Tuesday, October 5, 2010

எனக்கு யாருமில்லை.. நான் கூட

  'எனக்கு யாருமில்லை
  நான் கூட' 





இந்த வார்த்தைகள் வாசித்துக்கொண்டு போகும்போது மனத்தின் கண்களில் பட்டன. வாசிப்பு அதனை விழுங்கிக்கடந்து போனது, தூண்டில் இரையை விழுங்கிய மீனைப்போல.வாசிப்புக்குள் மனம் தொடர்ந்து நீந்திக்கொண்டே கிடந்தது  வார்த்தைகளின் தொடுக்கப்பட இழை தொடர்ந்து வருவது அறியாமலேயே. வார்த்தைகள் கைதேர்ந்த தூண்டில்காரனைப்போல வாசிப்புக்குள் சிறிது நேரம் மனதை அலையவிட்டது. ஓடித்திரிந்த மனதை ஒரு கணத்தில் சுண்டியிழுத்து தூக்கி வெறுமைக்குள் வீசியது.
வெறுமையில் மனம் கிடந்து துடிக்கிறது.
எனக்கு யாருமில்லை நான் கூட என்று யார் சொல்லுவார்கள்.யாருக்கு யாருமில்லை? யாருக்கு அவனேயில்லை?
  
வார்த்தைகள் மனதில் காட்சியலைகளை எழுப்பி மறைவன.கவிதைகள் தீட்டப்பட்ட வார்த்தைகள் காட்சிகளை மாத்திரமல்ல காட்சிகளை மனதின் ஆழத்திலிருந்து இழுத்து எடுக்கிறபோது அதனோடு ஒட்டிக்கொண்டு வருகிற எல்லா அனுபவங்களும் ஒரு குடையாக விரிந்து கவிழும்.அதனால் தான் ஒரு பூச்செண்டிலிருந்து ஒரு ரோஜாவை உருவி எடுக்கிறபோது உலகம் சிவந்து போவதாய் உணரவேண்டி ஏற்படுகிறது.
சிலவேளைகளில் கவிதை இதயத்தினூடாக ஆழ இருக்கும் அனுபவக்கருக்குகளை உருவி இழுத்து விட்டுவிடுகிறது

நகுலன் யாரைப்பற்றி பேசுகிறார் என்பது தேவையில்லை.
ஆனால் அவர் வார்த்தைகளை வைத்து ஒரு மாயத்திறப்பை செய்து எம்முன்வீசிவிட்டுப்போய்விட்டார்

அந்த வார்த்தைகள் என்னுள் எதனையோ திறந்து விட்டன. அதே வார்த்தைகள் எங்கெல்லாமோ இருக்கிற வார்த்தைகளால் திறக்கப்படக்கூடிய மனசுக்காரர்களில் இதுவரை திறக்காத ஒரு கதவைத்திறந்து கொண்டிருக்கும்.அல்லது எதையோ எடுக்க தொங்கும் துணியை இழுக்க பரணில் இருக்கும் பெட்டகம் விழுந்து திறந்து மறந்துபோன வாழ்வின் ,மறந்துவிட்ட தருணங்களின், இழந்துபோன தவறவிட்ட,நினைவுகளின் சேகரிப்புகள் அறையெங்கும் சிதறுவது போல வார்த்தைகள் இழுத்து விழுத்தியவை மனமெங்கும்சிதறி விடக்கூடும்.

அவசரமாக தெருவோரமாக உடைகலையாதவண்ணம்,  என்னை மையமாக்கி சுற்றி வர   உலகைப்பார்த்த படியே நான், என் குடும்பம்,என் உறவு என் சுற்றம், என் சாதி,என் இனம், என் நாடு என்று அடுக்குமாளிகையாய் கட்டியெழுப்பி ''என்னை'' பக்குவமாய்க்கொண்டு ஓடும் போது  பரட்டைத்தலையும் கிழிந்த உடையுமாய் எங்கோ பார்த்தபடி சிரித்துக்கொண்டோ கதைத்துக்கொண்டோ அலைந்து திரிகிற அந்த மனிதனைப்பற்றி மனசு நினைத்ததில்லை.பைத்தியம் என்று சொல்லி கடந்து கடந்து செல்லும் தினமும்.

இந்த அலட்சிய மனசுக்குத்தேவை வலிக்கக்குத்தி இழுத்து தூக்கிப்போடுகிற தூண்டில் வார்த்தைகள்.


அது அவன் தான்.  ’’எனக்கு யாருமில்லை.. நான் கூட’’என்றுகூட அவனால் சொல்லமுடியாது ஆனாலும்.....

அவனுக்குத்தான் யாருமில்லை 
அவன் கூட!



5 comments:

பாஸ்கர் said...

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், பிறருக்காக நான் இல்லை என்பவன் தனக்கே தானாக இருக்க முடியாது.

என்று தோன்றுகிறது :)

ப.செல்வக்குமார் said...

///சிலவேளைகளில் கவிதை இதயத்தினூடாக ஆழ இருக்கும் அனுபவக்கருக்குகளை உருவி இழுத்து விட்டுவிடுகிறது//

ஆமாங்க , சில சமயங்களில் கவிதை உயிரோட்டமாய் தெரிவதும் இதனால்தான் ..!!

வரசித்தன் said...

@ பாஸ்கர்,

அப்படியில்லாததால்தானே இப்படி கவிதை வருகிறது:).

@ப.செல்வக்குமார்
ஏன் சிலசமயங்களில் என்கிறீர்கள் :)))

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நகுலன் "'எனக்கு யாருமில்லை
நான் கூட' .." எனச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்,
ஆனால் அதைச் சுற்றி நீங்கள் எழுப்புகிற சித்திரங்கள், சிந்தனைக் கோலங்கள் அபாரம்.

வரசித்தன் said...

@Dr.எம்.கே.முருகானந்தன்

நன்றி டொக்டர்.நகுலன் எழுத்துக்களை இருபது வயதுகளில் படித்திருக்கிறேன்.விளங்கவில்லை.இப்ப இப்படியாகிவிட்டது :)