அந்தக்கிராமம் மலைகளுக்கு நடுவில் காடுகள் சூழ இருந்தது.நான் அந்தக்கிராமத்தை அடைந்தபோது மாலையாகிவிட்டிருந்தது.
கிராமத்துப்பாதையில் நடக்கத்தொடங்கியபோது நான் நடுங்கிப்போய்விட்டேன்.
பாதையெங்கும் பாம்புகள்.குறுக்கும் நெடுக்குமாக அவை அசைந்து சென்றன.
கிராமத்தின் தெருக்களில் சிறுவர்களும் குழந்தைகளும் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.வசந்த காலத்தின் தொடக்கம் அது. எங்கும் மகிழ்ச்சி பரவியிருப்பதாகத்தோன்றியது.
ஆனால் எனக்குள் அந்த மகிழ்ச்சி பரவ விடாமல் பாம்புகள் என்னைத்தடுத்தன.கிராமத்துத்தெருக்களிலும் பாம்புகளைக்கண்டேன்.
குழந்தைகளுக்கு அருகில் கூட அவை அசைந்து சென்றன.ஆனால் எவரும் அதைப்பொருட்படுத்தியதாகத்தெரியவில்லை.
பயந்து மெல்ல அடியெடுத்து நடந்துகொண்டிருந்தவனை ஊர் கவனித்தது.
குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் என்னைச்சூழ்ந்து கொண்டார்கள்.
‘’ யாரப்பா நீ’’
என்று கேட்டார் ஒரு பெரியவர்.
‘’ ஐயா நான் ஒரு தேசாந்திரி.மலைப்பாதையிலிருந்து இந்தக்கிராமத்தைப்பார்த்தேன்.இன்றைய பொழுதை இங்கே கழித்து விட்டு போகலாம் என்று வந்தேன்’’
என்னை அவர்கள் ஊரின் நடுவில் இருந்த ஒரு குடிலுக்கு கூட்டிச்சென்றார்கள். பெரிய நீண்ட திண்ணையில் நான் உட்கார என்னைச்சுற்றி ஊர்கூடி உட்கார்ந்திருந்தது.பழங்களும் பானகமும் குடித்தபடியே நாங்கள் பேசத்தொடங்கினோம்.
’’பல ஊர்களைப்பார்த்திருப்பீர்கள் பல தேசம் சுற்றி வந்திருப்பீர்கள். ஆனால் உங்கள் முகத்தில் ஒரு பதற்றம் தெரிகிறது ‘’ என்றார் பெரியவர்.
‘’எங்களைப்பார்த்துப்பயப்படுகிறீர்களா’’ என்று ஒரு சிறுவன் கேட்டான்.
’’ இல்லை இல்லை . இந்தப்பாம்புகளைப்பார்த்துத்தான் பயப்படுகிறேன்.’’ தூரத்தில் இரண்டு நாகங்கள் தலையை உயர்த்தியபடி நின்றன.அவற்றிக்காட்டிச்சொன்னேன்.
அவர்கள் நான் காட்டிய திசையைப்பார்த்தார்கள்.அவர்கள் நெற்றியச்சுருக்கி மீண்டும் என்னைப்பார்த்தார்கள்.
‘’ என்னப்பா சொல்கிறாய்? புரியவில்லை”
‘’ அதுதான் இந்தப்பாம்புகளைச்சொல்லுகிறேன். எங்குபார்த்தாலும் பாம்புகளைக்காணுகிறேன். எப்படி இப்படி பாம்புகளுக்கு பயப்படாமல் இருக்கிறீர்கள்.’’
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
‘’பாம்புகளா? என்ன கதைக்கிறாயப்பனே’’
சட்டென்று பெரியவரின் முகம் மாறியது.
...தொடரும்...
3 comments:
அதிர வைக்கும் பதிவு. படித்ததும் தூக்கி வாரிப் போட்டது.
சரியான சமயத்தில் "தொடரும்" போட்டு விட்டீர்களே!
அநேகமாக அந்த ஊரில் விஷமில்லாத அந்த ஜந்துக்களைப் பாம்பு என்று அழைக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
:௦)
நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.
@நட்பாஸ்
@கிரி
நன்றி.
நேரம் போதாமையால் முழுமையாக எழுதமுடியவில்லை.அதனால்தான் துண்டு போடவேண்டியிருக்கிறது.
Post a Comment