Saturday, October 9, 2010

சிதறல்

 
உச்சி வெயில்; அகோரமாய்க்கொளுத்திக்கொண்டிருந்தது.அவன் மருத மர நிழலில் அமர்ந்திருந்தான்.
சிலமாதங்களுக்கு முன்பு பச்சைப்பசேல் என்று கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்த அந்த வயல்வெளியில் கோடையின்வரட்சிதெரியத்தொடங்கியிருந்தது.வெட்டப்பட்ட வயல்களில் கருகத்தொடங்கியிருந்த,புற்களைமாடுகள்,கார்ந்துகொண்டிருந்தன.கறுப்பும்,சிவப்பும்வெள்ளையுமாய் தெரிந்த மாடுகளுள் இவனுடைய மாடுகளும் மேய்ந்துகொண்டிருந்தன.
                 
            வடக்குப்பக்கமாக இருந்த தறைகளில் காய்கறி போட்டிருந்தார்கள்.மாடுகள் அந்தப்பக்கம் போகாது பார்த்துக்கொள்வது இவனது வேலை.வழமையாக மூத்த அண்ணா வருவார்.இன்று இவனுக்கு பள்ளிக்கூடம் இல்லை.அதனால் இவன் தலையில் அந்தப்பொறுப்பு விழுந்துவிட்டது.
              வயல் நெல்லு வளர்ந்து நிற்கிறகாலங்களில் அந்தப்பகுதி முழுவதுமே அழகாக இருக்கும்.மாலை நேரங்களில் அண்ணா மாடுகளுக்கு புல்லு வெட்டுவார்.இவன் வயல் வரம்புகளில் பட்டத்துடன் ஓடித்திரிவான்.வயல் வெளியில் காற்று நன்றாக வீசும்.பட்டத்தை உச்சிக்கு கிளப்பிவிட்டு நூலைக்கையில் பிடித்துக்கொண்டு அண்ணா புல்வெட்டும் வயல்வரம்பில் குந்தியிருப்பான்.பட்டம் காற்றில் ஏறி இறங்குவதையும் ஆடி அசைவதையும் பார்த்துக்கொண்டிருப்பதும் பட்டத்தை வலிப்பதும் நூலை விட்டு கொடுப்பதுமாக இருப்பான்.
                 உச்சியில் நிற்கின்ற பட்டங்களை கடந்து சிலநேரங்களில் ஹெலிகாப்டர் சத்தத்துடன் பறந்து செல்லும்.அப்பொழுது நூலைவிட்டுக்கொடுத்து பட்டத்தை உச்சிக்கு கிளப்பி ஹெலியில் கொழுவுவதற்கு முயற்சிசெய்வான்.ஆனால் ஹெலி இதையெல்லாம் கவனியாது அலட்சியமாய் உயரத்தில் பறந்து செல்லும்..


           அண்ணா இதைப்பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பார்.
‘’ உச்சத்தாலை போறான் பெரிய பட்டமெண்டால் உவனை கட்டாயம் கொளுவி விழுத்துவன் ”இவன் சொல்லுவான்.
                               காற்றாடி சுற்றுவது நின்றுவிட்டால் ஹெலிவிழுந்துவிடுமென்று அப்பா சொல்லியிருக்கிறார்.அப்பா பெரிய அறிவாளி எவ்வளவு விஷயங்களை இவனுக்கு சொல்லியிருக்கிறார்.
                       ஊரின் முடிவில் பரந்தவெளியின் தொடக்கமாக நின்றுகொண்டிருக்கிற பெரிய பூவரச மரத்தினடியில் அப்பாவின் மடியில் இருந்து கதைகேட்ட இரவுகள் ஒவ்வொன்றும் இவனுக்கு ஞாபகம் இருக்கிறது.
பொழுது சாய்ந்து இரவாகிற நேரத்தில் அப்பாவும் அவனும் அந்த மரத்தடிக்கு வருவார்கள்.சில நாட்கள் மாமாவும் சின்னண்ணாவும் கூட வந்திருப்பார்கள்.
                 வீட்டுக்குப்பின்னாலிருக்கும் ஒற்றையடிப்பாதையில் அவனைத்தூக்கிக்கொண்டு அப்பா நடப்பார்.இரவு நேரங்களில் பாம்புகள் திரியும் என்று பயப்படுவாள்.அப்பா ஒன்றுக்கும் பயப்படுவதில்லை.
வெளியில் வீசும் குளிர்காற்றில் உடல்கள் சிலிர்க்க அமர்ந்திருப்பார்கள்.வானத்தில் மின்னுகின்ற நட்சத்திரங்களையும் அசைந்துகொண்டிருக்கின்ற ஒளிப்புள்ளிகளையும் இவன் பார்த்துக்கொண்டிருப்பான்.தூரத்தே தெரியும் மரங்கள் பற்றைகள் கரிய யானைக்கூட்டங்கள் போலத்தோன்றும்.
                      வானமும் நிலமும் சந்திக்கிற இடத்தில் தெரிந்த வெளிச்சப்பிரதேசத்தை முதன்முதலில் பார்த்தபோது இவன் அதிசயப்பட்டான்.அப்பா சொன்ன கதைகளில் வந்த இரத்தினங்கள் சிதறிக்கிடக்கின்ற பொன்னகரம் அங்குதான் இருப்பதாக தோன்றியது.


‘அப்பா.. அங்கை தெரியிறது தங்க மாளிகையே?”


அப்பாவும் அண்ணாவும் சேர்ந்து சிரித்தார்கள்.
” “அது ஆமிக்காம்ப். நிறைய லைட் பூட்டியிருக்கிறாங்கள்”
அப்பா சொன்னார்.
      அவனுக்கு வெட்கமாய் இருந்த்தது.ஆமிக்காம்ப் என்றால் என்ன என்று அவன் கேட்டதெல்லாவற்றுக்கும் அப்பா பொறுமையாய்ப்பதில் சொன்னார்.
         சிலநேரங்களில் சிவப்பு மின்னல்களுடன் விமானங்கள் மேலாக பறந்து தூரத்தில் இறங்குவதை அவர்கள் பார்ப்பார்கள்.அப்படி ஹெலிகப்டரில் இருந்து சன்னங்கள் தணல் தணலாக பீறிட்டு பாய்வதையும் அவன் பார்த்திருக்கிறான்.அப்பா எல்லாக்கேள்விக்கும் பதில்சொல்லித்தருவார்.பொம்மர்கள் பற்றிக்கூடச்சொல்லித்தந்திருக்கிறார்.
                                   இரவு நேரங்களில் இப்படிக்காற்று வெளியில் உட்கார்ந்து சுகமாக கதைப்பது அப்பா செத்தவுடன் நின்றுபோய்விட்டது.முதலில் அப்பா ஏன் செத்தார் என்பது அவனுக்குப்புரியவில்லை.
                மேற்கே சூரியன் இறங்கத்தொடங்கிய ஒரு பொழுதில் அப்பாவைக்கொண்டு வந்து இறக்கினார்கள்.வெள்ளைத்துணியால்அப்பா மூடப்பட்டிருந்தார்.சில இடங்களில் துணிசிவப்பாய் மாறியிருந்தது.
           அம்மா தலையிலடித்து அழுதாள்.அக்கா கைகளால் முகத்தைப்பொத்தி கதறியழுதாள்.மாமா இவனைத்தூக்கிக்கொண்டார்.இவன் விக்கி விக்கி அழுதான். அழாதை தம்பி என்று இவன் முதுகைத்தடவி அங்குமிங்கும் உலாவிக்கொண்டு இடையிடையே தன் கண்களைத்துடைத்துக்கொண்டார்.அப்பாவின் முகத்தைப்பார்க்க இவனை ஒருத்தரும் விடவில்லை.
            பொழுதுசாயத்தொடங்கிய நேரம் அப்பாவின் ஊர்வலம் புறப்பட்டது.சுடலையில் அப்பாவை மரக்கட்டைகளோடு கட்டையாக கிடத்தினார்கள்.கடைசித்தடவையாக ஒருமுறை இவன் அப்பாவின் முகத்தைப்பார்த்தான்.பற்கள் வெளித்தள்ளி கன்னம் வீங்கி கிழிந்து அகோரமாய் முகம் கிடந்தது.இவனை அதிக நேரம் பார்க்கஅவர்கள் விடவில்லை.
                                         மூத்த அண்ணா அப்பாவின் கால்களைத்தொட்டுக்கும்பிட்டார்.சின்னண்ணாவும் இவனும் அப்படியே செய்தார்கள்.சுற்றிவந்து கடைசியாக அப்பாவை மட்டும் விட்டு விட்டு எல்லோரும் வீட்டுக்குத்திரும்பினார்கள்.
               அன்றைய இரவு ஒரு பயங்கரமான இரவாக அவனுக்கு இருந்தது.விறாந்தையில் குத்துவிளக்குகொளுத்திவைத்திருந்தார்கள்.அம்மா சுவரோடு சாய்ந்திருந்தாள்.அம்மாவின் மடியில் இவன் தலைவைத்துப்படுத்திருந்தான்.அக்கா பக்கத்துப்பாயில் சுருண்டு படுத்திருந்தாள்.எல்லோரும் அழுது களைத்துப்போயிருந்தார்கள்..


“ அம்மா ..அது உண்மையாய் அது எங்கட அப்பாவா?”


                 இவன் அடைத்துப்போன குரலோடு கேட்டான்.
அம்மாவின் கண்கள் குத்துவிளக்கு வெளிச்சத்தில் பளபளத்தன.
அம்மா இவனைக்கட்டிப்பிட்டித்து குலுங்கி அழுதாள்.
         ஒரு பெரிய வெளியில் இவனை மட்டும் தனியே விட்டுவிட்டு அப்பாமறைந்துவிட்டார் போலத்தோன்றியது.அழுத கண்களுடன் அவன் தூங்கிப்போனான்.
             சிறிதுகாலம் சென்றபின் தான் இவனுக்கு அப்பாவின் சாவு புரிந்தது.இவனும் மாமாவும் கடைக்கு உரம்வாங்கபோனபோது அப்பாவேலைசெய்தகடைஇருந்தகட்டிடத்தைக்கண்டான்.
           கதவுகள் பிய்ந்து கம்பித்துண்டுகளும் கற்குவியலுமாய் அப்பாவின் கடை சிதறிப்போய்க்கிடந்தது.குண்டு விழுந்தபோது அப்பாகடைக்குள் இருந்திருக்கிறார்.
                                 அப்பா செத்தபிறகு வீடு நிறைய மாறிப்போய்விட்டது.சின்னண்ணன் திடீரெனக்காணாமல் போய்விட்டான்.இயக்குத்துக்குபோய்விட்டான் என்று சொன்னார்கள்.மூத்த அண்ணா தோட்டத்தில் கடுமையாக உழைக்க தொடங்கினார்.அம்மா இன்னும் கூடகவலைப்பட்டாள்.
                  பின்னேரங்களில் அம்மாவும் அக்காவும் சேர்ந்து அரிசி இடிப்பார்கள்.காலையில் இடியப்பம் அவிப்பார்கள்.அம்மா பிழிவாள் அக்கா அடுப்பில் வைத்து இறக்குவாள்.சுடச்சுட ஆவி பறக்கிற இடியப்பங்களை அவள் தண்ணீரில் கை நனைத்து நனைத்து எடுத்துப்போடுவதை இவன் பார்த்துக்கொண்டிருப்பான்.அடுப்புக்கு முன்னால் இருந்து அவள் நன்றாய்க்கறுத்துப்போய்விட்டாள்.
        இவன் அவித்த இட்டியப்பங்களை ஓலைப்பெட்டிகளில் அடுக்கி வீடுகளுக்குக் கொண்டுபோய்க்கொடுத்துவிட்டு வருவான்.
                               பொம்மர்கள் அடிக்கடி வீட்டுக்கு மேலாக பறக்கத்தொடங்கின.பிழிந்து கொண்டிருக்கும் இடியப்பத்தையோ மாவையோ விட்டுவிட்டு இவர்கள் எழுந்து ஓடுவார்கள்.ஒரு சின்ன இரைச்சல் கேட்டாலே அம்மாவின் கைகள் நடுங்கத்தொடங்கும்.முன்பு அப்பாவும் அண்ணாவும் வெட்டிய பதுங்குகுழிக்குள் குந்தியிருப்பார்கள்.அம்மா கந்தசட்டி கவசம் சொல்லத்தொடங்குவாள்.இவனுக்கும் கந்தசட்டிகவசம் மனப்பாடமாகிவிட்டிருந்தது..ஆபத்து வேளைகளில் சொல்லும்படி அம்மா சொல்லுவாள்.
                     சில நேரங்களில் பொம்மர்கள் தூரத்து இலக்குகளை வட்டமிடுகிறபோது வயல்வெளிக்கு ஓடிச்செல்லுவான்.தூரத்தில் இலக்கை நோக்கி பருந்துகள் போல விமானங்கள் சுற்றியிறங்குவதையும்,குண்டுகள் விழுந்து வெடிப்பதையும் புகையின் பின்னர் அதிர்வுவருவதையும் பார்த்துக்கொண்டிருப்பான்.
                  ஒருமுறை இவனுக்கு மிக அருகில் குண்டு ஒன்று விழுந்து வெடித்தது.
                      கோயிலுக்கு பக்கத்திலிருந்த வாசிகசாலையில் நேசரி வகுப்பு நடந்தது.விஜயா டீச்சர் இவர்களுக்கு பாட்டும் எழுத்தும் சொல்லித்தருவாள்.ஒருமுறை இவனோடு படிக்கிற சுதன் பிறந்த நாளுக்கு புதிய சப்பாத்து எல்லாம் அணிந்து வந்திருந்தான்.ஒரு பை நிறைய டொபி கொண்டு வந்து எல்லாருக்கும் கொடுத்தான்.டீச்சர் முதுகில் அவன் முதுகில் தட்டி வாழ்த்துக்கள் என்றார்.தன்னுடைய பிறந்த நாள் எப்போ என்று இவனுக்கு சரியாகத்தெரியவில்லை.
                                       வீட்டுக்குபோனபோது அம்மா அரிசி இடித்துக்கொண்டிருந்தாள்.
“ என்ரை பிறந்த நாள் எப்ப வருகுது? இண்டைக்கு சுதன்ரை பிறந்த நாள் புதுச்சட்டை எல்லாம் போட்டுக்கொண்டு வந்தவன் எல்லாருக்கும் ரொபிதந்தவன்’’  இவன் கேட்க அம்மா அவனுடைய தலையைத்தடவிப்பெருமூச்சுவிட்டாள்.
                           இவனுடைய பிறந்தநாள் ஒரு வெள்ளிக்கிழமை வந்தது அம்மா ஒரு புதுச்சட்டை வாங்கித்தந்திருந்தாள்.அன்று ரொபிப்பையோடு பள்ளிக்கு சந்தோஷத்தோடு புறப்பட்டுச்சென்றான்.


‘’ எல்லாப்பிள்ளைகளும் வந்தபிறகு முதலில் டீச்சருக்குக்கொடுத்தபிறகு மற்றைப்பிள்ளைகளுக்கு கொடுக்கவேணும்.இரண்டுகையாலையும் பிடிச்சுக்கொடுக்கவேணும் ..என்ன ‘’ அம்மா மீண்டும்மீண்டும் சொல்லி அனுப்பியிருந்தாள்.
  எல்லாப்பிள்ளைகளும் வந்துவிட்டார்கள்.வகுப்பு தொடங்கிவிட்டது.இப்போது கொடுக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தான்.
‘’என்ன செந்தூரன் புதுச்சட்டை” டீச்சர் கேட்டார்.
இவன் வெட்கத்துடன் பதில் சொல்ல எழுந்தபோது அந்த இரைச்சல் கேட்டது.டீச்சர் அவசரமாய் எழுந்தார்.
     “எல்லோரும் எழும்பி வெளியிலை வாங்கோ பொம்மர் போலகிடக்குது.சத்தங்கிட்டைகேட்குது’’
                                                                        அது பொம்மர்தான்.வட்டமிடத்தொடங்கியிருந்தது.டீச்சருடன் எல்லோரும் கத்திக்கொண்டே வெளியில் ஓடினார்கள்.செல்வி படியில்தடுக்கிவிழுந்து அழத்தொடங்கியிருந்தாள்.டீச்சர் அவளை அள்ளிக்கொண்டு எல்லாரையும் இழுத்துக்கொண்டு பங்கருக்குள் ஓடினார்.
                                            பங்கருக்குள் அழுதபடியே நெருக்கியடித்துகாதுகளைப்பொத்திக்குனிந்தபடி எல்லோரும் இருக்க குண்டு மிக அருகில் விழுந்து வெடித்து டிராக்டர் பெட்டியிலிருந்து கற்களை சரித்துக்கொட்டுவதுபோல நீண்டுஅதிர்ந்தது.ஓவென்று எல்லோரும் அலறினார்கள்.மண் உதிர்ந்து கொட்டுண்டது.கற்களும்புழுதிகளும் குண்டின் வாசத்தோடு சிதறி விழுந்து எங்கும்பரவின.பொம்மர் மீண்டும் வேகம் எடுத்து இரைந்து இன்னுமொரு குண்டை வீசியது.அது கொஞ்சம் தொலைவில் விழுந்து வெடித்தது.
எல்லாம் அடங்கி அமைதியானபின்னர் அவர்கள் வெளியில்வந்தார்கள்.கூட்டமாய் எல்லாருடைய அம்மாக்களும் அப்பாக்களும் ஓடிவந்திருந்தார்கள்.
அம்மா நடுங்கியகைகளால் இவனை வாரித்தூக்கிக்கொண்டு வீட்டுக்கு அழுதபடியேஓடினாள்.ரொபிப்பக்கட் எங்கேயோ விழுந்து தொலைந்துவிட்டது.
          அன்றைக்கு சின்னன் ஆச்சி செத்துப்போய்விட்டாள்.குண்டு அவள் வளவில்தான் விழுந்துவெடித்திருந்தது.சின்ன சிதறல் தான் அவளுக்குப்பட்டதென்று பேசிக்கொண்டார்கள்.
         காலையில் இடியாப்பம் கொடுக்கப்போனபோது அவள் முற்றம் கூட்டிக்கொண்டு நின்றாள்.
       ‘எனக்கிண்டைக்குப் பேத்தே” என்றான்.
 ‘’என்ரை ராசனுக்கு பேத்தேயா என்று கன்னத்தைக்கிள்ளி ‘’உச்சியில் பழுத்த இரண்டு கொய்யா இருக்குது பின்னேரம் வா ராசன் பிடுங்கிவைக்கிறேன் ‘’ என்று சொன்னாள்.
      ஆச்சியின் ஊர்வலமும் இருட்டும்போதுதான் நடந்தது.பிறகு
இவன் போய்ப்பார்த்தபோது ஆச்சி திண்ணையில்இருக்கும் இடத்தில் இரத்தம் காய்ந்து கிடந்தது.கொய்யாமரத்தைக்காணவில்லை.

         அவனுக்கு அன்றிரவும் தூக்கம் வரவில்லை.அப்பாவின் நினைவு வந்துகொண்டேயிருந்தது.ஆச்சி காலையில் கதைத்தது படமாய்க்கண்முன் விரிந்தது.பல இரவுகள் இப்படித்தூக்கமின்றி கழியத்தொடங்கியிருந்தன.இரவுநேரங்களில் திடீரென விழிப்பு வரும்.விழிப்போடு அப்பாவின் நினைவும் சேர்ந்துகொள்ளும்.          அதாள பாதாளத்தில் எதையும் பிடிக்கமுடியாதவனாய் விழுந்துகொண்டிருக்கிற உணர்வு விழிக்கிறபோது இருக்கும்.இருட்டில் கைகளால்,தடவிப்பார்ப்பான்.அம்மா கையில் படுவாள் அவளை இறுக்கப்பிடித்துக்கொள்வான்.
                                 தூக்கம் வராமால் நீண்டு செல்லும் இரவுகளில் அவன் மனம் கற்பனை உலகங்களுக்குள் புகுந்து கொள்ளும்.
வானத்தில் பறந்து திரிவான்.எதிர்ப்படுகிறவிமானங்களையெல்லாம் கோடரியால் தறித்து வீழ்த்துவான்.கயிறெறிந்து விமானங்களை கட்டிச்சுற்றி எறிவான்.பெரிதாக மலையளவுக்கு வளர்வான்.விமானங்களைப்பிடித்து கசக்கி தூளாக்கி ஊதுவான்..கனவுகளில் அவனுக்கு இறந்து போனவர்களை உயிர்ப்பிக்கும் அதிசய சக்தி வந்துவிடும்.அப்பா திடீரென வீட்டுக்கு வருவார்.எல்லோரும் அதிசயிப்பார்கள்.பூவரச நிழலில் இருந்து அப்பா கதைசொல்லுவார்.அவனும் அப்பாவும் உலகில் உள்ள எல்லாப்பொம்மர்களையும் தேடி அழிப்பார்கள்.
இப்படிக்கனவுடன் தூங்கிப்போவான்.
 விழிக்கும்போது  பொம்மர்களின் இரைச்சலோடேயே சிலவேளை கண்விழிக்க வேண்டியிருக்கும்.அப்பா படத்திலிருந்து எப்போதும்போல சிரித்தபடி இருப்பார்.
            சின்னண்ணா இயக்கத்துக்குப்போய் நீண்டகாலமாகிவிட்டது, போலிருந்தது.எப்போதாவது ஒருமுறை வீட்டுக்கு வருவான்.
இந்தமுறை வந்திருந்தபோது புளியமரத்தடியில் பெரிய துப்பாக்கி பொருத்தியவண்டி மறைவாக நிறுத்தப்பட்டிருந்தது.
      அண்ணனோடு வந்திருந்தவர்களில் உயரமான மீசையோடிருந்தவர்  இவனைத்தூக்கித்தோளில்வைத்து கொண்டு சுற்றினார்.அந்தப்பெரிய துவக்கு பொம்மரைச்சுட்டு விழுத்துவதற்கு என்று அவர்தான் இவனுக்குச்சொன்னார்.
அவர்கள் போகும் வரை பச்சை வலையினால் மூடப்பட்ட அந்தகுழாய் நீண்ட இயந்திரத்தை வாய்மூடாது சுற்றிசுற்றி வந்துபார்த்தபடியே நின்றான்.
                       அன்றைய இரவிலிருந்து அந்தத்துப்பாக்கியும் இவன் கற்பனைகளில் இடம்பிடித்துக்கொண்டது.அதைக்கையில் தூக்கி படபடவென்று பொம்மர்களை சுட்டுவீழ்த்துவான்.
       பிறகு சின்னண்ணன் வீட்டிற்கு வரவேயில்லை.எங்கோ சண்டை நடந்துகொண்டிருக்கிறது என்று பேசிக்கொண்டார்கள்.

                   தூரத்தில் கேட்கத்தொடங்கிய விமானத்தின் இரைச்சல் இவனை இவ்வுலகத்துக்கு கொண்டுவந்தது.மாடுகள் விட்ட இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி மேய்ந்துகொண்டிருந்தன.
                                       விமானச்சத்தம் நேரே வருவது போலத்தோன்றியதுஅவன் வயலுக்குள் இறங்கி அண்ணாந்து பார்த்தான். அவ்ரோ விமானம் மேற்காகப்பறந்து வந்துகொண்டிருந்தது.அம்மா வீட்டில் முருகா என்று கும்பிடத்தொடங்கியிருப்பாள்.
            பூவரச மரத்தடியில் நின்றால் விமானம் பலாலியில் வட்டமடித்து இறங்குவது தெரியும்.
    மரத்தடிக்கு விமானத்துக்கு போட்டியாக ஓடி மூச்சிரைக்க நின்று பார்த்தபோது விமானம் உச்சியைக்கடந்துவிட்டது.புகைப்பதுபோல தோன்றியது.ஒரு கணந்தான் மின்னல் வெட்டுவதுபோல அது அந்தரத்தில் தடுமாறி தீப்பிளம்பாக வெடித்து சிதறியது. நெருப்புத்துண்டுகள் காற்றில் சீறி வெளியெங்கும் பரவ பிளந்த விமானம் விழுந்து மறைந்தது.
                                புகைந்தபடி கருகிய உலோகச்சிதறல் ஒன்று அவன் முன்னால் வந்துவிழுந்தது.சுற்றி இருந்த புற்கள் கருகின.
சிறிது நேரம் அவன் திகைத்துப்போய் அசையாமல் நின்றான்.சட்டென்று சிலிர்த்து உதறிக்கொண்டான் உள்ளே சந்தோஷ ஊற்று உடைப்பெடுத்தது. அந்தச்சிதறல் துண்டை குனிந்து எடுத்தான். அது இன்னும் சூட்டோடு இருந்தது.
’’அம்மாவுக்கு காட்டோணும்”. 
கைகளில் அதை உயர தூக்கிக்கொண்டு வரம்பு வழியே துள்ளிக்குதித்து ஓடினான்.சூரியன் மேற்கில் இறங்கத்தொடங்கியிருந்தது.
 -நிறைவு-

*****************************************************************************************
15 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தஆக்கம்;மீள்பதிவு.

10 comments:

Abarajithan said...

வழக்கம்போல கலக்கல் டாக்டர்..

எஸ்.கே said...

அருமை!

natbas said...

கொஞ்சம் சிரமம் பார்க்காமல் பத்தி பிரித்துப் பதிவு செய்ய முடியுமா? பத்திகள் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாக இருக்கின்றன. படிக்கும்போது சிறிது சிரமமாக இருக்கிறது.

கதையைப் பற்றி நான் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது? வாயடைத்துப் போய் விட்டேன்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னாலேயே இவ்வளவு நன்றாக எழுதி இருக்கிறீர்கள்! திகைப்பாக இருக்கிறது.

முன் எப்போதோ ஒரு தடவை நீங்கள் வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் அளவாவது வருவீர்கள் என்று சொன்னேன். தப்பு. மாபெரும் தவறு. நீங்கள் நினைத்தால் செகாவுக்கே சவால் விட முடியும்.

உன்னதமான ரஷ்ய இலக்கியங்களுக்கு இணையாக தமிழிலும் வரக்கூடும்- அது உங்களால் முடியும்.

இலக்கியம் இலக்கியம் என்று பினாத்துகிறான் என்று நினைக்க வேண்டாம். கட்டுரைகள் எல்லாம் கட்டமைக்கப்பட்ட உரைகள். அதை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் திரித்துக் கூறலாம்.

ஆனால் கதையாய் சொல்லப்பட்ட ஒரு விஷயம், அது விரித்துக் காட்டும் உண்மை, உணர்ச்சிகள், அவற்றை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. அரசியல், வரலாறு, அறிவாளிகளின் பித்தலாட்டம்- அத்தனையையும் தாண்டி நிற்கக்கூடியது புனைவும் கவிதையும்.

எந்த ஆவணத்தின் மூலமும் வெளிவர இல்லாத உண்மையை ஒரு கதை போகிற போக்கில் சொல்லிப் போய் விடும்.

எழுதுங்கள், என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். அவகாசம் கிடைக்கும்போது எழுதுங்கள். இது எனது தாழ்மையான வேண்டுகோள்.

வரசித்தன் said...

@அபராஜிதன்

நன்றி

@எஸ்.கே

நன்றி

வரசித்தன் said...

@நட்பாஸ்

தங்கள் கருத்துக்கு நன்றி. நெருக்கமாய்த்தானிருக்கிறது.திருத்தி விடுகிறேன்.

இந்தக்கதை 15 வருடங்களுக்கு முன்பு இருந்த அரசியல் சூழலில் எழுதப்பட்டது.அப்போது விமானம் ஒன்று விழுந்தது.உடனே
கதையை எழுதி அனுப்பினேன்.
அந்த நேரத்தில் படைப்பூக்கமும் தாக்கமும் அளித்தது ஒரு சிறுகதை. ’கோசலை’ என்ற திரு ரஞ்சகுமாரின் சிறுகதை.
அந்தக்கதையைப்படித்துக்கிறுகிறுத்துப்
போயிருந்தேன்.
சம்பவங்கள் கற்பனையில்லை.நிஜத்தில் இன்னும் கொடூரமானவை.அவை மனதிலிருந்து தூண்டிக்கொண்டேயிருந்தன இருக்கின்றன.ஒரு நல்ல படைப்பைச்சந்தித்தபோது அது எழுத்தைத்திறந்து விட வெளிவந்தது. இது நல்ல எழுத்தா என்று ஆராயத்துணியவில்லை.அப்போது மனசுக்கு வடிகால்.
டீச்சருக்குக்காயம் பட்டது.காலறுந்து தொங்கியது. மோட்டார்சைக்கிளில் டீச்சரைக்கொண்டு போனார்கள் நானும் இன்னொருவரும் டிச்சரைத் தூக்கிமோட்டர்சைக்கிளில் பின்னிருந்தவரின் மடியில் தாங்கக்கொடுத்தோம்.தோலில் தொங்கிய பாதத்தை விழுந்து விடப்போகிறது என்று மடித்து சேர்த்துப்பிடிக்கக்கொடுத்தேன்.குழந்தைகள் யாரும் காயப்படவில்லை.அவர்களுள் நான் தங்கியிருந்தவீட்டுப்பையனும் இருந்தான்

உங்கள் ஊக்கம் அன்புக்கு மிக்க நன்றி.

ப.செல்வக்குமார் said...

கொஞ்சன் நீளமா இருக்குங்க ., அப்புறம் வந்து படிக்கிறேன் ..!!

natbas said...

@ப.செல்வக்குமார்

:)

தம்பி இதுக்கே ஓடிப் போயிருச்சே, நாமல்லாம் எழுதறதைப் படிச்சதில்லை போல! :))

"ஸஸரிரி" கிரி said...

நட்பாஸ் அவர்கள் சொன்ன அதையேதான் சொல்கிறேன்...

"எந்த ஆவணத்தின் மூலமும் வெளிவர இல்லாத உண்மையை ஒரு கதை போகிற போக்கில் சொல்லிப் போய் விடும்"

உண்மை தெறிக்கிறது. உள்ளம் கனக்கிறது. போதும்டா சாமி என்றுள்ளது....

வரசித்தன் said...

@ப.செல்வகுமார்.

காலின் நீளம் எவ்வளவு இருக்கவேண்டும்?
இடுப்பிலிருந்து தரையைத்தொடுமளவுக்கு.

@நட்பாஸ்

நீங்க நீளமாய் எழுதுவதில்லை.

@ஸஸரிரி கிரி
கருத்துக்கு நன்றி.
மற்றக்கிரி யாரு

natbas said...

@வரசித்தன்

:)