Confirmation Bias.
’யாரை நம்பினாலும் மக்னீசியர்களை நம்பக்கூடாது’’
மிகவும் மோசமான ஆட்கள் அவர்கள்’’
என்றார் அவர் மீண்டும்.
‘’ சும்மா சொல்லக்கூடாது. உங்களுக்கு பக்கத்து வீட்டில் ஒரு மக்னீசியன் இருந்து குடைந்தான் என்பதற்காக எல்லாரையும் இழுப்பது தவறு அது ஒரு பொதுமைப்படுத்துகிற சிந்தனைப்பிறழ்வு(over generalization)’’
‘’போதும் போதும் எனக்கும் அது தெரியும் இந்த பிறழ்வு கிறழ்வு கதையெல்லாம் வேண்டாம்.நான் உண்மையைத்தான் சொல்கிறேன். நான் மற்றாக்களைப்போல அல்ல ஒரு ஆதாரத்தோடதான் பேசுவன்’’
‘’ இதைப்பற்றி ஆராய்ச்சி கூடச்செய்திருக்கிறீர்கள் போல’’
’’நான் கேள்விப்பட்டுக்கதைக்கிற ஆள் இல்லை.இந்த லிஸ்ட் பாருங்கள். இவ்வளவு பேரும் பத்திரிக்கைகளில் அடிபட்ட மக்னீசியர்கள்.
இவர் உமக்கே தெரியும் அரசியல்வாதிக்கு அரசியல்வாதி.
சும்மா சொல்லக்கூடாது அவர் மக்னீசியர்களைப்பற்றி பெரிதாய் அலசித்தான் இருக்கிறார்.பெரிய லிஸ்ட் அது.எல்லா கெட்ட மக்னீசியர்களும் அதில் இருந்தார்கள்.
பார்க்கிற யாருக்கும் மக்னீசியர்களில் ஒரு வெறுப்பு வரும்.
அட வெளித்தோற்றத்துக்குப்பார்க்க அட என்ன ஒரு ஆய்வு என்ன ஒரு ஆதாரம் என்று சிலருக்கு தோன்றவும் செய்யும்.
இப்படி மக்னீசியர்களுக்கென்றெல்ல எதைப்பற்றியும் எவரைப்பற்றியும் இப்படி ஒரு லிஸ்ட் தயாரிக்கமுடியும்.
காரணம் எதுவுமே முழுமையானதல்ல. நல்லது கெட்டது என்பது கலந்தே இருக்கும்.
உடலுக்குப்பக்கவாதம் வந்தால் ஒரு பக்கம் இழுத்துக்கொள்ளும். எங்கள் சிந்தனைகளுக்கும் பக்கவாதம் வரலாம். சிந்தனைகள் ஒரு பக்கமாக இழுத்துக்கொள்ளும்.
எங்கள் பார்வைகள், எங்கள் கருத்துக்கள் , எங்கள் நிலைப்பாடு எல்லாமே இந்த பக்கவாத சிந்தனைக்கூடாகத்தான் வெளிப்படும்.
அனேகமாக பிடித்தது பிடிக்காதது என்கிற இழுப்பு எப்போதும் மனத்துக்கு இருக்கும்.
மேலே உள்ளவருக்கு மக்னீசியரை ஏனோ பிடிக்கவில்லை.அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
.பிடிக்காததற்கான காரணமாக அவர் சொல்வது அவர்கள் கெட்டதன்மை உடையவர்கள் என்பதுதான்.
ஆனால் இவர் கொஞ்சம் அறிவு ஜீவி. பிடிக்கவில்லை என்று நேரே சொல்லிவிடமாட்டார். விஞ்ஞான பூர்வமாக பேசுவது போல ஆதாரங்களைக்கூட அடுக்குகிறார்.
அவர் ஒரு புத்தகங்கூட போடக்கூடும்.பதிவில் போட்டு விளாசக்கூடும்.
ஆனால் அவருடைய தர்க்கம் சிந்தனை விஞ்ஞானத்தினடிப்படையில் மிகவும் தவறானது.
ஒரு கருதுகோளை எடுத்துக்கொண்டு அதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை மாத்திரம் திரட்டுவது உண்மையான ஆய்வாகாது.
இந்தத்தவறை நிருபணச்சார்பு Confirmation Bias என்று சொல்லுவார்கள்.
அதாவது பக்கவாதத்தில் விழுந்த ஆய்வு.
இந்தத்தவறை நாம் எமது வாழ்வில் இயல்பாகச்செய்கிறோம். பிடிக்காத ஒரு மனிதரைப்பற்றிய எல்லாவிதமான குறைகளும் அவர்கள் எமக்குச்செய்த ஊறுகளும் ஞாபகத்தில் நிற்கும்.
‘’ அவனா? அவன் எனக்கு செய்த அநியாயம் கொஞ்ச நஞ்சமல்ல”” என்று தொடங்கி அந்த பிடிக்காத மனிதரின் நல்லகாரியங்களை வசதியாக மறந்து விட்டு தவறுகளை மட்டும் ஆதாரமாக வைப்போம்.
இப்படி பிறர் விஷயத்தில் ஒரு வகை என்றால் சிலர் தன் விஷயத்தில் ‘’ எனக்கு அதிர்ஷ்டமேயில்லை’’ என்று அதற்கு ஆதாரமாக வாழ்வின் துரதிர்ஷ்டமான எல்லா நிகழ்வுகளையும் தேடி பட்டியல் போட்டு போட்டு ‘’இனி ஒன்றும் சரிவராது வரவே வராது ’’ உறுதி செய்து,மனத்தை மேலும் சோர்வாக்குவார்கள்.
இப்படி சார்பான /எதிரான பொயிண்டுகளை மாத்திரம் தேடிபார்க்கும் நினைவில் வைத்திருக்கும் ,எழுதும் ,பரப்பும் சிந்தனை முறை வழக்கொழிந்து போகவேண்டும்.அப்படிப்பட்ட கருத்துக்களை போலித்தர்க்கங்களை, போலிச்சிந்தனாவதிகளை இனங்காணப்பழகிக்கொள்ளவேண்டும்.
ஊடகங்கள்,அதிகாரத்திலுள்ளவர்கள் தங்கள் கருத்துக்களை உறுதி செய்வதற்காக தரவுகள் போதாதவிடத்து செய்திகளை உருவாக்கவும் சம்பவங்களை நிகழ்த்தவும் செய்கிறார்கள்.
எமக்குப்பிடித்தமான ஒரு விடயத்தில் சார்பான கருத்துக்களை மாத்திரம் ஒருவர் தரும்போது உள்ளே குளிர்ந்து போகத்தான் செய்வோம்.
’’நான் சொன்னேனே அது சரியாத்தானிருக்கிறது
,’’என்று திருப்திப்பட்டுக்கொள்ளவும் எங்கள் முதுகை நாங்களே தட்டிக்கொள்ளவும் செய்வோம்.
அதையும் மீறி சீர்தூக்கிப்பார்க்க கொஞ்சம் சக்தி தேவை.
’’சரி இப்ப என்ன சொல்கிறீர்கள் ஆதாரத்தோடு உங்கள் முன் வைத்திருக்கிறேன்”
அவரும் விட்டபாடில்லை.
நான் சிரித்துக்கொண்டே சட்டைப்பையத்துளாவி,.அந்த நீளக்காகிதத்தை வெளியில் எடுத்தேன்.
’’என்ன சிரிப்பு’’ என்றார்.
’’இந்த ஆதாரத்தையும் பாருங்கள்.இது மனிதர்களைப்பிடிக்காத மக்னீசியர்கள் தயாரித்த லிஸ்ட்.உங்களுடைய லிஸ்ட்டை விட இது இரண்டு மடங்கு பெரியது.அதில் இனத்துவேஷிகள் வரிசையில் உங்கள் பெயரும் இருக்கிறது.’’



2 comments:
கடைசில பன்ச் கலக்கல் டாக்டர்!
ஆனா நீங்களும் பைபிளை பற்றி தப்பா படம் போடுறீங்களே?!?!?!
@அபராஜிதன்,
’ஆனா நீங்களும் பைபிளை பற்றி தப்பா படம் போடுறீங்களே?!?!?’’
படம் படைப்புக்கோட்பாடு பற்றியது.பைபிள் பற்றியது அல்ல.படம் சிந்தனை முறையைப்பற்றி பேசுகிறது.
படம் இந்த உளவியல் கோட்பாட்டை விளக்க உபயோகிக்கப்பட்டபடம்.
படைப்பு தியரி எல்லாமதங்களுக்கும் சொந்தம்.கடவுள் மனிதனைப்படைத்தான் என்பதுதான் creationism.
அதில் பிரம்மாவின் அங்கங்களிலிருந்து மனிதர்கள் தோன்றினார்கள் என்பதும் ஒன்று.
விஞ்ஞானம் கூர்ப்பு/பரிணாமம் சம்பந்தமானது.
விஞ்ஞானத்தில் டாவின் என்பவர் தொடக்கிவைத்தது.
’’நீங்களும்’’
அதென்ன நீங்களும் ?நான் ஒரு சிந்தனாவாதியோ, அல்லது த்ததுவஞானியோ அல்ல.உளவியல் கோட்பாடுகளை தமிழில் தர முயற்சிக்கிறேன்.அவ்வளவுதான்.
அது விஞ்ஞான முறை. எமது நம்பிக்கைகளுக்கு அது எதிரானதாக இருக்கலாம். அதற்கு விஞ்ஞானம் பொறுப்பு.creationist vs evolutionist இன் வரலாறு நீண்டது.
நம்பிக்கைகளை நிரூபிக்க ஆதாரம் தேடாமல் உண்மையத்தேட வேண்டும் என்றுதான் மதங்களும் சொல்கின்றன.
Post a Comment