நின்று விடும் தொலைபேசி மணி
சற்று வெளியே சென்றபோது
அப்போதுதான் வந்துவிட்டுப்போன யாரோ;
அந்த முகம்தானா என்று நினைவூட்டிக்கொள்வதற்குள்
சிக்னலில் விழும் பச்சை
வந்து சேர்வதற்கு
சற்று முன் எரியூட்டப்பட்ட உடல்
எப்போதும் ஒரு கணம்தான் தாமதமாகிறது’’
ஒரு அவசரசிகிச்சைப்பிரிவில் நிமிடங்கள், செக்கன்கள் மிக முக்கியமானவை.
மருத்துவச்சைகிச்சை என்பது காலத்துடனான போராட்டம்.
காலனுடனான போராட்டம் என்றும் சொல்லலாம்.
நிற்கப்போகிற இதயம் , நின்றுவிட்ட இதயம் வெளியேறிக்கொண்டிருக்கிற இரத்தம், போய்க்கொண்டிருக்கிற உயிர் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
ஒரு உயிர் போவதற்கும் பிழைப்பதற்கும் சில கணங்கள்தான் வேறுபாடு.
இதயத்துடிப்பு நின்று 5-6 நிமிடங்களில் மூளை இறக்கத்தொடங்கிவிடும். இந்த மூளைக்காப்பாற்றுவதுதான் உயிர்காக்கும் போராட்டம்.
உறவுகள் பதைத்துப்போக ஊர் கூடி அவசரமாய் ஒரு வாகனம் பிடித்து அவரைத்தூக்கிக் கொண்டோடிவரும்.அவசரசிகிச்சைப்பிரிவின் வாசலில் வாகனத்தை விட்டு இறக்கி ஸ்ட்ரெச்சரில் வைத்துத்தள்ளிக்கொண்டு உள்ளே வர சில நிமிடங்கள்.
அது நடுநிசியாக இருந்தால் மருத்துவரின் அறையைத்தட்ட அவர் வெளியே வந்து நோயாளியப்பார்வையிட சிலகணங்கள்.
இழக்கப்பட்டுக்கொண்டிருக்கும் உயிருக்கான கணங்கள் அவை.
நேரங்கூடி வந்து கண்மடலை இழுத்து கண்பாவைக்குள் மருத்துவர் டோச் வெளிச்சத்தை காட்டுவார்.
கண்பாவை மூளை இறந்தால் முழுவட்டமாக விரிந்துவிடும்.வழமையாக ஒளியைப்பாய்ச்சினால் சுருங்கும்.இது எதுவும் இருக்காது.
சுவாசமோ, இதயமோ நின்று போனால் முதலில் பாதிக்கப்படுவது மூளை. மூளையின் கலங்கள் மிகவும் நொய்மையானவை.இரத்தம் போவது நின்று விட்டால் ஒரு 5-6 நிமிடங்கள்தான் மூளை தாக்குப்பிடிக்கும்.
இதயத்தை மீளத்துடிக்கச்செய்யமுடியும். நின்றுபோன சுவாசத்தை இயந்திரங்களின் உதவியோடு தொடர முடியும். ஆனால் மூளை இறந்து போனால் போனதுதான்.அது மரணம்.
ஆக மருத்துவர்கள் இயற்கை அளீத்த இந்த சில நிமிட நேரத்தில் வேகமாக தொழிற்படவேண்டும்.
அதற்காக வடிவமைக்கப்பட்டதுதான் மீளவுயிர்ப்பிக்கும் செயன்முறை.
இதயத்தை, சுவாசத்தை மீள இயங்கச்செய்து மூளைக்கான இரத்தோட்டத்தை தொடரச்செய்வதுதான் மீள உயிர்ப்பிக்கும் செயன்முறை.
அவசரச்சிகிச்சையில் எப்போதும் தயாரான நிலையில் இருக்கிற ஒரு அவசர சிகிச்சைக்குழு உறவினர்கள் தூக்கிக்கொண்டு வருகிற ஆபத்தான நிலையிலுள்ளவரை சட்டென்று அதற்கேயுரிய கட்டிலில் போட்டு செயற்கைச்சுவாசம் அளித்து, நெஞ்சுக்கூட்டைப்பிசையத்தொடங்குவார்கள்.
இதயத்தைப்பிசையும்போது அது ஓரளவுக்கு இரத்தத்தை மூளைக்கு பாய்ச்சும். செயற்கைச்சுவாசம் ஒக்சிஷனை இரத்தத்தில் கலக்கும்.
இப்படி மூளையைப்பாதுகாத்தவாறே இதயத்தை இயங்கச்செய்யும் மருந்துகளை செலுத்திக்கொண்டு இதயத்தை இயங்க வைக்கும் செயன்முறையில் தேவையேற்பட்டால் கொஞ்சம் மின் அதிர்ச்சி யையும் பயன்படுத்த வேண்டி வரும்.
நின்று விட்ட காரைத்தள்ளிக்கொண்டு போக சிறிது தூரம் போய் அது இயங்கத்தொடங்குவது போல இதயமும் இயங்கத்தொடங்கிவிடும்.
கூடவே ஏன் இப்படி இதயம் நின்று போனது என்பதற்கான காரணத்தையும் கண்டு அதற்கான சிகிச்சையையும் செய்ய இதயம் தொடர்ச்சியாகத்துடிக்கும்.சில நாள் செயற்கைச்சுவாசத்தின் பிறகு அவர் மீண்டுவிடுவார்.
இவ்வளவும் மூளை இறக்காவிடின் சாத்தியமானது.
வளர்ச்சியடைந்த நாடுகள் இந்த இந்த ஐந்து நிமிடங்களுக்கு மிக முக்கியம் கொடுக்கின்றன. 24 மணி நேரமும் மீள உயிர்ப்பிக்கும் முறையில் பயிற்றுவிக்கப்பட்டவர்களைக்(paramedical)கொண்ட அம்புலன்ஸ் தயாராக இருக்கும். சம்பவ ஸ்தலத்தில் வைத்து இதயத்துடிப்பையும் சுவாசத்தையும் ஸ்திரப்படுத்தி வைத்தியசாலைக்கு எடுத்து வருவார்கள். நோயாளிகளை வரவேற்க மருத்துவ மனை தயாராக இருக்கும்.ஒழுங்கு படுத்தப்பட்ட ஏற்கனவே திட்டமிடப்பட்ட அவசரத்துடன் அனைவரும் செயற்படுவார்கள்.
வளர்முக நாடுகளில் இப்படியான வசதிகள் இல்லை.அந்த நேரத்துக்கு வாகனம் கிடைத்து எடுத்துவர வழியில் மந்திரியின் வாகனத்தொடரோ ஆமியோ தடுக்காமல் , வைத்தியசாலை போய்ச்சேர ,ஸ்ட்ரெச்சரும் சிப்பந்தியும் வாசலில் இருந்தால் மருத்துவரும் கதிரையில் இருந்தாரென்றால் மருந்துகளெல்லாம் கைக்கு கிட்டக்கூடியதாக இருந்தால்,கருவிகள் எல்லாம் சரியாக இருந்தால், திறமையான நர்ஸ், கைவளமான மருத்துவர் எல்லாம் இருந்தால்….
இதயமும் நின்றுபோய் சில கணங்களேதான் என்றால் அந்த உயிர் மீளும்.
நோய் கடுமையாகிப்போய்விடுவதற்கும் அவரை எடுத்துவந்து முறையான சிகிச்சை வழங்கத்தொடங்குவதற்கும் இடையேயான நேரத்தில், சின்னச்சின்ன விஷயங்களுக்காக எங்களுக்கெல்லாம்,
ஆனால்
’’உயிர் சொட்டும் கணங்கள்’’ அவை அந்த உயிருக்கு.
இனி ஒன்றும் செய்ய முடியாது என்று உதட்டைப்பிதுக்கி யாரோ ஒரு தந்தையினதோ, தாயினதோ, ஒரு பிள்ளையினதோ... கண்மடல்களை மூடிவிடும்போது மனுஷ்யபுத்திரனின் அந்தக்கவிதைக்கு இன்னும் சில வரிகள் எழுதும் மனம்...
‘’வந்து சேர்வதற்கு
சற்றே……. முன் நின்று விட்ட இதயம்,
.
ஒரு கணம்தான் தாமதமாகியிருக்கும்..
ஒவ்வொன்றிலும்’’.
அதில் ஒன்று:
http://www.vidoemo.com/yvideo.php?cpr-training-video-2009-latest-guidelines-first-aid-safetycare-cardiopulmonary-resuscitation-dvd=&i=NXI3aGFWcWuRpZlpYZWs


0 comments:
Post a Comment