Automatic Thoughts-Thoughts are not facts
கடையன் கடையில் அரிசிவாங்கப்போயிருந்தபோது அந்தக்கதை அங்கு அடிபட்டது. வேறு ஒன்றுமில்லை.சுப்பத்தா வீட்டுக்கொல்லையில் நேற்று ஒரு கள்வன் நின்றானாம். சுப்பத்தா தற்செயலாக வெளியில் வந்தவள் இருட்டுக்குள் யாரோ நிற்பதைக்கண்டு தன் மகன் சிவராசா என்று நினைத்துக்கொண்டு விட்டாளாம்.’’மேனை செல்லாச்சி வீட்டுக்குப்போறன் கதவைப்பூட்டடா’’ என்று சொல்லிவிட்டு கிழவி செல்லாச்சிவீட்டில் சீரியல் பாத்துவிட்டு வர வீட்டில் இருந்த பொருட்களில் அரைவாசியை கள்ளன் கொண்டுபோய்விட்டானாம்.
இதைக்கேட்டதிலிருந்து செல்லம்மாவுக்கு யோசனையாகப்போய்விட்டது.செல்லம்மாவின் யோசனைக்கு காரணமில்லாமல் இல்லை.அடகு பிடித்துகொஞ்சம் காசும் கொஞ்சம் நகையும் கிழவி வீட்டில் இருந்தது.மகன் சம்பு ஊரில் இல்லை வர இன்னும் இரண்டு நாளாகும்.இருள இருள கிழவிக்குயோசனை கூடிக்கொண்டுபோனது.டோச் லைற் எடுத்துவைத்தால் அது மினுங்கிக்கொண்டு கிடந்தது.உற்றுக்கவனித்தால்தான் அது எரிவது புலப்படும்.எதுக்கும் நல்லாய் இருளமுன்னம் பற்றரி வாங்கி வருவோம் என்று மூலைக்கடைக்குப்போனாள் செல்லம்மா. கடையில் பற்றரி முடிந்துவிட்டதாம்.சந்திக்கடையில் இருக்கும்.ஆனால் போய்வர நன்கு இருட்டிவிடும்.கிழவி அவசரமாய் வீடுதிரும்பினாள்.வீட்டுக்கு திரும்பிவர ஆள் முகந்தெரியாதளவுக்கு இருட்டிவிட்டது.
பக்கத்துவீட்டு அருணகிரிக்கு அன்றைக்கு கெட்டகாலம் .ஆ எல்லாகோழியும் கூட்டுக்குள்ளை ஏற ஒரு கறுப்புக்கோழி மட்டும் செல்லம்மாவீட்டிலிருந்த பூவரசமரத்தில் இரவு தங்கத்தொடங்கியிருந்தது.அருணகிரி வேலை முடிந்த களைப்போடு வந்தவர் மனைவியின் நச்சரிப்பால் செல்லம்மா வீட்டுக்கேற்றைத்திறந்து கிழவியைக்கூப்பிட்டுப்பார்த்தார்.பதிலில்லை.உள்ளே சென்று கதவையும் தட்டிப்பார்த்தார். சத்தமில்லை.கிழவி வெளியில் போயிருக்கவேண்டும்.இருட்ட முன்னம் கோழியைப்பிடிக்கவேண்டும் கிழவிக்கு அவரில் நல்லபற்று கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவர் அவர்தான்.கிழவிக்குப்பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு பின்பக்கம்போனவர் அந்தமரத்தில் தாவியேறி கோழியை நோக்கி முன்னேறத்தொடங்கினார்.
அவசரமாக வீட்டுக்குத்திரும்பியகிழவி வெளிக்கதவைப்பூட்டிவிட்டு பின்பக்க யன்னலை பூட்டும்போதுதான் அந்தநகரும் உருவத்தை மரத்தடியில் பார்த்தாள்
முன்பக்கமாக வந்து ராசன் வீட்டுப்பக்கமாய் யன்னலூடாக
‘’ஐயோ ஐயோ கள்ளன் கள்ளன் ஓடியாங்கோ’’கத்தினாள்.அவளுடைய அலறல் இரவைப்பரபரப்பாக்கியது.ஊரைத்திரட்டியது
இந்தச்சம்பவத்தை ஒரு முறை அலசிப்பார்ப்போமா.
சுப்பத்தாவுக்கு இருட்டில் நின்ற ஆள் மகன் போலத்தோன்றியது.
அவள் அது மகன் என்று நினைத்துக்கொண்டாள்.இப்படி சட்டென்று தோன்றும் எண்ணத்தை தோன்றும் எண்ணங்கள் அல்லது பளிச்சிடும் எண்ணங்கள் –Automatic thoughts எனப்படும் எனப்பார்த்தோம்.
சுப்பம்மாவில் இந்த எண்ணம் ஒரு பாதுகாப்பு உணர்வைத்தோற்றியது. தோன்றிய எண்ணத்தை அவள் உண்மை என்று நம்பினாள்.அதன் விளைவான செயல் கதவைப்பூட்டவில்லை
ஒரு தோன்றிய எண்ணத்தை இங்கு உண்மை என்று நம்புவது நடக்கிறது.
எம்முள் தோன்றும் எண்ணங்கள் எல்லாம் உண்மைகளல்ல என்பதை நாம் பலதடவைகள் உணருவதில்லை.
எண்ண வழிச்சிகிச்சைமுறையில் முதலில் கற்றுத்தருவது எண்ணங்களுக்கும் உண்மைத்தகவல்களுக்கும் உள்ள வேறுபாட்டை. அதுவும் சில சந்தர்ப்பங்களில் தோன்றும் எண்ணங்களை உண்மை என்று நம்பி கவலைப்படுகிறோம்.பயங்கொள்கிறோம்.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்றொரு பழமொழி உண்டு.
செல்லம்மாவின் மனதில் திருடன் வருவான் என்கிற எண்ணம் மனதில் பதிந்துவிட்டது. அவள் ஒரு உருவத்தைக்கண்டவுடன் திருடன் என்றே முடிவுகட்டி விட்டாள். அது அதீத பயத்தை உருவாக்கியது. விளைவு?
ஒரு சம்பவத்தை இப்படி தோன்றும் எண்ணங்களுக்கூடாக விதம் விதமாகப்புரிந்து கொண்டு உணர்ச்சி வசப்படலாம் அல்லது செயற்படலாம்.
மேலும் சில உதாரணங்களைப்பார்ப்போம். வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அதற்கு நேரே தோன்றிய எண்ணங்களை அதன் விளைவான உணர்ச்சியை அல்லது செயலை பட்டியலிட்டுப்பார்ப்போமா?
- விமானப்பயணம்—நடந்த விபத்துப்பற்றிய எண்ணம்- பயம்
- விமானப்பயணம்- நண்பனின் பயண அனுபவம் தோற்றிய சுகமான எண்ணம்- சந்தோஷமும் எதிர்பார்ப்பும்
- அன்புக்குரியவருக்கு கோல் எடுக்க பதில் இல்லை—தன்னைப்புறக்கணிக்கிறார் என்ற எண்ணம் தோன்றுதல் – கவலை- செயல் அடுத்த நாள் முகத்தை திருப்புதல் அவர் கோல் எடுத்தால் பேசாது விடல்
- அன்புக்குரியவருக்கு கோல் எடுக்க பதிலில்லை— ஏதோ நடந்திருக்குமோ என்று தோன்றுதல்-பயம்- ஆளைச்சந்திக்க ஓடுதல்.
- நோய்வாய்ப்பட்டுள்ளவர் சுகம் விசாரிக்க முக்கிய நபர் வரவில்லை- காரணம் அவருக்கும் வரமுடியாதசிக்கல்
- அலட்சியப்படுத்துகிறார் என்று நினைத்தல்-கோபம் அவரோடு உறவை முறித்துக்கொள்ளல்.
- அல்லது - தான் ஒரு தாழ்வான ஆசாமி- என்னையெல்லாம் யார் கவனிக்கப்போறர்கள் என்ற தாழ்வு எண்ணம் –சோகம்-மனமுடைந்துபோதல்
இப்படி உணர்வுகள் தோன்றுவதற்குக்காரணம் மேலே ஒவ்வொரு நபரும் தான் நினைப்பதை சரியென்று நம்புகிறார்கள்.
கோல் பதிலளிக்காமல் விடுவதற்குப்பலகாரணங்கள் இருக்கும்.
நோயாளியைப்பார்க்கவரமுடியாமல் போவதற்கும் பலகாரணங்கள் இருக்கும். விமானம் விழுவதற்கான சாத்தியம் மிகக்குறைவானதே.
எண்ணவழிச்சிகிச்சையில் ஒரு சம்பவத்தை அது தோற்றுவிக்கும் எண்ணத்தையும் அந்த எண்ணம் சரியானதா என்பதையும் ஆராய்வார்கள். ஆராயும் போது உண்மைத்தகவல் கிடைக்கும். அப்போது விளைவான சோகம், தாழ்வுமனப்பான்மை, மனச்சோர்வு, பய உணர்வு அற்றுப்போய்விடும்.
மேலே பார்த்தது எண்ண வழிச்சிகிச்சையில் ஒரு செயன்முறை.
எண்ணங்களையும் உண்மை நிலையயும் வேறு பிரித்தறிதல் அது.(Thoughts and The facts. Thoughts are not the facts)
’’இதென்ன ஊர் இது. எல்லோரும் ஆராவது கத்துவாங்களா எண்டு பாத்துக்கொண்டிருப்பாங்களோ.
’’ஒரு கூப்பிட்ட குரலுக்கு இவ்வளவு வேகமாகவா வருவார்கள்.இது என்ன சனம் இதுகள்.அது கிழவிக்கு தான் கண்தெரியாதெண்டால் ஒரு டோச்சைக்கொண்டு வந்து அடிச்சுப்பாத்திருக்கலாம்’’ என்று அருணகிரிசொல்லிக்கொண்டிருந்தார் மனைவிக்கு.
’’உள்காயத்துக்கு புளியமிலை தண்ணிலை குளிச்சால் நல்லதாம் ‘’ என்றாள் அவர் மனைவி.பெரிய அண்டாவில் தண்ணீர் வைத்து அடுப்பை ஊதிக்கொண்டே.
‘’ எனக்கு ராசன் இலை டவுட்டாயிருக்குது.என்னை எண்டு தெர்ஞ்சுகொண்டுதான் அடிச்சிருப்பானோ’’
‘’ சும்மாஇருங்கோ இனி நீங்கள்,…… தலையிலை அடிபட்டதாலை மூளை கலங்கிப்போச்சுது; அவன் அதெல்லாம் மறந்துபோனான் அவன் தான் புளியமிலை கொண்டுவந்து தந்தவன் போட்டு உருவச்சொல்லி’’
‘’ யாரோ ‘’வாங்கின கடனைத்தீர்க்கிறன்’’ எண்டு சொல்லி அடிச்ச மாதிரி நினைவு”
என்றார் அருணகிரி வீங்கிய முகத்துக்குப்பின்னால் இருந்து.
(பெயர்,சம்பவம் கற்பனையே)

3 comments:
அருமையாக எழுதுகிறீர்கள். இதை நிறைய பேர் படிப்பதில்லை என்பது வருத்தமாக இருக்கிறது- என்ன செய்வது, நம் ஆட்களின் உயரம் அவ்வளவுதான் (லேபல், ப்ரோஜெக்ஷன், தன்னை மையப்படுத்திய சிந்தனை எல்லாம் பிரசன்ட் டாக்டர்!)
நன்றி நண்பரே.
பதிவுலகம் சமுகத்தை பிரதிபலிப்பது.
பதிவுவெளி ஒரு சமுகவெளியாகத்தான் அனேகம் உபயோகிக்கப்படுகிறது.ஊடாடுதல்தான் அதன் முதல் இலக்கு.விஷயஞானம் என்பது துறை சார்ந்தது.தேவைப்படும்போது நாடப்படுவது. உதாரணமாய் மஞ்சட்காமாலை பற்றிய ஒரு கட்டுரையை ஒருவர் குடும்பத்தில் மஞ்சட்காமாலை வந்தால் தேடிப்படிப்பார்.முதலேயே அதைப்படித்து நினைவில்வைத்திருப்பார் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.தினமும் படிக்கும் இன்பத்துக்காக படிக்க எவ்வளவோ இருக்கிறது.
தேவைப்படும்போது படிக்கட்டுமே.
ஆமாம், சரிதான். பிழையான கருத்து தெரிவித்தமைக்கு வருந்துகிறேன்.
Post a Comment