Sunday, June 20, 2010

சமூகம் தந்த வைரஸ் ; மாறிப்போன மனம் என்னும் மென்பொருள்!

cognitive therapy in Practice. எண்ணவழிச்சிகிச்சை ஒரு செயன்முறை உதாரணம்:

ஒரு சம்பவம் ;ஒரு சிந்தனை; ஒரு உணர்வு:
அந்தப்பெண் சிரிக்கவில்லை.
‘’ உங்களுக்கு என்ன செய்யவேண்டும்’’ தொனி விறைப்பாக இருந்தது. அவள் முகத்தில் சிரிப்புக்கூட இல்லை.முகம் இறுகிப்போய் இருந்தது.
வழமையாக இங்கு அனேகர் மிகவும் குழைவாகப்பேசுவார்கள்.வாடிக்கையாளரை மரியாதையாகவும் அதேன்நேரம் ஒரு நட்புத்தொனியோடு அளவளாவுவதுபோல ‘எப்படி நாள் இன்றைக்கு ?’’ என்று ஒரு கேள்வியோடு தொடங்கும்.
ஒரு வேலை முடிந்து வெளியில் வருகிறபோது எங்கள் தேவையை ஒரு உரிமையோடு செய்து விட்டு வருவதான உணர்வு வரும்.
அவளுடைய இறுக்கம் எனக்கும் தொற்றிக்கொண்டது.உள்ளே எழுந்த அசௌகரியத்தோடு நானும் விபரங்களை சொன்னேன்.
வெளியில் வந்தபோது மனம் சோர்ந்துபோய் இருந்தது.ஒரு புறக்கணிக்கப்பட்ட உணர்வு.
அன்னியமான உணர்வு.

    இந்தவெள்ளைக்காரப்பெண் ஏன் இப்படி நடந்து கொண்டது?
    இப்படி கேள்வி எழுவது நியாயமானதே. இப்படி கேள்வி எழும்போது அதற்கு மனதில் ஒரு பதிலும்  தோன்றிவிடுமே. அவற்றைத்தான்  தோன்றும் எண்ணங்கள் –Automatic thoughts என்போமே.
‘’என்ன செய்வது எங்கள் தோலின் நிறம் அப்படி’’ இப்படித்தான் சட்டென்று தோன்றியது.அந்தப்பெண் நிறவெறி பிடித்தவளோ?

   இப்படி ஒரு சம்பவமும் ஏற்படும் மன உளைச்சலும் எமக்குப்புதிதல்ல. இனம் சாதி ,தோலின் நிறம் ஊடாக மனிதனைப்பார்க்கிற பெரும்பான்மையோர் வசிக்கிற உலகம் என்று சொன்னால் அது மிகையாகிப்போய்விடாது.
 மேற்படி சம்பவம் ஒரு மிகச்சிறிய ஒரு சாதாரண சம்பவம். சிறிய ஒரு மன வேறுபாடு.
 உலகம் எங்கும் இருக்கிற புறக்கணிக்கப்படுகிற ,தாழ்த்தப்படுகிற மக்கள் அனேகர் இப்படி வெளிப்படையாகத்தெரியாத ஒரு புறக்கணிப்பை அது இருந்தாலும் இல்லாவிட்டாலும் உணர்பவர்களாகத்தான்  இருக்கிறார்கள்.
 ஏன்?
மேற்படி சம்பவத்தை என்னை ஒரு எண்ணவழிமுறையில் ஆராய்வோம்.

 ‘’ உமது மனம் சோர்வடைந்ததா?’’
ஆம்
‘’என்ன காரணம்’’
‘’ அந்தப்பெண் சிரிக்கவில்லை. வழமையாக இருக்கும் குழைவான பேச்சில்லை’’
‘’ ஒருவர் உம்மோடு சிரித்து சந்தோஷமாகக் கதைக்கவில்லை என்றால் ஏன் அது உங்களைக் கவலைப்படுத்துகிறது’?
‘’ ம்ம்ம்…நான் நினைக்கிறேன்.. அப்படி அவர்கள் கதைக்கவில்லை யென்றால்  அவர்களுக்கு என்னைப்பிடிக்கவில்லை என்று உணர்கிறேன்.’’
‘’உங்களுக்குப்பிடித்தவரிடம் மாத்திரமா நீங்கள் சிரித்துப்பேசுவீர்கள்?’’
‘’ அப்படி என்றில்லை.புன்முறுவலோடு சிரித்துப்பேசவேண்டியது தொழில் முறையில் தேவையாயிருக்கிறது.பிடித்ததோ பிடிக்கவில்லையோ சிலவேளைகளில் பேசத்தான் வேண்டியிருக்கிறது’’

‘’நீங்கள் சிரித்துப்பேசாத சந்தர்ப்பமும் இருக்கிறதா
‘’ நான் உள்ளூர கவலையாயிருக்கிற சந்தர்ப்பத்தில் சிரித்துப்பேச முடிவதில்லை’’

’’அந்தப்பெண் உள்ளூரக்கவலையாயிருந்திருப்பாளா?’’
’’ இருந்திருக்கலாம்.’’
Cognitive Distortion-எண்ணவழு:
இந்த இடத்தில் முதலாவது தவறு பிடிபட்டுவிடுகிறது


ஆக இந்த இடத்தில் எனக்கு ஏற்பட்ட சிந்தனை வழு –மனமறிதல் தன்னிலைப்படுத்தல் போன்றது.
நான் அவளுடைய முகவாட்டத்துக்கு நான் காரணம் என்று நினைத்து விட்டேன் Personalization.அடுத்தது அவள் நிறத்தைப்பார்த்து எடை போடுபவள் என்று நினைத்து விட்டேன்.-Mind Reading,
 vertical descent- மனதினுள் இறங்குதல்:
கேள்விகள் இன்னும் முடியவில்லை. இப்படி சட்டென்று நிறவெறி வகைக்கும் நான் போவதற்கான காரணம் என்ன?

  ஒக்கே அவள் உங்களைப்பார்த்து சிரிக்காததால் அவளுங்களை வெறுப்பதாகத்தோன்றி விட்டது.’’

‘’ ஏன் அப்படி அவள் உங்களை வெறுக்கவேண்டும் ஒரு முன்பின் தெரியாத மனிதரை?
‘’ அதைத்தான் நான் யோசித்துப்பார்த்தேன். ஓரே காரணம் என் தோலின் நிறம்’’
‘’ ஏன் தோலின் நிறம் என்ன சிக்கல்’’
‘’என் தோல் கறுப்பு’’
‘கருப்பு வெளுப்பு என்ன வேறுபாடு ?’
கருப்புத்தோல் தாழ்வானது வெறுப்பை ஏற்படுத்துவது’’
‘’ஏன் அப்படிச்சொல்கிறீர்கள்?’’
‘’அந்த அபிப்பிராயம் வெள்ளைக்காரருக்கு இருக்கிறது’’
‘’சரி இந்த இடத்தில் நீங்களும் அந்த வெள்ளையினப் பெண்மணிக்கு மிடையிலான ஒரு சில கணங்கள் அவை. அந்த ஒரு சில வினாடிகளில் ஒரு பொதுவான அபிப்பிராயத்தைக்கொண்டு வந்து அங்கே பொருத்தியிருக்கிறீர்கள். ’’வெள்ளைத்தோலுள்ளவரைச்சந்திக்கும்போது நீங்கள் கறுப்பு என்ற உணர்வு –பிரக்ஞை உங்களுக்குள் வந்து விடுமா?’’

‘’அப்படித்தான் நினைக்கிறேன்’’

‘’ஏன் அப்படி வருகிறது’’
‘’அவர்கள் என்னைத்தாழ்வாக நினைக்கிறார்களோ என் தோலை வைத்து என்னை மதிப்பிடுவார்களோ என்ற எண்ணம்’’
‘’அதாவது உங்கள் நிறம் தாழ்வானது என்ற ஆழமான பதிவு உங்களில் இருக்கிறது’’
‘’ அப்படி ஒரு எண்ணம் ஏற்படுத்தப்பட்டது என்று நினைக்கிறேன்’’

இப்படி வினாக்களைத்தொடுத்துகொண்டு போனால் ஒரு இடத்தில் அது தரை தட்டிவிடும். இந்த முறையை vertical descent என்பார்கள். மனத்தினுள் இறங்குதல் என்றும் சொல்லலாம்.
  இந்த முறை ஒருவரின் உள்ளக்கட்டமைப்பை schema அறிய உதவும். விளக்கிச்சொன்னால் வாழ்க்கை , வளர்ப்பு அனுபவங்களிலிருந்து எங்களுக்குள் எங்களைப்பற்றிய ஒரு பிம்பம் அல்லது பிரக்ஞை உருவாகியிருக்கும். இந்தப்பிரக்ஞை தான் சம்பவங்கள் பற்றிய புரிந்துணர்வைத்தறுகிறது.
 மேற்படி சம்பவத்திலுள்ள ‘’நான்”” இனுடைய பிரக்ஞை இரண்டு தன்மையைக்கொண்டிருக்கிறது.
ஒன்று அங்கீகாரத்தை எப்போதும் எதிர்பார்க்கும் தன்மை. அதனால்தான் அந்தப்பெண்ணின் சிரிக்காத தன்மை மனதில் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியது. பலர் சிரிக்காததை பொருட்படுத்துவதேயில்லை.
இரண்டாவது தோலின் நிறம் தாழ்வான ஒன்று அதனால் தான் தாழ்ந்தவன் என்ற நினைப்பு.
இது வாழ்க்கையின் பல அனுபவங்களிலிருந்து உருவானது.
  
இனம்,சாதி,தோலின் நிறம் என்பவை மனித மனங்களுக்குள் இந்த தாழ்வான பிம்பத்தை உருவாக்கிவிடுகின்றன.
    
சமுகம் உருவாக்கிய வைரஸ்.மாறிப்போன மனமென்னும் மென்பொருள்
சாதிய உணர்வு என்பது மனித மனதில் இரு துருவங்களை உருவாக்கிவிடுகிறது. நாங்கள் உயர்ந்தவர்கள் என்ற பிரக்ஞை உடையவர்களும் நாங்கள் தாழ்ந்தவர்கள் என்ற மனப்பிம்பம் உடையவர்களையும் உருவாக்கிவிட்டிருக்கிறது.
 சாதியத்துக்கு எதிரான முன்னெடுப்புக்கள் இன்னொருவகை நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற இன்னொரு மனப்பாங்கை உருவாக்கியிருக்கின்றன.
தாழ்ந்த நினைப்பு சோகத்தையும் சோர்வையும்,தாழ்த்தப்பட்ட நினைப்பு கோபத்தையும் விரக்தியையும், உயர்ந்தவன் என்கிற நினைப்பு இரண்டு விதத்தில் வெளிப்படலாம்.
ஒன்று ஒதுக்குதல்,எள்ளல் மனப்பான்மை அது வெளிப்படையானது.
மற்றது பெருந்தன்மை.இவர்கள் மனதுக்குள் நான் பெரிய சாதிக்கரான் தாழ்ந்தசாதிக்காரனை சமமாக நடத்துகிறேன் என்று நினத்துக்கொள்வார்கள்.
  இப்படி விதமான மனப்பிம்பங்களை உருவாக்குகின்ற ஒரு சமூகம் முள்ளில் விழுந்த சேலை ஆக இருக்கிறது.
 சமுகங்களுக்கு இடையில் பிளவை அதிகரிக்காமல் இந்த மனப்பாங்கை மாற்றுவதற்கு உண்மையில் வேண்டியது குழுச்சிந்தனையில் இருந்து தனிமனிதனை மையப்படுத்திய சிந்தனை வரவேண்டும், அதாவது ஆட்சியதிகாரம், சட்டம் தனி மனித உரிமையை மிக வலுவாகப்பாதுகாக்கவேண்டும்.
  உளவியல் தனிமனிதனின் சிந்தனையை விரிவாக்க செம்மைப்படுத்த முயல்கிறது.
 ஒவ்வொருவரும் தங்கள் பிரக்ஞையை அலச வேண்டும். ஓ ஆழ்மனத்தில் நான் என்னை உயர்ந்தவனாக நினைக்கிறேன்…(வெளியில் அனைவரும் சமம் என்று பேசித்திரிந்தாலும்)……
என்னைத்தாழ்ந்தவனாக நினைக்கிறேன்      அதனால் என் பார்வை திரிபு படுத்தப்பட்டதாக இருக்கிறதென்பதை உணரவேண்டும்.
  மனிதர்கள் அனைவரும் சமம் என்கிறஉணர்வு (மனித உரிமைப்பிரகடனத்தை)  பிரக்ஞையாகும் பொழுதுதான் சாதி என்கிற பிரக்ஞை இலிருந்து விடுபடமுடியும்.

சம்பவத்தின் உண்மை முகம்:
 அடுத்த நாள் அதே இடத்துக்குப்போனேன். அந்த வெள்ளைத்தோல் பெண்மணிதான் அங்கேயிருந்தாள். நேற்றுப்போலவே இன்றைக்கும் அவள் விறைப்பாக இருந்தாள்.
  ‘’ என்ன வேலைப்பளு அதிகமா?’’
‘’ வழமையாகச்சிரித்தபடி இருப்பீர்கள்.’’
‘’ ஸ்ஸ் ஓ முகத்தில் தெரிகிறதா சொறி.மனசு கொஞ்சம் சரியில்லை’. இரண்டு மூன்று நாட்களாக கொஞ்சம் கஷ்டந்தான். என் கணவர் மருத்துவமனையில் இருக்கிறார்.’’
 அவள் இறுக்கந்தளர்ந்து பெருமூச்சுவிட்டபடி சொன்னாள்.
  ’’தாங்ஸ்’’
மீண்டும் மீண்டும் நன்றி சொன்னாள்.
மேற்படி சம்பவம் கற்பனைதான்.



மேலதிகாரி திட்டினால் திட்டு வாங்கிவிட்டு சிரித்தபடி வருவார்கள்.
‘’ என்ன கடுமையான டோஸோ’’
‘’என்ன இண்டைக்கு மனுஷன் மனுஷியிட்டை செமையாய் வாங்கிக்கட்டியிருக்கும் போல அதுதான் இஞ்சை பாயுது பாவம்‘’ சொல்லிவிட்டு இயல்பாய் இருப்பவர்கள் இருக்கிறார்கள்.


எல்லாமே பார்வைதான் அந்தப்பார்வைக்குக்காரணம்  பிம்பம்..
SCHEMA ! .


4 comments:

Abarajithan said...

Nice Post. Good Info.

//அதாவது ஆட்சியதிகாரம், சட்டம் தனி மனித உரிமையை மிக வலுவாகப் பாதுகாக்கவேண்டும்.//

ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தினையும் எண்ணங்களையும் ஆட்சியினாலோ அல்லது சட்டத்தாலோ திருத்த முடியாது என்பது எனது கருத்து. ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவில் கறுப்பின அடிமைத்தனத்தை அழித்த பின்பும், ஏன் இப்போதும் கூட நிறவெறியர்கள் அமெரிக்காவில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால், வெள்ளைக்காரன் ஆட்சியில் ஒன்றி வாழ்ந்த நம் தமிழ் சிங்கள இனங்கள் தற்போது கீரியும் பாம்புமாக மாறியிருப்பது ஆட்சியாளர்களால் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

எனவே, ஒரு இனத்தையோ தனிமநிதனையோ கெடுப்பது எளிது. திருத்துவது கஷ்டம் என்பது புரிகிறது.

natbas said...

நமக்குப் பொதுவான ஒரு எதிரி இருந்தால் நாம் எல்லாரும் ஒன்றுபட்டே இருப்போம்-

"ஆயிரம் உண்டிங்கு ஜாதி- அதில் அந்நியன் வந்து புகலென்ன நீதி!" என்று பாரதியாரே நியாயம் பேசவில்லையா!!!

சொல்கிறேனன்று யாரும் கோபப்பட வேண்டாம், இப்போது நமக்குத் தேவை மக்நீசியர்களின் வருகை- வேற்று கிரகத்திலிருந்து அவர்கள் வந்து மண்ணில் கால் பதித்த மறு நாள் மனித இனம் ஒன்றுபட்டு விடும்.

அதுவரை, "அச்சத்தை கண்டு மட்டும் அஞ்சு!"- என்பதுபோல் "பிரிவினையை உணர்த்தும் உன் மனதைப் பிரித்து உணர்!" என்பன போன்ற எண்ணங்களை விழிப்புணர்வோடு கையாள முயற்சி செய்ய வேண்டியதுதான்.

பயனுள்ள பதிவு என்று சொன்னால் டாக்டர் அடிக்க வருவார் என்று பயமாக இருக்கிறது- ஒவ்வொரு பதிவுக்கும் அதையே சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி!

A doctor said...

@அபராஜிதன் -நன்றி
””ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தினையும் எண்ணங்களையும் ஆட்சியினாலோ அல்லது சட்டத்தாலோ திருத்த முடியாது என்பது எனது கருத்து””

சாதி கலாச்சாரம்??எண்ணங்களை ஆட்சியாள்ர் மாற்றுவதால் தான் இனவாதம் தூண்டப்படுகிறது.வாக்களிக்கத்தூண்டப்படுகிறார்கள்.

தனிமனித உரிமை மதிக்கப்படுகிற சட்டம் வலுவாக இருக்கிற இடங்களில் அதாவது ஆட்சி நன்கே நடக்கிற இடங்களில் இனம் சாதி என்கிற குழு மனப்பான்மைக்குரிய தேவை அற்றுப்போய்விடும்.
தனியாக நின்றால் நியாயம் கிடைப்பத்தில்லையென்பதனால் தான் குழுச்சேருகிறது.
இன்றைக்கு முன்னுக்குவருவதற்குக்கூட ஒரு குழு வேண்டியிருக்கிறது.
நல்லாட்சியில் வளங்கள் உரிய முறையில் பங்கிடப்படும்.பங்கிடப்படாவிட்டால் தனிமனிதன் சட்டத்தின் மூலம் அதைப்பெற்றுக்கொள்ள முடியும்.
அங்கும் சாதி உணர்வு மனதில் இருக்கலாம் அதை வெளிப்படுத்த வழி இருக்காது. ஏனென்றால் சட்டத்தில் அதற்கு தண்டனை இருக்கும்.
சாதி என்பது கலாச்சாரம் அல்ல. அது பொருளாதாரத்தின் அடிப்படையில் உருவானது.
தமிழர்களும் சிங்களவர்களும் ’’வெள்ளைக்காரன்’’ காலத்தில் ஒன்றாக இருந்தார்கள் என்பது தவறு.அடிபட வேண்டிய தேவை இருக்கவில்லை. பிரிட்டிஷ்காரன் இரு இனத்தையும் வெவ்வேறாகக் கவனித்துக்கொண்டான்.
அவனுடைய நோக்கம் பிஸினஸ்.பிசினஸ் சரியாக நடக்கவேண்டுமென்றால் நாட்டுக்குள் குழப்பம் இருக்கக்கூடாது. காந்தியின் போராட்டங்களுக்கு பிரிட்டிஷ் மென்மையான போக்கைக்கடைப்பிடித்ததும் பிசினஸ்காரர்கள் அவர்கள் என்றபடியால்தான்.ஒரு மக்கள் போராட்டம் எவ்வளவு நட்டத்தைக்கொண்டு வருகிறது என்று கணக்குப்பார்த்து விட்டுக்கொடுத்தான்.
அதிகாரத்தில் இருக்கிறவர்கள் பிரிவினையைத்தூண்டுவதுபோலவே ஒற்றுமையைத்தூண்டமுடியும்.அது மிகச்சுலபம்.

பக்கத்து வீட்டுக்காரன் பக்கத்துவீட்டுக்காரனாயிருந்தான் அப்போது.பிரிட்டிஷ்காரன் போகும்போது பக்கத்து வீட்டுக்காரனிடமே எங்கள் வீட்டையும் பொறுப்புக்கொடுத்துவிட்டுப்போய்விட்டான்.இரண்டு வீட்டுக்கும் சேர்த்து பொருள் வாங்கினால் வீட்டுக்குச்சேரவேண்டியதை தருகிறானில்லை.மாட்டை எஙகள் வளவுக்குள்ளும் அவிழ்த்துவிடுகிறான்.கேட்டால் முழுவீடும் தன் பொறுப்பாம்.கேட்கிறவர்களுக்கு அடிபோடத்தொடங்கினான். அடி வாங்கிக்கொண்டிருந்தவர்கள் திருப்பி அடிக்கத்தொடங்க அடிதடியாப்போச்சுது.
வரலாறு மிக ஆழமானது. ஒரு ஓட்டைக்காட்டி இதுதான் கூரை என்று சொல்லமுடியாது
கறுப்பினமக்களின் போராட்டத்தில் ஒரு விடயம் முதலில் அவர்களை அமெரிக்கர்கள் மனிதர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை.சட்டப்படி முதலில் விடுதலை காலப்போக்கில் மனப்பாங்கு மாறியது.முதலில் ஒரு நல்லசட்டம் வேண்டும். அந்தச்சட்டம் அமுலாக்கப்படவேண்டும்.மனங்கள் கொஞ்சமாக மாறவேண்டும். ஆனால் சட்டத்துக்கு நல்ல ஆட்சி??

@நட்பாஸ் நன்றி.
மாக்கியவல்லி பிரின்ஸ் என்ற நூலில் ஒரு பொது பயத்தை உருவாக்கினால் மக்களை ஒன்று திரட்ட முடியும் என்று சொன்னார்.இன்றைக்கு வாக்கு வாங்கும் தந்திரமாக அதுதான் இங்கு பயன்படுத்தப்படுகிறது.இனரீதியான வாக்குகள்.ஆட்சியாள்ர்களால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்.

எங்கள் கலாச்சாரம் சொல்வது ’’யாதும் ஊரே யாவரும் கேளிர்’’

info.thakaval said...

அன்புடையீர் வணக்கம்,

தங்களின் வலைதளம் தகவல்.நெற்றில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் கேள்விகளுக்கு எம்மை தொடர்புகொள்ளவும்.

நன்ரிகள்,

தகவல் இன்ஃபோ நிர்வாகக் குழு.