடு 24 மில்லியன் மக்கள் உலகம் எங்கு இருக்கிறார்கள்.சிகிச்சைபெறாமல் வாழ்வபவர்கள் 50%.இவர்களில் 90%  வளர்முக நாடுகளில்தான் இருக்கிறார்கள். 
மனச்சிதைவு ஏற்பட்ட ஒருவர் தன் மனத்தோடுபோராடவேண்டியிருக்கிறது;தன் உறவுகளோடு போராட வேண்டியிருக்கிறது;உலகத்தோடு போராட வேண்டியிருக்கிறது;. அனேகமாக அவர்கள் தோற்றுப்போனவர்களாகிவிடுகிறார்கள்.ஒரு கட்டத்தில் அவர்கள் நிஜ உலகினுடனான தொடர்பை இழந்து விடுவார்கள்.தாம் நோய்வாய்ப்பட்டிருக்கிறோம் என்பது அவர்களுக்கு தெரியாது.உலகம் அவர்களை பைத்தியம் என்று சொல்லிவிடும்.
    இன்று மிக நல்ல மருந்துகள் கிடைக்கின்றன. மருத்துவ சிகிச்சைக்குப்பின்னர் அவர்கள் நிஜ உலகுக்கு மீளத்தான் செய்கிறார்கள். அவர்கள் மீண்டும் சாதாரண வாழ்வைத்தொடர விரும்புவார்கள். ஆனால் சமுகம் அந்த பைத்திய முத்திரையை அகற்றிக்கொள்வதில்லை.அந்தக்கண்ணாடியூடாகவே  அவர்களைப்பார்க்கும். அவர்களை புறக்கணிக்கும் பழிக்கும் இழிவுபடுத்தும்.அவர்கள் மனமுடைந்துபோய்விடுவார்கள். மீண்டும் நோய்வாய்ப்படுவார்கள்.
ஆனால் ஜோன் நாஷ் விஷயத்தில் இது ஆறுதல் தருகிறது. ப்ரின்ஷ்டன் பல்கலைக்கழகத்தில் படித்தார்.அப்போது அவர் ஒரு நிழல் மனிதராக ஒரு மாதிரி என்ற அபிப்பிராயத்தைப்பெற்றிருந்தார்.ஆனால் அவர் திறமையை எல்லோரும் ஒத்துக்கொண்டிருந்தார்கள்.ஒருகட்டத்தில் தீவிரமாக நோய்வாய்ப்பட்டார்.சக மனிதர்கள் அவரை மீட்டார்கள், மீண்டும் பிரின்ஸ்டன் அவரை ஏற்றுக்கொண்டது.
ஒரு விமர்சகர் இப்படிச்சொல்கிறார்.’’மனிதர்களோடு சேராமல் தனக்குள் புதைந்திருந்து உன்னதகருத்துக்களை உருவாக்கித்தந்தவர் மனச்சிதைவுப்படுகுழியில் வீழ்ந்தார் அவரை சக மனிதர்கள் மீட்டெடுத்தார்கள்’’
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் அவருக்கு ஒரு தொட்டில் போல இருந்தது என்கிறார் இந்தத்திரைக்கதையை வடிவமைத்தவர்.
ஸ்கிசோப்ரனியா மனிதர்கள் சமுகத்திலிருந்து விலகித்தான் ஓடுவார்கள். போதாக்குறைக்கு சமூகமும் அவர்களை துரத்தியடிக்கும் மீளச்சேர்ப்பதில்லை.
இந்தத்திரைப்படம் இந்தப்பார்வைகளை மாற்றும் என்று தோன்றியது.
மனச்சிதைவுடன் போராடி ஒருவர் தன்னைத்தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை இந்தத்திரைப்படம் ஏற்படுத்துகிறது..
இந்த நோய்வாய்ப்பட்டவர்களினூடாக இந்த உலகத்தை சமுகம் பார்ப்பதற்கு இந்தத்திரைப்படம் உதவிசெய்கிறது.அவர்களின் மன உலகதைக்காட்டி நோயைப்புரிந்து கொள்ள உதவி செய்கிறது
அதற்கும்மேலாக மனநிலை பாதிக்கப்பட்டவரானாலும் அவரை மதித்து திறமைகளை ஏற்றுக்கொள்ளும் உலகம் ..மனிதர்கள். இன்னும் இருக்கிறார்கள் என்பதைச் உரத்த குரலில் சொல்லுகிறது.

ஒரு மருத்துவர் பார்வையில் இந்தப்படம் இன்னொரு வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. மனச்சிதைவுக்குள்ளான ஒருவரின் குடும்பத்துக்கு நோயைப்பற்றி ஒரு சிறிய அளவுக்காகாவது புரிய வைப்பதற்கும் ,நோய்வாய்ப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் இந்தத்திரைப்படம் உதவும் என்பதுமாகும்.
தமிழில் இந்தப்படம் வெளிவந்தால் இன்னும் நல்லது என்று தோன்றியது.காரணம் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுவதில் தமிழினமும் ஒன்று என்பதாகும்

அண்மையில் அன்பர் ஜெய் அவர்களது அழகான, ஆழமான இத் திரைப்படம் பற்றிய விமர்சனத்தைப்பார்க்க நேரிட்டது(படத்தின் நுணுக்கமான அம்சங்களைப்படிக்க அழுத்துங்கள் அவருக்கு நன்றி). இந்தப்படம் வேறொருகோணத்திலேயே புரிந்துகொள்ளப்பட்டிருப்பதுபோல தோன்றியது.மனச்சிதைவு நோய் பற்றிய தகவல் அந்தப்பார்வைக்கு இன்னொரு கோணத்தை அளிக்கக்கூடும்.
காலிலிழந்த ஒருவர் ஓட்டப்பந்தயத்தில் பெறும் வெற்றிபோல மனச்சிதைக்குள்ளானவரின் மனதிலிருந்து பிறந்த கருத்து உயர்விருதைப்பெறுகிறது இங்கே.
     இந்த திரைப்படம் மனச்சிதைவுக்காளானவரின் போராட்டத்தையும் , சகமனிதர்களின் ஆதரவையும்,அதனூடாக பெற்ற அங்கீகாரத்தையும்  பற்றியதே. மனிதகுலத்துக்கு ஒரு  புதிய வழியைத்தந்த அழகியமனத்தையும் அது சிதைவுக்குள்ளானபோது அந்த மனத்தை மீண்டும் கட்டி எழுப்ப உதவும் அழகிய மனங்களும், என்றும் சொல்லலாம்.

இந்தத்திரைப்படம் பார்வையாளர்களிடையே மனச்சிதைவுக்குள்ளானவர்களின் அழகிய பக்கத்தைக்காணவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கவேண்டும். தவறினால் தமக்காக பேசும் சிந்திக்கும் சக்தியை இழந்து, மற்றவர்களால் புரியப்படாமல் பைத்தியங்கள் என்ற பெயரோடு சுற்றி வருபவர்களுக்குத்தான் அது ஒரு பேரிழப்பு. 
புரியப்படாத மனிதர்கள் பற்றிய சரிவர புரியப்படாத திரைப்படமா?....கூடவே கூடாது!.


*             *                  *                 *                          
தொடர்பான முந்தைய பதிவுகள்:






10 comments:

natbas said...

நல்ல படம்.
இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், கதாநாயகனின் மன உருத் தோற்றங்கள் முதலில் அவனது பார்வையில்தான் காட்டப்படும்- பின்னரே, கதாநாயகனும் அவனது மன பிம்பங்களும் ஒரே ப்ரேமுக்கு வருவார்கள். தெரிந்தேதான் இப்படி செய்தாராம் இயக்குனர்- இதில் அவர் ஒரு நுண்ணிய செய்தியை சொல்லி இருக்கிறார்- அவர்கள் மற்ற பாத்திரங்களைப் போல் அல்லாமல் அவனது பார்வையில் தோன்றி, அவனோடு கலந்து பழகுபவர்கள் என்று.

நான் மிகவும் விரும்பிய படம் இது என்றாலும் எனக்கு இந்த படம் குறித்து ஒரு ஐயம் உண்டு- அவர் சாப்பிடும் மருந்து மாத்திரைகள் வாழ்க்கையை மந்தமாக்கி, அவரது ஆண்மைக்குக்கூட தடை போட்டு விடுகிறது. அவர், மாத்திரைகளை நிறுத்தி விட்டு தனது மனைவியின் அன்பின் பலத்தால் தன் மனச்சிதைவை வெற்றிகரமாக எதிர்கொள்கிறார் என்ற செய்தியை இந்த படம் தருகிறதோ என்று நினைக்கிறேன். அப்படி இருந்தால் அது ஆபத்தான கருத்துதானே? இல்லை நான்தான் தவறாகப் புரிந்துகொண்டு விட்டேனா?

natbas said...

மறுபடியும் பின்னூட்டம் (ஏதடா தொல்லையாக இருக்கிறது என்று நினைக்காதீர்கள், நான் கொஞ்சம் ஜவ்வு டைப்):

மருந்து சாப்பிடாமல் நாஷ் குணமான மாதிரி காட்டவில்லை:

'The film has Nash saying around the time of his Nobel prize in 1994: "I take the newer medications", when in fact Nash did not take any medication from 1970 onwards, something Nash's biography highlights. Howard later stated that they added the line of dialogue because it was felt as though the film was encouraging the notion that all schizophrenics can overcome their illness without medication."
http://en.wikipedia.org/wiki/A_Beautiful_Mind_(film)

ஆனால் அப்படி ஒரு தோற்றம் மனதில் ஏற்படுகிறது உண்மைதான்.

கூகுளாண்டவர் இந்த சுட்டியை எடுத்துக் கொடுத்தார்:
http://amabay.blogspot.com/2010/03/beautiful-mind-john-nash-and.html

அருமையான பதிவு, இந்த திரைப்படத்தை உளவியல் பார்வையில் கவனமாக ஆய்கிறது- அதில் வரும் இந்த வரிகள் தங்களுக்கு ஒப்புடையனவாய் இருக்கும் என நினைக்கிறேன்:

"Caught between having to choose the intellectual paralysis of the antipsychotic drugs or the haunting of his disease, Nash and his wife decide to try to live with his schizophrenia. Nash begins to try to ignore his hallucinations and therefore not feed the thoughts. "

உங்க பொறுமைக்கு நன்றி!

A doctor said...

@நட்பாஸ்

நன்றி.உங்கள் கேள்வியும் விடையும் அவசியமானவை.திரைக்கதை Beautiful Mind எனப்படும் புத்தகத்திலிருந்து வடிவமைக்கப்பட்டது.அதை எழுதிய அகிவாவின் பெற்றோர் உளவியலாளர்கள்.தாயார் இந்த நோயைப்பற்றிய விளக்கதை அளித்தார் என்றும் அவர்தான் அந்த மருந்து வசனத்தை சேர்க்கும்படி கூறினார் என்றும் அகிவா குறிப்பிடுகிறார்.அகிவாவின் தாயாருக்கு மதிப்பளிக்கும் வகையில் அவரை நோபல் பரிசுக்காட்சியில் மேடையில் உட்கார வைத்தார்களாம்.

நாஷ் நோயுற்ற காலத்தில் மருந்துகள் பக்க விளைவு கூடியவையாக இருந்துள்ளன. இன்று அரை நூற்றாண்டு கடந்த நிலையில் மிகச்சிறந்த மருந்துகள் கிடைக்கின்றன.பக்க விளைவுகள் அகற்றப்பட்டு மேலும் புதிய மருந்துகள் வந்து கொண்டிருக்கின்றன.
எனவே இன்றைய காலகட்டத்தில் மருந்துகள் பாவிப்பதுதான் மிகப்பொருத்தமான தெரிவு.
ஆனால் சிகிச்சை அளிக்கப்படாமல் இருப்பவர்கள் எம்பக்கங்களில் அனேகம்.சரியான சிகிச்சையும் சுற்றத்தினரது புரிந்துணர்வும் கிடைத்தால் அவர்கள் சாதாரண வாழ்க்கைக்குத்திரும்பிவிடக்கூடும்.

உங்கள் கருத்து பிரயோசனமானது

ஜெய் said...

இந்தப் படத்தைப் பற்றிய உங்கள் பார்வை வெளிப்படுத்தியதறகு நன்றி நண்பரே...

// இந்தப்படம் வேறொருகோணத்திலேயே புரிந்துகொள்ளப்பட்டிருப்பதுபோல தோன்றியது //
நீங்கள் சொல்லும் கோணம் புரிந்துகொள்ளப்பட்டது நண்பரே... ஆனால், படத்தின் முக்கிய நோக்கம் Schizophrenia நோய் உடைய ஒருவரைக் காட்டுவதை விட, அந்த மனநோய் வர காரணமாக இருக்கும் அங்கீகரிப்பின்மையைப் பற்றியதே என நினைக்கிறேன்... அவருக்கு எப்போதெல்லாம் hallucination தோன்றுகிறது என கவனித்தாலே தெரியும், அவருடைய திறமை அங்கீகரிக்கப்படாமல் போய்விடும்போது ஏற்படும் மனச்சோர்வைப் போக்கவே hallucination-ஐ அவர் ஏற்படுத்திக்கொள்கிறார் என்று... படத்தின் மற்றொரு முக்கியமான விஷயம்தான் அவருடைய மனைவி அவருக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார் என்பதும்... இது என் கருத்து... வேறுபடலாம்... ஆனால், பெரும்பாலானவர்களுடன் ஒத்துப்போவதை கவனிக்கிறேன்...

A doctor said...

@ ஜெய்
மிக்க நன்றி

என்னுடைய நோக்கம் ஸ்கிசோப்ரனியா நோய் பற்றிய புரிதலை ஏற்படுத்துவது.காரணம் அனேகருக்கு அந்த நோயைப்பற்றிய தெளிவு இல்லை.காரணம்... யாரும் சொல்லித்தரவில்லை

’ படத்தின் மற்றொரு முக்கியமான விஷயம்தான் அவருடைய மனைவி அவருக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார் என்பதும்…’
இப்படி இந்த படத்தைப்பார்க்கிற எல்லா நோய்வாய்ப்பட்டவரின் மனைவிகளும், சுற்றமும் நோயைப்புரிந்து கொண்டு தங்கள் கணவருக்கு அன்பைச் செலுத்தவேண்டும் என்பதே எனது அவா.

அதற்காகத்தான் அந்தப்பதிவு.

ஒரு நல்ல படைப்பு விரும்பியவர்களுக்கு விரும்பியதுபோலவே தோற்றமளிக்கும்.
இந்தத்திரைப்படம் அங்கீகாரம் பற்றி,காதல் பற்றியும் பேசுகிறதுதான்.
அந்த மூன்று கதாபாத்திரங்களுக்கும் அவருக்குமிடையிலான போராட்டம் பிரதானம்.அந்தப்பாத்திரங்கள்தான் அந்த நோய்.அந்தப்பாத்திரங்களின் ஆளுகையில் இருந்து அவர் வெளிவருவதுதான் கதை


எவரெஸ்ட் உயரமாக இருப்பதால்தான் எவெரெஸ்ட்டில் ஏறுவது சாதனையாக இருக்கிறது.
மனச்சிதைவு நோயால் பாதிப்புற்றவர் சாதாரண வாழ்க்கையிலேயே தோல்வியடந்து விடுவதைப்பார்க்கிறோம்.இந்த மனிதர் இந்த உயரத்தைத்தொட்டது தான் சாதனை.

’’அந்த மனநோய் வர காரணமாக இருக்கும் அங்கீகரிப்பின்மையைப் பற்றியதே என நினைக்கிறேன்... ’’

ஸ்கிசோப்ரனியா வர என்ன காரணம் என்பதை இன்னும் ஆராய்கிறார்கள். பரம்பரைத்தன்மை இருக்கிறது.
ஜோன் நாஷ் இனுடைய ஒரே மகனும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுவிட்டார்.

. இது ஸ்கிசோப்ரெனியா.மனச்சோர்வு அல்ல( மனச்சோர்வும் சேர்ந்து வந்தால் அதை schizoaffective disorder என்பார்கள்.) இந்த நோய் மெல்ல உருவாகிவரும்.
அதிக மன அழுத்தத்தின்போது இந்த நோய் வெளித்தெரியும்.சாதாரணமாய் மக்கள் உடனே கவலையால் வந்ததென்பார்கள்.இதய நோய் ஏற்கனவே உள்ளவர்களுக்கு ஒருமுறை பாரந்தூக்கும்போது நெஞ்சுவலி தோன்ற பிறகு இதய நோய் உள்ளது வெளித்தெரியவரும் .அப்போது நாங்கள் அதை பாரந்தூக்கியதால் இதய வருத்தம் என்று சொல்லலாமா?
அதுபோலவே இவருக்கு அங்கீகாரம் ஒரு மன அழுத்தத்தைக்கொடுத்தது.நோய் வெளிப்பட்டது.அந்த நோய் உருவாக்கிய கதாபாத்திரங்கள் பிறகு அவற்றோடு போராட்டம்.

’அவருக்கு எப்போதெல்லாம் hallucination தோன்றுகிறது என கவனித்தாலே தெரியும், அவருடைய திறமை அங்கீகரிக்கப்படாமல் போய்விடும்போது ஏற்படும் மனச்சோர்வைப் போக்கவே hallucination-ஐ அவர் ஏற்படுத்திக்கொள்கிறார் என்று..’’

hallucinations ஏற்படுத்தப்படுபவையல்ல .தானாகவே ஏற்படுவது.அதாவது நோயின் அறிகுறி.இதய நோயில் நெஞ்சுவலி போல, டீபி யில் இருமல் போல.
மன அழுத்தம் நோயைத்தீவிரப்படுத்தும்.அதன் விளைவாக hallucination கூடும்.
இந்தத்திரைக்கதையை வடிவமைத்தவர் அகிவா அவரின் தாயின்(உளவியல் நிபுணர்) உதவியுடன் கவனமாக திரைக்கதையை வடித்திருக்கிறார்.ஆனாலும் அவர் சில இடங்களில் கற்பனையை சேர்த்திருக்கிறார். அவர்ஒவ்வொரு காட்சியையும் பற்றி விளக்கும்போது பல தகவல்களைச்சொல்லுகிறார்

உங்கள் பார்வையும் விமர்சனமும் உங்கள்அனுபவத்துக்கூடானது.
அது அழகாவேயிருக்கிறது.அனுபவம் விவாதத்துக்குரியதல்ல.

இன்னொருவர் வாழ்க்கையில் இந்த நோய் அளித்த அனுபவம் படத்துக்கு இன்னொரு பார்வையைத்தரும்.படம் பார்ப்பது இன்னொரு அனுபவமாக இருக்கும்.நான் ஏராளமான ஜோன் நாஷ் களை அனேகமாகக்கண்டிருக்கிறேன்.

பாதிக்கப்பட்டவர்கள் இதையெல்லாம் படித்து பதில் எழுத மாட்டார்கள்.(ஒரு சாதி இனம் பற்றிய பார்வையில் ஒன்றைத்தவற விட்டாலே ஆயிரம் பேர் தங்கள் கருத்தை எழுதுவார்கள்)அவர்களுக்காக இந்தப்பார்வையை முன் வைக்க வேண்டியிருந்தது...அது அவர்களுக்கு நன்மை செய்யக்கூடும்.
அவர்கள் பக்கத்திலிருந்தான பார்வைதான் இது.


Through A Dark Glass(1961) பார்த்தீர்களா..அதுவும் மனச்சிதைவுக்குள்ளானவர் பற்றியதுதானே.
Forest Gump ஒரே அதிர்வு எனக்கும்.
நன்றி

natbas said...

"hallucinations ஏற்படுத்தப்படுபவையல்ல .தானாகவே ஏற்படுவது."

ஒரு ஐயம். மனச்சிதைவு அடைந்தவரின் மன ஓட்டங்கள் எந்த அளவுக்கு அவர் வசம் இருக்கின்றன? மிக சுலபமாக, "நீ புத்தகங்கள் படிக்காதே" "நீ அதிகம் யோசிக்காதே" "எல்லாரோடும் சிரித்துப் பழகு" "காதில் கேட்கிற குரல்களை அலட்சியம் செய்தால் அவை போய் விடும்" என்பது போன்ற அறிவுரைகளைத் தருகிறார்கள். சொல்லப்போனால், பாதிக்கப்பட்டவரையே அவரது கதிக்குக் காரணக்கர்த்தா ஆக்கி விடுகிறார்கள்- அவர்களது மனநோய் நிஜவாழ்வின் பிரச்சினைகளிலிருந்து தப்பிபோக அவர்கள் தேர்ந்தெடுத்த escapist avenue என்கிறமாதிரி. இது சரிதானா?

A doctor said...

@natbas
thanks

மகன் மனநிலைசரியில்லாமல் போனால் உன்னால்த்தான் அவனுக்கு இந்தநிலை என்று மருமகளைக்குற்றஞ்சாட்டுவார்கள்.சூனியம் வைத்துவிட்டார்கள் என்று சொல்லுவார்கள்.இப்படித்தப்பிக்கிறான்.நடிக்கிறான் என்பார்கள். இந்த விளக்கங்கள் எல்லாம் அறியாமையால் வருவது.
மனச்சிதைவு பல படிகள் வகைகள் கொண்ட ஒரு நோய்.அதனால் ஒருவரின் அறிகுறிகள் இன்னொருவரிலிருந்து வித்தியாசப்படும்.
Insight –தன்னிலையுணரும் தன்மை இது மன நோய்களின் சிகிச்சையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.தனக்கு ஏற்பட்டிருப்பது மனநோய் அதனால்தான் இப்படி நிகழ்கிறது என்று ஒருவர்க்கு தெரிந்தால்தான் அவர் குரல்களை அலட்சியம் செய்யலாம்.மனதை வேறு விடயங்களில் செலுத்தி இந்த மாய உணர்வுகளிலிருந்து தன்னைப்பிரிக்கலாம்.எண்ணவழிசிகிச்சை முறை கூட உதவுகிறது.
insight ஏற்படுத்துவதில்தான் சிக்கல் இருக்கிறது.insight இல்லாதவருக்கு அது புரியாது.
ஜோன் நாஷ் விஞ்ஞான ரீதியில் சிந்திக்கக்கூடிய ஆற்றல் இருந்ததனால் தர்க்கரீதியாக இது நிஜமில்லை என்று அவர் தனக்குத்தானே நிரூபிக்கக்கூடியதாக இருந்திருக்கும் அது அவருக்கு insight ஏற்பட்ட பிறகா?தெரியவில்லை.
ஒவ்வொருவரையும் தனித்தனியாக அணுகவேண்டும்.அவர்களுக்கென்றே ஒரு வழியைக்கண்டுபிடிக்கவேண்டும். மனநோய்களை axis-1,2,3,4 என்றமுறையில்தான் அணுகுவார்கள்.
எங்கள் நாடுகளில் அன்பு செலுத்த குடும்பம் இருக்கிறது ஆனால் அறியாமையால் நிலைமையை மோசமாக்குவார்கள்.இந்த நாடுகளில் எல்லாம் இருக்கிறது குடும்ப ஆதரவு இல்லை.
ஜோன் நாஷின் மனைவி படத்தில் வருவதுபோல இல்லையே.விவாகரத்துச்செய்து பிறகு நோபல் பரிசோடுதான் சேர்ந்தார்கள்

natbas said...

சிக்கலான பிரச்சினைதான். அது மட்டும் புரிகிறது.

ஜெய் said...

// பாதிக்கப்பட்டவர்கள் இதையெல்லாம் படித்து பதில் எழுத மாட்டார்கள்.(ஒரு சாதி இனம் பற்றிய பார்வையில் ஒன்றைத்தவற விட்டாலே ஆயிரம் பேர் தங்கள் கருத்தை எழுதுவார்கள்)அவர்களுக்காக இந்தப்பார்வையை முன் வைக்க வேண்டியிருந்தது...அது அவர்களுக்கு நன்மை செய்யக்கூடும்.
அவர்கள் பக்கத்திலிருந்தான பார்வைதான் இது. //

Excellent work Doctor.. I really appreciate it.. :-)

A doctor said...

@jey

thanks