Wednesday, August 4, 2010

அபத்தம்:இடுக்கில் மாட்டிக்கொண்ட இடுகை.

பதிவெழுதுவது பழக்கமாகிப்போய்விட்டது..2006 வாக்கில் ஒரு பதிவைத்தொடங்கினேன்.ஒரு இடுகை அவ்வளவுதான்.அடுத்த இடுகையை இடவே முடியவில்லை.ஒரு அடி வைத்து விட்டு நிறுத்திவிட்ட குழந்தைபோல.
தொடக்கத்திலேயே நின்று விடுகிற எதுவும் ஒரு அங்கலாய்ப்பைத்தரும்.நின்று திரும்பிப்பார்க்கிறபோது அட அப்படியே தொடர்ந்திருந்தால் இன்றைக்கு
…என்று தோன்றும்.முக்கியமாக பரீட்சைக்கு  முன்னர் அப்போ படிக்கத்தொடங்கிய நேரத்திலிருந்து ஒழுங்காகப் படித்திருந்தால் இப்ப  எங்கேயோ இருந்திருப்பேன் என்று இருக்கும்.
இப்படி தொய்வில்லாமல் தொடர்வதை தொடரும் மனப்பாங்கை விடாமுயற்சி என்று சொல்வார்கள்.விடாமுயற்சிக்கும் விருப்பத்துக்கும் தொடர்பு இருக்கிறது.
 இப்போ தொடங்கிய பதிவு பழக்கமாகிவிட்டது. பதிவு போடாவிட்டால் பல்லு விளக்காதது போல உணர்வு தோன்றுகிறது.தின்னும்போதும் எழுதுவதைப்பற்றி சிந்திக்கவேண்டியிருக்கிறது. எழுதும்போது யாராவது தின்னுவதைப்பற்றிச்சிந்திப்பார்களா ? ஆமென்றுதான் சொல்லவேண்டும். ஒரு கூட்டமே சிந்திக்கும். அது ஒரு கல்யாணப்பதிவு.சாப்பாடு ரெடி பதிவு முடியக்காத்திருந்தார்கள்.
அனேகர் சாப்பாட்டைப்பார்ப்பதும் எச்சில் விழுங்குவதுமாக இருந்தார்கள். எழுதும் நேரம் தின்னும் நினைப்பு அது.
 தின்னுவது என்று சொல்லும்போது பதிவெழுதுவதும் நேரத்தைத்தின்னுகிறது. தின்னுகிறது என்னும்போது எனக்கு மூன்று கிராமங்களைத்தின்ற ஆடு என்ற கதை ஞாபகம் வருகிறது.ஒரு ஆடு ஒரு பத்திரத்தை தின்று விடுகிறது. அந்தப்பத்திரம் ஒருவரின் பெயரில் மூன்றுகிராமங்களை எழுதிப்பதிவு செய்த பத்திரம்.
இப்படி எதை நான் சிந்தித்தாலும் இடையில் ’’பதிவு’’ வருவதைத்தடுக்கமுடியவில்லை.

அதனால் பதிவெழுதுவதற்கு ஒரு இடைவெளி விடுவதற்கு நான் தீர்மானித்தேன்
எப்படி பதிவை இடைநிறுத்துவது?
பதிவை இடை நிறுத்துவதால் ஒரு கிளிக் மிச்சமாகும்.ஒரு கிளிக் என்பது என்ன முக்கியம் என்று கேட்டால் கேயோஸ் தியரியின் படி அது உலகில் இன்னொரு பகுதியில் சுனாமியை தடுத்து நிறுத்தக்கூடும்.அதனால் என் எழுத்தைப்படிக்காத இலட்சக்கணக்கான இலட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படலாம்.
காப்பாற்றப்படலாம் என்கிற வார்த்தை வந்தவுடன் மனத்தின் உற்சாகம் வடிந்து விடுகிறது. காப்பாற்றுதல் என்ற வார்த்தை கைவிடுதல் என்ற வார்த்தையாகிவிட்டது.
வார்த்தைகள் வெறும் வார்த்தைகள்.பதிவென்பதும் வார்த்தைகளே.செயலற்ற வார்த்தைகளால் என்ன பயன்?
 வார்த்தைகள் சிந்தனையைத்தூண்ட வேண்டும் சிந்தனை செயலில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும்.எழுத்து புரட்சியைக்கொண்டுவருவதா?. அல்லது சுயத்தின் பதிவிறக்கமா?
 என் மனம் எண்ணப்பாசியில் வழுக்கிசெல்கிறது.  அல்லது மனம் எண்ணங்களுக்கூடே தாவுகிறது.விழுதுகளாய் இருப்பவை சொற்கள். சொற்களில் ஒன்றைப்பற்றிக்கொண்டு அதிலேறி இன்னொன்றில் தாவுகிறது.
மனவெளியில் விழுந்துகொண்டிருக்கிறேன் . தோன்றும் வார்த்தைகளை பற்றிக்கொண்டு எழ முயற்சிக்கிறேன்.
ஆனால் வார்த்தைகள் என்னைத்தாங்கவில்லை. அவை செடிகள் போல சுற்றிக்கொள்ள மேலும் வார்த்தைகளைச்சேர்த்தபடி விழுந்துகொண்டிருக்கிறேன்.

அபத்தமாய் எழுதுதல் என்பதும் உன்மத்த நிலையில் எழுதுவதும் இதுதானோ என்னவோ.
கவிஞர்களின் மனம் அழகான விழுதுகளை தொங்கவிட்டிருக்குமோ என்னவோ.தாவுவதை நிறுத்தினால் ஞானம் என்பதாக படித்த ஞாபகம்.எதற்காக அவற்றையெல்லாம் படித்தேன்?
  படிக்கத்தொடங்கி சில பக்கங்களோடு நிறுத்தி விட்ட புத்தகங்கள் அழும் குரல் இரவு நேரங்களில் கேட்பதுண்டு. வார்த்தைகளை கோர்த்து வைத்துக்கொண்டு அந்தச்சந்தத்துக்கு ஏற்ப அதிரும் ஒரு மனத்தின் வரவுக்காய் காத்திருக்கும் அவை அழுவது போல ஏன் தோன்றும் அதற்காகத்தான் நான் படிக்கிறேன். எழுதப்பட்ட வார்த்தைகள் மனத்தினால் உச்சரிக்கப்படாதவரை அவை விடுதலை அடைவதில்லை.
 மந்திரங்கள் உச்சரிக்கப்படும்போதுதானே உயிர் பெறுவதாக சொல்லுகிறார்கள். வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கும் பணிதான் வாசித்தலென்றால் எழுதுவதை விட வாசிப்பு உயர்வானதாகிறது. எழுத்து வெறும் பிரசவந்தான்.வாசகன் அதை வளர்த்தெடுக்கிறானா?.
  இப்படியெல்லாம் விசித்திரமான இடுக்குகளில் ஏன் மனம் நுழைகிறது.
விசித்திரமான இடுக்குகளில் தான் நினைவுகள் ஒளிந்துகிடக்கின்றன. நினைவுகளை இழுத்து வெளியில் கொண்டுவரும்போது அவற்றோடு ஒட்டி வருபவை இன்னொரு நினைவாய் விரியும்.
 நிறுத்து மனக்குரங்கே.
ஒரு பதிவை எழுதி பதிவுக்கு ஒரு இடைவெளி விடலாமா என்று யோசித்தேன்.அதனால் தான் இந்தப்பதிவை எழுதத்தொடங்கினேன்.
பதிவை எழுதாமலேயே பதிவை நிறுத்தியிருக்கலாம்.இடைவெளி தேவைதான்.
   

6 comments:

Abarajithan said...

ம்ம்ம்.. எழுதுறதும் ஒரு போதைதான்..

அந்த கிளிக் -> சுனாமி தத்துவம் கியாஸ் தியரியா.. அல்லது பட்டர்ப்ளை எபக்ட்டா?

ஏனெனில் இப்படித்தான் கமல்ஹாசன் ஒருமுறை தசாவதாரம் பற்றிய பேட்டியொன்றில் "இந்தப் படம் கேயாஸ் தியரியை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டது" என்று ஒரு ஸ்டேட்மென்ட் கொடுக்க, அறிவியல் தளமொன்றில் அவரது பதிலின் ஒவ்வொரு பத்தியையும் தனித்தனியாக பதிவு போட்டு பிரிச்சு மேய்ஞ்சாரு அருண் சார்.

அந்தப் பதிவு இங்கே: http://www.ommachi.net/2009/05/20/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-2/

natbas said...

வரசித்தன் என்ற பெயரை நீங்கள் ஏன் பாவிக்கிறீர்கள் என்பது இப்போதுதான் புரிகிறது...

சித்தரின் பணி தொடரட்டும்...

வரசித்தன் said...

@அபராஜிதன்
நன்றி
கெயாஸ் தியரியின் ஒரு கூறு பட்டபிளை எஃபெக்ட்.அதைப்பற்றி அவ்வளவு எனக்குதெரியாது.ஆனால் ஒரு கிளிக் காற்றில் அதிர்வுகளை உருவாக்கி .....இப்படி வந்ததை எழுதினேன்.அது வெந்ததோ வேகாததோ. ஏனென்றால் இது அபத்தம்.
@ நன்றி நட்பாஸ்

எழுத்தாளர் புனைபெயர் வைப்பார்கள் என்று முன்னொரு காலத்தில் சில கதைகள் எழுதிய போது அந்தப்பெயரைப் போட்டு எழுதிவிட்டேன்.
இந்தப்பெயரைசொன்னதும் அப்பா.
மனம் நிற்கமாட்டேனென்கிறது.

Abarajithan said...

நீங்க சொல்வதுபோலவும் நடக்கலாம். சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால் அதற்காக நீங்கள் எழுதாமல் விட்டுவிடாதீர்கள். ஏனென்றால், நீங்கள் செய்யும் ஒரு கிளிக் கூட உலகில் எங்கோ உருவாகும் சுனாமியைத் தடுத்து, அதன்மூலம் ஒரு மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் சாத்தியங்களை தடுக்கும் வாய்ப்புக்களும் இருக்கின்றன அல்லவா?

சித்தர்களும் ஆங்கில மருத்துவத்தை பரிந்துரைக்கலாம் என இந்தியாவில் அறிவிக்கப்பட முன்னரே வரசித்தரான நீங்கள் ஆங்கில மருத்துவத்தைப் பற்றி எழுதியிருக்கிறீர்களே?! இது சட்டவிரோதம் இல்லையா?

varasiththan said...

@அபராஜிதன்
அபராதம் அபராதம்..
இந்த சித்தர் சன்னிதியை அவமதித்து விட்டீர்கள்
அபராதம் செலுத்த வேண்டும்....
ஓ...

நீங்கள் அபராதம் செலுத்தினால் அபராதஜிதன்....
அபராதம் செலுத்துவதைதவிர்த்தால்
அபராதஜித்தனோ?

Abarajithan said...
This comment has been removed by the author.