Sunday, July 18, 2010

உன்னைப்பார்த்ததில்லை;கேள்விப்பட்டிருக்கிறேன்! -தொடர்-02

அவர் என் மீது சந்தேகம் கொண்டிருக்கவேண்டும்.
’’சரி பெண்கள், பிள்ளைகள் எல்லாம் அவரவர் வீடுகளுக்குப்போகலாம்’’
என்றார்.
உடனேயே கூட்டம் கலைந்து ஆண்கள் மட்டும் மீந்தார்கள்.
பெரியவர் மீண்டும் கேட்டார்.
‘’இப்ப சொல்லப்பா நீ பேசுவது இங்கு ஒருவருக்கும் புரியவில்லை”

எனக்குள் பாம்புகள் ஏற்படுத்தியிருந்த பயத்தோடு கிராமத்தவர்களின் திடீர்மாற்றம் திகைப்பை அளித்தது.

‘’சொல்லு அதென்ன பாம்புகள்’’

நான் கொஞ்சநேரம் அமைதியாக இருந்தேன். என்ன நடக்கிறது இந்த ஊரில்?.
’’என்னப்பா திருதிரு என்று விழிக்கிறாய்’’  குரலில் காரம் கூடியிருந்தது.

‘’ ஐயா மன்னிக்கவேண்டும். இங்கு  நான் நிறையவே பாம்புகளைக்காணுகிறேன்.பாம்புகள் எனக்கு பயத்தைத்தரும்.’’

’’ பாம்புகளா அப்படியென்றால் என்னப்பா அது ஒரு புதுக்கதை.கேள்விப்பட்டதேயில்லை’’
’’
மன்னிக்கவேண்டும் அதோ அந்த மரத்தருகில் நான் மூன்று பாம்புகளைக்காணுகிறேன்.

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

’’இந்த ஆள் என்னவெல்லாமோ பேசுகிறான்’’

’’அந்த மரத்தடியில் எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை.’’

சரி வாப்பா கிட்டவாகப்போய்ப்பார்க்கலாம்.அதைத்தொட்டுக்காட்டு அப்போதாவாது புரியுதா பார்ப்போம்.

பெரியவர் சொன்னார்.

’’பைத்தியம் பிடித்த ஆளோ?’’ யாரோ பின்னால் கிசு கிசுத்தார்கள்.

பெரியவரைப்பின் தொடர்ந்து நான் மரத்தடிக்குப்போனேன்.
பெரியவர் நடந்து பாம்புகளருகில் சென்றார். பாம்புகளை அவர் மிதிக்கப்போகிறாரென்றுதான் நினைத்தேன்.ஆனால் பாம்புகள் பாதங்களில் நசியுறாமல் விலகி வழிவிட்டன. அவர் மரத்தைச்சுற்றி வந்தார்.
சுற்றியபடியே கேட்டார்.
‘’ என்ன அங்கேயே நின்று விட்டாய் வந்து காட்டு. எதைச்சொல்கிறாய். ஏதாவது பூச்சியா?
நான் சில அடிகள் எட்ட நின்று கொண்டு அந்த பாம்புகளைச்சுட்டிக்காட்டினேன்.
 அவர் காட்டிய இடத்தை கால்களால் துளவினார். உதட்டைப்பிதுக்கினார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.காலில் படாமல்  பாம்புகள் விலகிப்போய்விட்டன.
  திகைத்துப்போயிருந்த என்னை தோளில் கைபோட்டு திண்ணைக்கு அழைத்துப்போனார் பெரியவர்.
 ’’என்ன இதெல்லாம்’’
எப்படிச்சொல்வது? நான் சிலகணங்கள் யோசித்தேன்.
’’ ஐயா என்னுடைய தேசத்தில் பாம்பு என்றொரு உயிரினம் இருக்கிறது. அது புழுவைப்போல ஒரு ஜந்து’’  இப்படிச்சொல்லத்தொடங்கிவிட்டு  எல்லோருடைய முகங்களையும் பார்த்தேன்.யாரும் சிரிக்கவில்லை.
’’சொல்லப்பா கேட்போம்’’
 என்றார் பெரியவர்.
 நான் பாம்புகள் பற்றிய தகவல்களைச்சொன்னேன்.அதன் விஷம் அது தீண்டுவது எல்லாம் சொல்லி நிலத்தில் ஒரு படத்தையும் வரைந்தேன்.
என் பயண முடிச்சிலிருந்து இரண்டு குடுவைகளை எடுத்தேன்.
’’ஐயா காட்டுவழிப்பயணம் என்பதால் பாம்பின் விஷ முறிவு மருந்துகளையும் நான் கொண்டு வருவது வழக்கம்’’
அந்தக்குடுவைகளையும் காட்டினேன்.

’’ஆக அந்த பாம்பை நீ இங்கு பார்க்கிறாய் அப்படித்தானே?
 ஆம் ஐயா
’’இப்பொழுது அவை எங்கே இருக்கின்றன?’’
 ’’அதோ அந்த பாறையின் அருகே ஒரு பாம்பு அது விரியனாக இருக்கவேண்டும்.’’

’’சரியப்பனே. எனக்குத்தான் வயதாகிவிட்டது. கண் தெரியாதென்று வைத்துக்கொள்வோம். என்னடாப்பா உங்களில் யாருக்காவது அந்தப் பாம்ப்பூ தெரிகிறதா?’’

அவர்கள் ஒரே குரலில் ’’இல்லை’’ என்று சொன்னார்கள்.
சிரித்தார்கள்.
 ’’சரி …இந்தப்பகுதியில் அந்தப்பெயரையே நாங்கள் கேள்விப்படவில்லை…
ஒருவேளை உனது மனப்பிரமையாகக்கூட இருக்கலாம்.
இந்தப்பகுதிகளில் சில காட்டுச்செடிகள் இருக்கின்றன. போதையைத்தரும்.பிரமையைத்தரும்.
கொஞ்சம் ஓய்வெடுக்கச்சரிவரும்.

பெரியவர் குரலில் கொஞ்சம் இரக்கம் தெரிந்தது.
நான் சிறிது நேரம் அமைதியாக இருந்தேன்.தூரத்தில் அந்தப்பாம்பு தலையை உயர்த்தியபடியே நின்றது.மாலை வெயிலில் அதன் தோல் பளபளத்தது.
 அட இது வெறும் மனப்பிரமையா? எப்படி?கண்ணுக்கு முன்னால் அது ஊர்ந்துகொண்டிருக்கிறது. இவர்கள் இல்லையென்கிறார்கள்.

  திண்ணையிலிருந்து இறங்கினேன்.
‘’ஐயா அங்கே ஒரு பாம்பு எஞ்சியிருக்கிறது. மற்றவை போன இடம் தெரியவில்லை.நான் அந்தப்பாம்புக்கருகில் சென்று பார்க்கப்போகிறேன்.பிரமையா இல்லையா என்று தெரிந்துவிடும்’’

நான் இப்படிச்சொல்லிக்கொண்டு நடக்க அவர்கள் முறுவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
பாம்பு நீளமான கண்ணாடி விரியன். பிரமைக்கும் நிஜத்துக்கும் என்ன வேறுபாடு. அதன் கண்கள் என் அசையும் கால்களைப்பார்த்தன. மெல்ல அதன் உடல் மண் தரையில் நகர்ந்து கொண்டிருந்தது. அது கொஞ்சம் பின்வாங்கி நான் பயத்தோடும் அங்கலாய்ப்போடும் எட்டி வைத்த பாதத்தின் மீது பாய்ந்தது.

கோபத்தோடு சீறி என்பாதங்களில் தன் பற்களைப்பதித்தது. வலி சுரீரென்று பரவ காலை உதறினேன்.பாம்பு நிலத்தில் விழுந்து ஓடி மறைந்தது.

மரண பீதி பரவி துள்ளி ‘’ஐயோ பாம்பு கடித்து விட்டது ‘’  என்று உரத்துக்கத்தினேன். ,நெருப்பாய் காலில் ஏறிய வலியோடு திரும்பி ஓடினேன்.
ஆனால் அவர்கள் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
- தொடரும்-

7 comments:

போகன் said...

சற்று வினோதமான தளம் உங்களது.நீங்கள் மனவியல் நிபுணர் என யூகிக்கிறேன்.தமிழில் உளவியல் பற்றி சரியான அறிமுகம் இல்லை என்றே நினைக்கிறேன்.மனம் எனும் மென்பொருள் [ என்னுடைய ப்ளாக் ஒன்றின் பெயர்]பற்றி நிறைய எழுதுங்கள்.

Anonymous said...

டாக்டர், கலக்கறீங்க...

என்னதான் நடக்குது?

ஏதாவது அவதார் வேலையா இருக்குமோ?

எத்தனை வேலை இருந்தாலும் சரி டாக்டர் ரெண்டொரு நாளிலே சஸ்பென்சை தீத்துடுங்க...

பில்ட் அப்௦ பலமா இருக்கு... பலே! பலே!

ஃபஹீமாஜஹான் said...

ஒரு கவிதையைப் போல நல்ல தொடக்கம்.தொடந்து படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.

A doctor said...

@போகன்..
நன்றி. உங்கள் ஊகம் தவறு. நான் நிபுணர் அல்ல.கற்றவற்றை பகிர முயற்சிக்கிறேன்.
@பஹீமாஜஹான்
நன்றி கவிஞரே!

@ அனோனிமஸ்
நன்றி

ஃபஹீமாஜஹான் said...

டாக்டர்,பாம்பு தீண்டியவர் எத்தனை நாளாகக் கத்திக் கொண்டிருப்பது? நாங்களும் எத்தனை தடவைகள் வந்து வந்து பார்த்துவிட்டுப்போவது?? எப்போது மிகுதிப் பகுதியைப் பதிவேற்றுவீர்கள்?

A doctor said...

@ஃபஹீமாஜஹான் said...
டாக்டர்,பாம்பு தீண்டியவர் எத்தனை நாளாகக் கத்திக் கொண்டிருப்பது? நாங்களும் எத்தனை தடவைகள் வந்து வந்து பார்த்துவிட்டுப்போவது?? எப்போது மிகுதிப் பகுதியைப் பதிவேற்றுவீர்கள்


???? கவிஞரே கேஸை எப்பவோ குளோஸ்பண்ணியாச்சு.இதற்கு அடுத்தபதிவில். தலைப்பு அறிவு காக்கும் அறியாமை அழிக்கும்.
நன்றி

ஃபஹீமாஜஹான் said...

மன்னிக்கவும். புத்தகக் குறிகளில்
http://www.varasiththan.com/2010/07/02.html என்று போடப் பட்டிருந்ததைக் கவனிக்காமல் மீண்டும் மீண்டும் அதே பக்கத்துக்கே வந்திருக்கிறேன்.தவறு என் பக்கத்தில் தான்