Friday, October 22, 2010

கதவிடுக்கில் காலும்,வோஷிங்மிஷினில் மூளையும்!


மிகுந்த எச்சரிக்கையுடன்தான்
இருந்தேன்
தட்டப்பட்டது கதவு
துளைவில்லையினூடு
அப்பாவியாகத்தான்
தெரிந்தது அவன் முகம்
பேசலாமா
என்ற அவன் குரல் கூட
பலவீனமாகத்தான்
இரக்கம் ஈர்த்தபடி
ஒலித்தது
கதவை
என் வார்த்தைகள்
செல்லும் அளவுக்கு
ஒரு கண் அகலத்துக்குத்தான்
திறந்தேன்

கதவிடுக்கில்
நுழைந்தது
அவன் பூட்ஸ்கால்
அசுரத்தனத்தோடு

என்
வாழ்விலிருந்து
வெளித்தள்ளவே
முடியாத
கொடூரமாய்
நிகழ்ந்தது
அவன்
ஆக்கிரமிப்பு

பிட்ரசோ பூபூக்காலியின் ’’சுரங்கரயில்’ என்ற கவிதைத்தொகுப்பில் இருந்து.--
(நேற்றையபதிவு)

நகர்ப்புரங்களில் பூட்டியகதவினைத்தட்டி உள்ளே நுழைந்துவிடுகிற  ஆபத்து எப்போதுமிருக்கிறது.அதனால்தான் துளைவில்லை, ஒருக்களித்துத்திறப்பதை மட்டுப்படுத்தும் சங்கிலி,மைக்கும் கமாராவும் என்றெல்லாம் பாதுகாப்புச்சமாச்சாரங்களைப்பொருத்திவிடுகிறார்கள் வசதிபடைத்தவர்கள்.

மேற்படி ‘’கவிதை’’யின் பேசுபொருளில் இருந்து விலகி அதன் சாயலில் இருக்கின்ற இன்னொரு கதவிடுக்கில் கால் என்கிற  ஒரு உளவியல் உத்தியைப்பார்ப்போமா?

ஒரு சின்ன விஷயத்துக்கு ஒருவரைச்சம்மதிக்க வைத்தால் ஒரு பெரிய விஷயத்தில் ஆளை விழுத்தலாம்.
இடம் பிடித்தால் காலப்போக்கில் மடங்கட்டலாம்.

ஒருத்தரின் வீட்டுக்குள் நுழையப்போனால் ஆள் கதவை அறைந்து சாத்திவிடுகிறான் என்று வைத்துக்கொள்வோம்.அதன் பிறகு பேச்சு காதில் விழுவதில்லை.காரியம் ஆகாது.
கதவை மூடவிடாது ஒரு சிறிதளவு திறந்து வைத்திருந்தால் போதும். பிறகு பேசிப்பேசி வீட்டுக்குள் நுழையலாம்.அதற்குத்தான் சிலர் கதவைத்திறக்கிறபோது சப்பாத்துக்காலை இடையில் புகுத்திவிடுவார்கள்.ஹாலிவுட்படங்களில் இதுமாதிரிப்பார்க்கலாம்.
இந்த டெக்னிக்கை foot in door phenomena என்று உளவியலாளர்கள் சொல்கிறார்கள். விற்பனை உலகத்திலும் இந்த உத்தி இருக்கிறது.

கொரிய யுத்தத்தின் போது கைதிகளாகப்பிடிபட்ட அமெரிக்கச்சிப்பாய்கள் சீன கொம்யூனிஸ்ட்களினால் நடாத்தப்பட்ட சிறைகளில் அடைக்கப்பட்டனர்.ஆச்சரியம் என்னவென்றால் சித்திரவதைகள் இல்லாமலேயே பெருமளவுகைதிகளின் மனத்தை சீனர்கள் மாற்றி விட்டார்கள்.
  இதற்குப்பயன்படுத்திய யுத்தி தான் இந்த கதவுக்குள் கால் முறை.
ஆரம்பத்தில் மிகச்சிறிய செயற்பாடுகளாகத்தான் தொடங்கப்படும்.ஆழமான நம்பிக்கைக்கு எதிராக சின்ன செயலைச்செய்யச்சொல்வார்கள்.முதலில் மனம் ஒரு சின்ன விஷயந்தானே செய்துவிட்டால் போச்சு  ஆபத்துக்கு பாவமில்லை என்று நினைக்கும்.
சீனர்கள் முதலாளித்துவத்தின் குறைகள் பற்றிப்பேசச்சொன்னார்கள்.பிறகு எழுதச்சொன்னார்கள்.பிறகு ஆழமான உரையாடல்கள் இப்படியே போய் பல அமெரிக்கக்கைதிகள் கொம்யூனிச்சத்துக்கு ஆதரவாக பேசத்தொடங்கிவிட்டார்கள்.போரில் அவர்கள் பக்கமே சாய்ந்து விட்டார்களாம்.
மூளைச்சலவை(அமெரிக்கர்கள் அதை மூளைச்சலவை என்கிறார்கள்.கொம்யூனிஸ்டுகள் அவர்கள் உண்மையைக்கண்டறிந்தவர்கள் என்பார்கள்) என்பதும் இதுதான் சிறுகச்சிறுக நிகழுகிற மாற்றம் புரிவதில்லை.ஊறிப்போன ஒரு நம்பிக்கையை மாற்றுவதற்கு தடாலடியாகமுயற்சிக்காமல் சிறு பகுதியிலிருந்து தொடங்குவார்கள்
 (மூளையைச்சலவை செய்யலாம் பரவாயில்லை அயன் பண்ணக்கூடாது மூளையில் மடிப்பில்லையென்றால் எல்லாம்போச்.. என்கிறார் மூ.சலவைசெய்யப்பட்ட நண்பரொருவர்
   மறுபக்கமாக சித்திரவதை செய்து இறுக்கமான கட்டுப்பாடுகளை விதித்து ஆதரவுக்கோஷம் போடச்செய்வது வெற்றியளிப்பதில்லை என்பது கண்கூடு.
    அநியாயத்துக்கு ,இந்த உத்தியில் சித்திரவதை செய்யப்பழக்குபவர்களை முதலில் அறை வாசலில் காவலுக்கு விடுவார்கள்.பிறகு அறையினுள் காவல்.இப்படியே இறுதியில் சித்திரவதை செய்வதை மனம் ஏற்றுக்கொண்டு வதைஞர்களாகிவிடுவார்கள்.

‘’ ஐயா இது நல்ல தரமான பொருள் பாவித்துப்பாருங்கள் ’’ என்று தொடங்குவார்கள். சில விற்பனையாளர்கள்.
‘’இல்லை இது எனக்குத்தேவையில்லை ‘’என்று மனக்கதவை அறைந்து சாத்தி மிக இலகுவாக மறுத்து எங்கள் வழியே போய்விடுவோம்.
‘’இதை நான் விற்கவரவில்லை.இதைப்பற்றிச்சொல்லுகிறேன் சும்மா கேளுங்கள்.நீங்கள் வாங்கத்தேவையில்லை’’ இப்படித்தொடங்குவார்கள்.    நேரமும் இருந்துபொழுதும்போகவில்லை,கேட்டுத்தான் பார்ப்போமே  என்றுதான் கேட்கத்தொடங்குவோம். இறுத்யில் ஒன்றுக்கு இரண்டாக வாங்கவைத்துவிட்டுப்போகும் அசகாய சூரர்கள் இந்த உத்தியைப்பயன்படுத்தித்தான் எங்கள் பர்சைத்திறக்கவைக்கிறார்கள்.
இன்னும் பல வழிகளில் விற்பனைத்துறையில் இந்த உத்தி மிகவும் திறமையாக உபயோகிக்கப்படுகிறது.

   சிலர் ஒரு சிறுதொகையைக்கடனாக வாங்கி சில நாள் கழித்து கொடுத்துவிட்டு பிறகு கொஞ்சம் பெரிய தொகையை வாங்குவார்கள்.இப்படி வாங்கி வாங்கி மிகப்பெரியதொகையோடு கிளைமாக்ஸில் தலைமறைவாகிவிடுவார்கள்.சும்மா போய்
‘’அண்ணை ஒரு பத்து லட்சம் கடன் தாறீங்களா’ என்று கேட்டாலே சந்தேகப்பட்டு போலிசில் பிடித்துக்கொடுத்திருக்கக்கூடிய எச்சரிக்கைப்பேர்வழிகள் கூட, இப்படி ஏமாந்த சம்பவம் நட்ந்திருக்கிறது.அங்கு கதவைத்திறந்துவைத்திருக்க உதவிய கால்கள் ஒழுங்காகச்செலுத்தப்பட்ட சிறுதொகைக்கடன்கள்தான்

இப்படி கதவிடுக்கில் கால்வைப்பது போல மனக்கதவைச்சாத்தவிடாது மெல்ல புகுந்து கருத்திலிருந்து அனைத்தையும் கவர்வதும் புகுத்துவதும் ஒருபுறம் இருக்க இதே உத்தியைப்பாவித்து நல்ல கருத்துக்களை நல்லசெயல்களை விருத்திசெய்யலாம் என்பது இந்தக்கதவிடுக்கு காலால் விளையும் நன்மை.

 ஒருதந்தை தனது மகனைப்படிக்க/வாசிக்க வைக்க ‘’நீ படிக்கத்தேவையில்லை ஒரு மணித்தியாலத்துக்கு மேசையில் உட்கார்ந்திரு அது போதும்’’ என்றார்.
இப்படியெல்லாம் செய்யிறவர் மேசையில்தானே இருக்கச்சொல்கிறார் என்று இருந்தான்.காலப்போக்கில் சும்மா மேசையில் இருக்க அலுத்து புத்தகம் ஒன்றை விரித்துப்பார்த்தான்.பிறகு படிக்கத்தொடங்கிவிட்டான்.(இது அந்தப்பையன் கதைப்புத்தகம் அப்படி இப்படியென்று கூட வாசிக்கும் பழக்கமில்லாதவன் என்பதால் ...) 

இன்றைக்கு மூளைச்சலவையை,கருத்துத்திணிப்பு வோஷிங் மிசினில் மொத்தமாக செய்யப்படுகின்றன. கருத்து கொள்கை மாற்றங்களைச்செய்வதில் அதிகாரவர்க்கம்,ஊடகங்கள்,வியாபார உலகம் என உலகம் கண்ணுக்குதெரியாத பல கால்களை நீட்டி வைத்திருக்கிறது.

’ஒட்டகத்துக்கு இடங்கொடுத்த’ கதையாக மெல்ல நாம் இதுவரைகாலமும் கொண்டிருந்த கொள்கையிலிருந்து ஒரு சின்னசெயலில் செய்யத்தொடங்கும் தவறு எம்மையறியாமலேயே வளர்ந்து பாரதூரமான திரும்பிச்செல்லமுடியாத தூரத்துக்கு வந்தபிறகு எங்களுக்கு சொல்ல எஞ்சியிருக்கக்கூடியது
‘’அற நனைந்தபின் கூதலென்ன குளிரென்ன’’ என்பதுதான்.
                         கபடத்தனமாக மனவாசலில் கால் வைப்பவரை கண்காணிக்கும் வேளை நல்ல மாற்றம் நிகழ்த்த மனக்கதவுகளை முற்றாக மூட விட்டுவிடவும் கூடாது.


பிட்ரசோ பூபூக்காலியும் சுரங்கரயிலும்

’’பிட்ரசோ பூபூக்காலி குவாட்டமாலாவைச்சேர்ந்த பெண்கவிஞர்.அவருடைய முதலாவது கவிதைத்தொகுதி சுரங்கரயில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது மேற்குலகில் ஒருபுரட்சியை ஏற்படுத்தியது.உலக இலக்கியத்தை அவரைத்தவிர்த்துவிட்டு யாரும் பேசிவிடமுடியாது’’

இப்படி ஒன்றும் எழுதப்போவதில்லை. ஏனென்றால் பிட்ரசோ பூபூக்காலி என்று உண்மையில் யாருமேயில்லை.சுரங்க ரயில் இருக்கிறது கவிதைத்தொகுப்பு இருக்கிறதா தெரியவில்லை.எல்லாம் நான் இட்டுக்கட்டியதுதான். ஏனென்றால்...
இந்தப்பதிவின் கதவை மூடவிடாத கால் தான் இந்த பிட்ரசோ பூபூக்காலி.
மன்னித்துவிடுங்கள்
அதனால் கவிதை எனப்படும் அந்த வஸ்துவின் வரிகள் இப்படித்தான் அமைந்திருந்திருக்கவேண்டும்

கதவிடுக்கில் கால்

மிகுந்த எச்சரிக்கையுடன்தான்
இருந்தேன்
தட்டப்பட்டது கதவு
துளைவில்லையினூடு
அப்பாவியாகத்தான்
தெரிந்தது அவன் முகம்
பேசலாமா
என்ற அவன் குரல் கூட
பலவீனமாகத்தான்
இரக்கம் ஈர்த்தபடி
ஒலித்தது
கதவை
என் வார்த்தைகள்
செல்லும் அளவுக்கு
ஒரு கண் அகலத்துக்குத்தான்
திறந்தேன்

கதவிடுக்கில்
நுழைந்தது
அவன் பூட்ஸ்கால்
அசுரத்தனத்தோடு

என்
வாழ்விலிருந்து
வெளித்தள்ளவே
முடியாத
கொடூரமாய்
நிகழ்ந்தது
அவன்
ஆக்கிரமிப்பு

பிட்ரசோ பூபூக்காலியின்
’’சுரங்கரயில்’
என்ற
கவிதைத்தொகுப்பில்
இருந்து.


2 comments:

natbas said...

பயனுள்ள பதிவு- http://thesituationist.wordpress.com/2007/03/03/situational-sources-of-evil-part-iii/

இதை நினைத்துப் பார்க்கிறேன்.

எஸ்.கே said...

அற்புதமாக உள்ளது!!!