Wednesday, July 28, 2010

மூச்சுக் காற்றே ஏனிந்த தடுமாற்றம்?

ரம்யமான மாலைப்பொழுது காற்று குளிராக இருந்தது மலர்கள் மகரந்தங்களை சொரிந்து கொண்டிருந்தன. ஆரோகணம் தலையசொறிந்து கொண்டார். “ஓடிக்கொண்டு போனது இறுதியில் நிண்டு போட்டுது பிறகு கொஞ்ச நேரமா அடிச்சு அடிச்சு பாக்கிறன் ஸ்ராட் பண்ணுகுதில்லை”
“திருப்பி ஒருக்கா அடிச்சுப் பாருங்கோ”
ஆரோகணம் அடித்தொண்டையால் அரற்றியபடி மீண்டும் மோட்டார் சைக்கிள் கிக்கரை அடித்தார்.
டுர்ர்ர்………..
’’கீச் கீச் எண்டு கேக்கத்தொடங்கிட்டுது’’
’’அப்படிக் கேக்கேல்லை அண்ணை’’
’’நான் அதைச் சொல்லேல்லை,’’
நெஞ்சைத் தொட்டார் ஆரோகணம் கொஞ்சம் திணறியபடி.


அருகிலிருந்த பையிலிருந்து “ட” வடிவ குப்பி ஒன்றை எடுத்து திறந்து வாயில் பொருத்தி”ஸ்க்……..ஸ்க் என்று அழுத்தினார்.கொஞ்ச நேர மௌனத்தின் பின் கேட்டார்
“சரி சொல்லுங்கோ என்ன மண்ணெண்ணை அடைப்போ?’’
 அது என்ன அடைப்போ!
ஆனால் ஆரோகணத்தின் சுவாசக் குழாய்கள் சுருங்கி அடைத்துக் கொண்டன. எழுந்தது ஆஸ்துமாவின் ராகம் “கீச்………..கீச்” மூச்சுதிணறலும் அதுதான்.
நாங்கள் சுவாசிக்கிறோம் வெளிக்காற்றை உள்ளெடுக்கிறோம். உள்காற்றை வெளிவிடுகிறோம்.
காலை எழுந்தவுடன் இன்றைக்கு நான் நிமிடத்துக்கு 12 முதல்15 தடவைகள் சுவாசிக்க வேண்டும், ஒரு தடவையில் ஏறத்தழ 500 மில்லிலீற்றர் காற்றை உள்ளெடுத்து வெளிவிட வேண்டும் என்று உலகில் யாராவது திட்டமிடுகிறார்களா? இல்லை.. நாங்கள் அதைப் பற்றி சிந்திப்பதில்லை. ஆனால் வளர்ந்த ஒருவர் தான் அறியாமலே இப்ப்டித்தான் சுவாசிக்கிறார்.ஏதாவது நாற்றம் பிடித்த ஒன்றுக்கு அருகில்செல்லும் போது மூச்சை பிடித்துக் கொள்ளுகிறோம் அல்லது வாசம் நிறைந்த சென்ற் விசிறலுக்காக ஒருமுறை “எக்ஸ்ரா” சுவாசம் செய்கிறோம்.
இது தவிர ஆரோகணத்துக்கு ஏற்பட்டது போன்று இயல்பான சுவாசம்  இச்சையில்லாமல் தடைப்படுகின்ற போது, சுவாசம் சிரமமாகின்ற போது, சுவாச எண்ணிக்கை அதிகரிக்கின்ற போது அதை மூச்சுத்திணறலாக உணருகிறோம்; திணறுகிறோம்.
சுவாசப்பாதை மூக்கினில் தொடங்கி தொண்டை குரல் நாண்களை கடந்து வாதனாளி என்கிற சுவாசக் குழாயூடாக சென்று, அது பிரிந்து இடம் வலமாகி மேலும் அவை ஒவ்வொன்றும் சிறுசிறு குழாய்களாகப் பிரிந்து பலூன் போன்ற சிறிய அறைகளில் முடிவடைகிறது. இந்த குமிழி அறைகள் பல சவ்வுகளினால் சுற்றிக்கட்டப்பட்டதுதான்….நுரையீரல்- இடம் ஒன்று வலம் ஒன்றாக நெஞ்சறையில் காணப்படுவது.
வளியை உள்ளிழுப்பதும் வெளித்தள்ளுவதும் மூளையிலுள்ள சுவாசமையத்தின் கட்டளைக்கு அமையவே.
இது ஓர் இச்சையின்றிய செயல். ஆனாலும் நாங்கள் இதயத்துடிப்பைப் போலல்லாதது சுவாசத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கக் கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கிறோம்.*இது சென்றிக்கு முன்னால் கிடைக்கிற பஸ்சீற் போன்றதுதான்.கொஞ்சநேரம் இருக்கலாம் பிறகு இறங்கவேண்டிவரும்.பயணம் தொடர வேண்டுமல்லவா?
 அதாவது ஓர் எல்லைக்குமேல் மூச்சை எங்களாலடக்க முடியாது உடல் மூளையைத்தூண்டி எங்களை திணறவைத்து மீண்டும் சுவாசிக்கச்செய்கிறது. அதோடு எங்கள் விருப்பத்திலிருந்து சுவாச மையத்திடம் மீண்டும் சுவாசப் பொறுப்பு கையளிக்கப் பட்டுவிடுகிறது.
கழுத்திலிருந்து இடுப்புவரை உடல் மேல்மாடி கீழ்மாடியாக பிரிக்கப்பட்டிருக்கிறது மேலே நெஞ்சறை ( அனேகர் குடியிருக்க விரும்புவது அது வேறுவிடயம்) கீழே வ்யிற்றறை இரண்டையும் பிரிக்கின்ற நெஞ்சறையின் தரை அல்லது வயிற்றறையின் கூரை “பிரிமெந்தகடு” என்கிற தசை குடைபோல நெஞ்சறைக்குள் அது குவிவாக உயர்ந்திருக்கிறது.
சுவாச மையத்தின் கட்டாளைகளுக் கேற்ப இந்த பிரிமெந்தகடு சுருங்கி தட்டையாகிறது. அதே நேரம் நெஞ்சுக்கூட்டுத்தசைகள் சுருங்கி கூடு மேலே உயருகிறது. அதனால் நெஞ்சறை விரிகிறது ஒட்டியிருக்கிற நுரையீரல்களும் விரிய காற்று உறிஞ்சப்படுகிறது.
இழுக்கப்பட்ட இறப்பர் பழைய நிலையை அடைவதுபோல நெஞ்சுக்கூடும் பிரிமென்றகடும் தரை காற்று வெளியே தள்ளப்படுகிறது.
இப்படி எழுதுவதை விட சுவாசிப்பது சுகம்!
 அது எப்போது கஸ்டமாகிறது? மேற் கூறிய சுவாச செயன்முறை, சுவாசப்பாதை, சுவாசக்கட்டளை மையம் பாதிக்கப்படுகிற போதுதான்!
சுவாசப்பாதையில் ஏதாவது பொருள்கள் சிக்கிக்கொண்டால்(சிறு குழந்தைகளில்) சடுதியாக மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
 சுவாசக்குழாய்கள் சுருங்கித்தளரக்கூடியவை.ஆஸ்த்துமா நோயின் உச்சக்கட்டத்தில் பாதைய அடைக்கும் ஆளவுக்கு சுருங்கிவிடுகின்றன.அவசர சிகிச்சை தேவைப்படும் கட்டம் இது.
 திருமணமான புதிதில் கோயில் குளமென்றும் பின்னர் கொஞ்சகாலத்தில் சுற்றுவது குறைந்து, கேற் வரை வந்து வழியனுப்பி, பிறகு வாசல், யன்னல் என்று சுருங்கி அடுப்படிக்குள்ளிருந்து போட்டு வாங்கோ என்று சொல்லுகிற பெண்ணின் சுமைபோல
சிலரில்-குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவர்களில் அவர்களின் இயக்கத்தை மூச்சுத்திணரல் குறைத்து கேற்றடிக்கு நடக்கத்திணறி ,குறைந்து வீட்டுக்குள் அடுக்களைக்குள் போக மூச்சுத்திணறி படுக்கையில் முடங்கி சிரமப்பட வைக்கிற மூச்சுக்கஷ்டம் உடல் இயக்கத்தோடு தொடர்பு பட்டது இதயத்தொழிற்பாடு குறைந்து செல்வதால் ஏற்படுவது.
 உட்கார்ந்து இருக்கலாம்.நீட்டி நிமிர்ந்து படுக்க மூச்சடைத்துப்போகும் .தலையணைகளையடுக்கி சாய்ந்திருக்கவேண்டிய நிலை. இப்படி சிலரில்.
  இப்படி மூச்சுத்திணறல் பல விதங்களில் அவஸ்தைப்படுத்தும். சுவாச நோய்களிலும் இதய நோய்களிலும் மூச்சுத்திணறல் ஓர் அறிகுறி.
இப்படி இளைக்கும்  ஆரம்பக்கட்டங்களில் களைக்கிறேன் உடம்பில் சத்துக்குறைவென்று அனேகர் முதலில் எண்ணுகிறார்கள்.
சாதாரண சளித்தொற்றுகளில் குழாய்களை சளி அடைத்து மூச்சை சிரமப்படுத்தும்.குழந்தைகளில் இது வெளிப்படையாகத்தெரியும்.

ஆரோகணம் ஆஸ்த்துமாக்காரன். ஆஸ்த்துமா குழாய்கள் சுருங்கிப்போவதால் ஏற்படுகிறது..இவர்களின் சுவாசக்குழாய்கள் கூச்சங்கூடியவை.அதிகமாய் வெட்கப்படுவதுபோல தூசு, ம்கரந்தம்,குளிர் உணவு ஒவ்வாமை, உடல்பயிற்சி என பலவேறு காரணிகள் ஆளுக்கு ஆள் வேறுபடும் காரணிகளால் சுருங்கிப்போகின்றன.அதேவெளைகளில் சுவர்கள் உள்புறமாக வீங்கவும் அதிகமாகவும் சுரக்கவும் செய்கின்றன.சுருங்கிப்போன பாதையூடாக காற்று பயணிக்க சிரமப்படுகிறது.
மருந்துகளைக்கொண்டு அவற்றை விரித்து சுவாசத்தை சுகமாக்கிக்கொள்கிறார்கள்.ஆரோகணத்தைப்போல மருந்தை சுவாசக்குழாயில் விசைறிக்கொள்வது இலகுவான வழி.
  ஒத்துக்கொள்ளதவைகளை தவிர்த்து யோகாசனம் மூச்சுப்பயிற்சிகள் என்பவற்றை மேற்கொண்டால் கட்டுப்படுத்தலாம் என்கிறார்கள்.
(சஞ்சீவி/உதயனில் வெளிவந்த கட்டுரையின் மீள் பிரசுரம்.)
***********************************************************************************
பிரசுரமான பொழுதில்:
????.*இது சென்றிக்கு முன்னால் கிடைக்கிற பஸ்சீற் போன்றதுதான்.கொஞ்சநேரம் இருக்கலாம் பிறகு இறங்கவேண்டிவரும்.பயணம் தொடர வேண்டுமல்லவா?:.

இந்தக்கட்டுரை எழுதி வெளிந்த காலத்தில் வீட்டிலிருந்து மருத்துவ பீடம் செல்லும் பாதையில் 10-15 தடவைகள் வசுவண்டியிலிருந்து இறங்கி  செக்பொயிண்ட் இல் திறந்து காட்டிவிட்டு ஏறவேண்டும்.
 வசு வண்டி எனப்படுவது மினிவான் என்றும் சொல்லப்படும்.
தலையைக்குனியும் தாமரையாகத்தான் அதற்குள் நின்று வரவேண்டியிருக்கும். ஒரு இருக்கை காலியாகி கிடைத்தால் இருக்கலாம்.ஆனால் சிறிது நேரத்தில் அடுத்த காவலரண் செக்போய்ண்ட் இறங்கி ஏற கிடைத்தது போய்விடும்.
  ஆக ஒரு சீட் ஐ கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப்பாடுபடும் அரசியல் வாதியின் நிலைதான் அது.நிச்சயமில்லாத நிலை.
 அப்போதைய பஸ்பயணங்கள் எல்லாமே இச்சையின்றிய செயல் தான்.மூச்சைப்பிடிப்பதுபோல தற்செயலாக கிடைத்த சீட்டில் ஒருதடவை பின்புறத்தை இருத்தி தலையை உயர்த்துவது ஒன்றுதான் இச்சையான செயல்.
பிறகு எல்லாரும் இறங்குங்கோ என்று கட்டளை வந்துவிடும்..பிறகு கட்டளைப்படி இயங்கவேண்டியதுதான்.
  ஆனாலும் அந்தநேரத்தில் மனிதர்களுக்கு வால் இல்லாதது பற்றி,நினைத்துச்சந்தோஷப்பட்டுக்கொள்வேன்.யோசித்துப்பாருங்கள் பஸ் நெரிசலில் வாலும் இருந்தால்….


2 comments:

கிரி said...

பதிவுக்கு நன்றி.

இந்த inhaler வகையறாக்கள் எவ்வளவு தூரம் சரி, ஏதேனும் அபாயம் உள்ளதா? என் குடும்ப hierarchy'யில் பலருக்கு ஈஸ்னோபீலியா உள்ளது, சிலர் inhaler பயன்படுத்துகிறார்கள்.

varasiththan said...

@கிரி
நன்றி.
இப்போது இன்ஹேலர் பரவலாக உபயோகிக்கப்படுகிறது.மாத்திரைகள் வயிற்றில் கரைந்து இரத்தத்தில் கலந்து சுவாசக்குழாய்களுக்குச்செல்ல வேண்டியிருக்கும்.மருந்துகள் மில்லிக்ராம் அளவுகளில் இருக்கும்.மாத்திரைகள் நிறைய இரசாயனத்தை உடலினுள் சேர்க்கும்.
இந்த இன்ஹேலர்கள் நேரடியாக சுவாசப்பாதையில் தொழிற்படும் அதனூடாக இரத்தத்தில் கலக்கும்.மருந்தின் அளவு மைக்ரொ அளவில்.மாத்திரையின் ஆயிரத்தில் ஒரு பங்கு இரசாயனம்.
ஒரே செயற்பாடு.மிகக்குறைந்த மருந்து.மிகக்குறைந்த பக்கவிளைவு.
இன்ஹேலர் பாவனை ஆஸ்த்துமாகாரர்களின் வாழ்க்கையை இலகுவாக்கியிருக்கிறது. முக்கியமாக வளரும் சிறுவர்கள் முன்பு அதிக மருந்தை உட்கொள்ளவேண்டியிருந்தது.

இன்ஹேலர்களும் அதற்கு பாவிக்கப்படும் மருந்துகளும் பலவிதம்.
நகரம் ஒரு பெரிய exhaler. அது விடும் காற்றில் உள்ள பதார்த்தங்கள் தான் இன்று அனேகருக்கு ஒவ்வாமை -eosinophelia.
இந்த இரசாயன யுத்தத்தில் மருந்து மாத்திரைகளை விட இன்ஹேலர் சிறந்தது.
மாத்திரைகளைப்போலவே மருந்துகளின் பக்கவிளைவுகள் நீண்டகாலப்பாவனையில் ஏற்படலாம்.
அது என்ன மருந்து என்பதை பொறுத்தது.