Wednesday, July 21, 2010

அறியாமை அழிக்கிறது! அறிதல் காக்கிறது!

உன்னைப்பார்த்ததில்லை;கேள்விப்பட்டிருக்கிறேன்!-இறுதிப்பகுதி.

அவர்களுக்கு என் நிலையின் விபரீதம் விளங்கவில்லை.அவர்கள் சிரித்துக்கொண்டே இருந்தார்கள்.
நான் ஓடிச்சென்று என் பையிலிருந்த மருந்துக்குடுவையிலிருந்து இரு மிடறு விழுங்கினேன். கசப்பாய் மருந்து இறங்கியது. மருந்து என் .உயிரைக்காத்தாலும் அந்த பாம்புக்கடியும் வலியும் தரும் பாதிப்பிலிருந்து மீள ஒரு வாரமாவது எடுக்கும். இந்தக்கிராமத்தில் பாம்புகளோடும் இந்த மனிதர்களோடும் ஒரு வாரம் தங்குவதை நினைக்கவே அசதியாய் இருந்தது.
வலியேறிய காலை மெல்லத்தூக்கினேன்.பாதத்தில் இரண்டு சிகப்பு பொட்டாய் பல்லடையாளம் கிடந்தது.அதிலிருந்து இரத்தம் பூப்பது போல விரிந்தது.
அவர்கள் சிரித்துக்களைக்க பெரியவர் அருகில் வந்தார்.

‘’ என்னப்பா உனக்குப்பிரமை கூடிவிட்டதோ காத்தைப் பாத்து ஆடி ஓடுகிறாய் சிரிப்பாய்த்தான் இருக்கிறது’’
நான் நெற்றியில் வழிந்த வியர்வையைத்துடைத்தபடி சொன்னேன்.
‘’ நீங்கள் என்னோடு விளையாடுகிறீர்களா? உங்களுக்கு அந்தப்பாம்பு கண்ணுக்குத்தெரியவில்லையா? எனக்கு வலிதாங்க முடியவில்லை.இங்கே பாருங்கள் இரத்தம் ‘’ காலைத்தூக்கி திண்ணையில் வைத்தேன்.அது வீங்கத்தொடங்கியிருந்தது.
கோடாய் இரத்தம் வழிந்திருந்தது.
 எல்லார் கண்களும் என் காலில் பதிந்து நிலை குத்தின..சட்டென்று எல்லாம் மாறிப்போய்விட்டது.
சிரிப்புகள் உறைந்து போய்விட்டன. கண்கள் விரிந்து பீதி படர்ந்தது. பெரியவர் சட்டென்று இரு அடிகள் பின்வாங்கினார். கூட்டம்  அமைதியாகிவிட்டது.
சிலர் வாய்களைப்பொத்தியபடியே பின்னால் நகர்ந்தார்கள்.

’’என்ன என்ன?’’ அலறினேன்

‘சொல்கிறேன் பொறு ‘’ என்ற பெரியவர் .

’’வீரப்பத்திராயனைக்கூட்டிவா’’ என்று யாரிடமோ சொன்னார்.

பிறகு என்னிடம் பேசத்தொடங்கினார்.
’’அப்பனே உன் நிலையை நினைக்க வேதனையாகத்தானிருக்கிறது. நான் ஒரு விஷயத்தை உனக்குச்சொல்லவில்லை.இந்த ஊரில் கெட்ட ஆவிகளின் அட்டகாசம் அதிகம்.நீ  படுத்திருக்கும் போது உன் மீது வழுப்பாக ஏதாவது ஊரும் .பார்த்தால் ஒன்றும் இருக்காது. காலில் மிதிபடும். காலை வாழைத்தண்டு சுற்றுவதுபோல இருக்கும்.
ஆனால் ஒன்றுமிருக்காது.
ஆனால் சிலவேளைகளில் இந்தப்பேய்கள் கோபங்கொண்டுவிடும் .அவை உடலுக்குப்புகுந்து இரத்தத்தைக்குடிக்கும்.
வழுக்குப்பேய், வாழைப்பேய்,இரத்தக்காட்டேறி

இதில் இரத்தக்காட்டேறி பயங்கரம். துரதிஷ்டவசமாக உன்னை இரத்தக்காட்டேறி அடித்து விட்டது.’’

 ’’ஐயா என்ன இது முட்டாள்தனம்..பாம்பு கடித்து விட்டது…’’
நான் இயன்றவரை கத்திச்சொன்னேன்.

சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஆட்கள் என்னைத்தூக்கி ஓலைத்தடுக்கில் கிடத்தினார்கள். என்பையை யாரோ என்மீது வைத்தார்கள்.
பாம்புக்கடி பாம்புக்கடி
நான் புலம்பிக்கொண்டேயிருந்தேன். அது யாருக்கும் புரிந்ததாகத்தெரியவில்லை.


எல்லோரும் காத்துக்கொண்டிருந்த வீரப்பத்திராயன் வந்து சேர்ந்தான்..பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தான்.என் கண்களை அவன் பார்க்கவேயில்லை.நான் பேசிய எதையும் காது கொடுத்துக்கேட்கவில்லை

வார்த்தைகளை உச்சரித்துக்கொண்டே என்மீது எதையோ தெளித்தான். தூவினான்.என் மீது துப்பினான்.வேப்பிலையால் அடித்தான்.இறுதியில் நான் தடுக்கோடு தூக்கப்பட்டேன்.

’’என்னை என்ன செய்யபோகிறீர்கள்.
என்னை விடுங்கள்’’ என்னால் பலமாகக்கத்தமுடியவில்லை.

‘’எங்கள் கைகளில் ஒன்றுமில்லை. ஊர்வழக்கப்படி உன்னைக்காட்டுக்கோயிலில் வளர்த்திவிடுவோம். மூன்று நாட்களின் வந்து பார்ப்போம்.’’
பெரியவர் பதில் சொல்வது கேட்டது.. அதற்குப்பிறகு எனக்கு எதுவும் காதில் விழவில்லை.உடுக்கொலி போல ஏதோ ஒன்று ஒலிக்கத்தொடங்கியது. தீப்பந்தங்களும் புகையும் நிறைய அவர்கள் என்னைக்காவிக்கொண்டு நடக்கத்தொடங்கினார்கள்.

நான் களைத்துசோர்ந்துபோயிருந்தேன்.எதுவேண்டுமானாலும் நடக்கட்டும். காட்டுக்கோயிலில் விடட்டும்.மருந்தைக்குடித்துக்கொண்டு படுத்துறங்கிவிட்டு பகலில் இடத்தை விட்டு போய்விடவேண்டுமென்று நினைத்துக்கொண்டேன்.
 நன்றாய் இருட்டி விட்டது. கிராமத்தவர்கள் போய்விட்டார்கள்சத்தங்கள் ஆரவாரங்கள் எல்லாம் அடங்கிப்போய் கோயிலில் மூலையில் எரிந்த விளக்கின் மங்கலான  விளக்கொளியில் நான் கிடந்தேன்..அது ஒரு சிறிய கோயில்.கருப்பான நிழலாய் ஒரு சிலை இருப்பது தெரிந்தது.கோயிலின் கூரையில் இருந்து கயிறுகள் தொங்கின.கால் இன்னமும் வலித்துக்கொண்டேயிருந்தது. காட்டின் அமைதி எங்கும் பரவிக்கிடந்தது.
நான் பெருமூச்சுவிட்டேன்.தடவி என்பையை இழுத்து மருந்துக்குப்பியிலிருந்து ஒரு மிடறு விழுங்கினேன்.
   படுத்திருந்தபடியே கண்களை மூடி ஆரம்பத்திலிருந்து யோசிக்க என்ன நடக்கிறது என்பது ஓரளவுக்குப் புரிந்தது. இந்தக்கிராமத்தவருக்கு பாம்புகள் பார்வைக்குத்தென்படுவதில்லை.பாம்புகளுக்கு அவர்களைத்தெரிகிறது.பாம்புகள் அவர்களுடன் சகஜமாக பயமின்றி வாழப்பழகியிருந்தன.சிலவேளைகளில் சில உன்மத்தப் பாம்புகள் கோபங்கொண்டு கடிக்கவும் செய்ய்யும் போலிருக்கிறது..அறியாத கிராமத்து மக்கள் அதை ஆவிகளின் வேலையென்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பாம்புகளுக்கு என்னைப்போன்ற பயந்த மனிதன் புதிய அனுபவம். அதனால் அதிலொன்று எச்சரிக்கை அடைந்து கடித்து விட்டது.

பாம்புகளை எதிரியாகவே பார்த்து பயந்த எனக்கு இயல்பாகவே எழுகிற பயத்தை தவிர்க்க முடியவில்லை.அதைப்பாம்புகள் உணரும் போலத் தோன்றுகிறது. விடிந்ததும் முதல்வேலையாக இந்த இடத்தை விட்டு ஓடி விடவேண்டும்.இயன்றவரை பாம்புகளின் கண்களிலோ கிராமத்தவரின் பார்வையிலேயொ படக்கூடாது இல்லாவிட்டால் பாம்புகள் என்னை விட்டு வைக்காது. எப்படி இந்தக்காலோடும் விஷம் ஏறிய உடலோடும் நடப்பது?.
கண்களை திறந்தபோது கோயிலின் கூரை அசைந்தது போல தோன்றியது.கண்களை இடுக்கி உற்றுப்பார்த்தேன். கூரையில் தொங்கிய கயிறுகள் அசைந்தன.அவை கயிறுகளா என்ன?
  நான் எழுந்து உட்கார்ந்தேன்.மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் இருட்டானதரை பளபளப்பாக நெளிந்தது.மேலே இருந்து அசைந்த கயிறு தொப்பென என்மீது விழுந்து வழுக்கியது.
பாம்புகள்!
 தரையெங்கும் நூற்றுக்கணக்கான பாம்புகள் நெளிந்து கொண்டிருந்தன.! அவை ஊர்ந்து என் மீது  ஏறத்தொடங்கின.
விழுந்த பாம்பு என்னைச்சுற்றத்தொடங்கியிருந்தது.என் அலறல் யாருக்கும் கேட்டிருக்காது.(முற்றும்)
****************************************************************************************************
ஆக கதை சப்பென்று முடிந்துவிட்டது.
இப்படியெல்லாம் நடக்குமா என்ன?
ஒருவகையில் இது நடந்த கதை; இன்றைக்கும் நிகழும் கதை.

கண்ணுக்குத்தெரியாத பாம்புகள் இல்லை.ஆனால் கண்ணுக்குத்தெரியாத நோய்க்கிருமிகள் இருக்கின்றன. மனிதகுலம் இப்படி நோய்க்கிருமிகள் இருப்பதை அறியாமல் இருந்தார்கள். அந்தக்கிராமத்தவர்கள் போல ஆவிகளையும் பிசாசுகளையும் கடவுளையும்  கொள்ளையாய் பரவிய நோய்களுக்கு காரணம் சொன்னார்கள்.
தொழுநோய் பீடித்தவரைக்காட்டில் விட்டார்கள்.
ஆரம்பத்தில் சில நோய்களுக்கு கண்ணுக்குத்தெரியாத சில பொருட்கள்தான் காரணம் என்று ஒருவர் சொன்னபோது எள்ளி நகையாடியவர்களும் சிரித்தவர்களும் கோபப்பட்டவர்களும் இருக்கத்தான் செய்தார்கள்.
இன்றும் இருக்கிறார்கள்!
மக்களில் அனேகர் நோய்க்கிருமிகளைப்பார்த்ததில்லை.கேள்விப்பட்டது மாத்திரந்தான்.
ஆனால் உடல் தோன்றிய நாள் முதல் கிருமிகளோடு யுத்தமும் சமரசமும் செய்தபடியே வாழ்ந்து கொண்டிருக்கிறது.
நுண்ணுயிரிகள் பற்றிய அறியாமையால் ஆயிரக்கணக்கில் மக்கள் இறக்கிறார்கள்.அறியாமையும் ஏழ்மையும் சேரும்போது அழிவு பலமடங்காகிறது.
உதாரணத்துக்கு நோய்க்கிருமிகள் பற்றிய போதிய அறிவின்மை,வசதிபடைத்த நாடுகளில் உருவான எய்ட்ஸ் வளர்முக நாடுகளில் வேகமாக பரவுவதற்கு ஒரு காரணமாயிருந்தது.
அறியாமை அழிக்கிறதா? நோய் அழிக்கிறதா?


9 comments:

Dr.எம்.கே.முருகானந்தன் said...

கலையழகுடன் அறிவியல் கலக்ககும் நல்ல படைப்பு.

A doctor said...

@Dr.எம்.கே.முருகானந்தன்..

மிக்க நன்றி டொக்டர்

கிரி said...

கதை நிச்சயமாய்ச் சப்பென்று முடியவில்லை. ஒரு முழுமையான கதையாகத்தான் நான் பார்க்கிறேன். அருமையான விவரிப்பு, தெளிவான கதைக்கும் அழைத்துச் சென்ற விதம் எனக் கலக்கி விட்டீர்கள்.

ஒரு சிறுகதை ஓரிடத்தில் தொடங்கி ஓரிடத்தில் முடிய வேண்டுமென்றில்லை. முடிவுடன் இருக்கும் முட்டுச் சந்தாக இருக்கவேணும் எனவும் அவசியமில்லை.

எளிமையாக ஒரு காட்சியின் வர்ணனையாக இருந்தால் கூடப் போதும். ஒரு அட்டகாசக் கதை தந்தமைக்கு நன்றி.

தொழுநோய் என்பது தகாத சகவாசத்தால் வரும் எனப் பார்க்கப்பட்ட "ரத்தக் கண்ணீர்" காலம் என்றில்லை, இன்றளவிலும் நோய்கள் குறித்த அறியாமை அப்படியேதான் இருக்கின்றது.

நல்ல படைப்பு. மீண்டும் நன்றிகள்.

Abarajithan said...

நல்ல கதை.. முடிவு எதிர்பார்த்ததுதான்..

இன்விசிபிள் பாம்புகளுக்கும் கிருமிகளுக்கும் ஒரே வித்தியாசம், பயப்படாத மனிதர்களோடு கிருமிகள் இன்னும் வாழப்பழகவில்லை என்பதுதான்.. இல்லையா???

A doctor said...

@ கிரி

நன்றி.கதையை முடிக்க வேண்டியிருந்தது.
நோய்கள் பற்றிய அறியாமை நிறையவே இருக்கிறது படித்தவர்களிடமும்கூட.அறிவு சாதாரண மக்களிடம் போய்ச்சேரவேண்டுமானால் அது ஒரு நல்ல அரசினால் மாத்திரமே முடியும்

@அபராஜிதன்

கருத்துக்கு நன்றி.
கிருமிகள் ஒன்றிய வாழ்வு வாழத்தான் செய்கின்றன.சந்தர்ப்பம் கிடைத்தால் உள்ளே நுழைந்து விடுகின்றன.
கிருமிகளுக்கு நாங்கள் முழுமையாகத்தெரிவதில்லை.
இந்தக்கதையில் பாம்புகளுக்கும் மனிதர்களுக்கும் போட்டியில்லை.
சில நோய்க்கிருமிகள் இயற்கையாகவே மனித உடலை அடைந்து பெருகுவதாகப்படைக்கப்பட்டிருக்கின்றன.
அவற்றுக்கு வாழ்க்கை. எங்களுக்கு நோய்.

Abarajithan said...

@டாக்டர்

//சில நோய்க்கிருமிகள் இயற்கையாகவே மனித உடலை அடைந்து பெருகுவதாகப்படைக்கப்பட்டிருக்கின்றன.
அவற்றுக்கு வாழ்க்கை. எங்களுக்கு நோய்.//

உண்மைதான்.. (பெரும்பாலான) கிருமிகளின் வெற்றி உடலின் மரணம். உடலின் வெற்றி அவற்றின் மரணம். இரண்டுக்கும் நடக்கும் யுத்தம்தான் நோய்.
இல்லையா?

@கிரி,

//இன்றளவிலும் நோய்கள் குறித்த அறியாமை அப்படியேதான் இருக்கின்றது//

இல்லை. இன்று போலி மருந்துகளும், நோய்க்கான போலி காரணங்களும் வெகுவாக முன்னேறிவிட்டன...

Anonymous said...

அருமையான கதை. பொருத்தமான முடிவு. மருத்துவ அறிவியல் குறித்து இப்படி சிந்திக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது.

ஃபஹீமாஜஹான் said...

தனியே அறிவியல் தகவல்களாக மாத்திரம் இருந்தால் அதில் ஆர்வம் உள்ள ஒரு சிலர் மாத்திரமே படிப்பார்கள். இத்தகைய கதை கூறும் உத்திகளால் கூறவந்தவிடயம் படிப்போரின் மனங்களில் ஆழமாகப் பதிவதோடு அந்தப் படைப்பின் கனதியும் படைப்பு மீதான கவன ஈர்ப்பும் அதிகரிக்கிறது.

பாராட்டுக்கள் டாக்டர்.

A doctor said...

@ ஃபஹீமாஜஹான்

தங்கள் கருத்துக்கு நன்றி.
சும்மா ஒரு முயற்சி; எழுதிப்பார்க்கிறேன்.என்னதான் எழுதினாலும் வாசிப்புப்பழக்கமில்லாதவர்கள் நிறைந்த சமுகம் உண்மையில் சுகாதார அறிவூட்டலுக்கென்று தனிப்பிரிவினூடாக விரிவாக மேற்கொள்ளப்படவேண்டும்.