அந்த இடத்தில் பரவியிருந்த அமைதி என்னுள் ஊடுருவி ஊசாலாடிக்கொண்டிருந்த மனத்தை இழுத்து நிறுத்தியது. கயிறறுந்து கிணற்றுள் விழுந்த வாளி போல சட்டென்று அமைதியில் விழுந்து எழுந்த அலைகள் அடங்க மெல்ல சரிந்து இறங்கி மூழ்கி அசைவற்றுப்போனது மனம்.
உடலின் அடைபட்டுக்கிடந்த ஆயிரமாயிரம் துளைகள் திறந்துகொண்டன. காற்று ஊடே செல்ல நான் சங்கீதமாய் உணர்ந்தேன்.
இது என்ன மாயம்.இது ஒரு மந்திர சக்தி.அந்த ஒருகணத்தில் எல்லாவற்றையும் துறந்து அங்கேயே தங்கிவிடலாம் போலிருந்தது.
அந்த இடம் பாதத்துவடாகத்திலிருந்து பத்துமைல் கிழக்கே போக வருகிறது. ஒரு சின்ன கிராமம்; ஒரு மண்டபமும் சின்ன மூலஸ்தானமும் ஒரு குளமும் சிலகொக்குகளும் ஒரு மருதமரமும் சில மாடுகளும் சில்லென்று வீசும் காற்றும் குளத்துக்கு அப்பால் விரிந்து பரந்த வயல்களும் மேலும் அவை விரியாது தடுக்கும் கரும்பச்சை மரங்களடர்ந்த திசை மறைக்கும் குன்றுகளும் அந்த இடத்துக்கு வானைக்கால்முட்டு என்று பெயர்.
வெயில் உச்சிக்கு ஏற வெயிலில் தங்கமும் வெள்ளியும் கலந்தது போல வெளி பளபளத்துக்கிடந்தது.மனம் உருகி எங்கும் வெளியெங்கும் பரவுவதுபோலத்தோன்றியது.
பிரியமனமில்லாமல்தான் பிரிந்து வந்தேன். மூன்று நாட்களுக்கு எனக்கு யாரோடும் அதிர்ந்து பேசமுடியவில்லை.மெல்லிய பரவசத்தில் மனம் மிதந்து கொண்டு கிடந்தது.
அந்தப்பயணம் ஒரு இனிய அனுபவம்.
பூமியிலிருந்து காலை ஆறுமணிக்கு புறப்பட்டால் ஸ்பேஸ் எக்ஸ்ப்ரஸ் பன்னிரண்டு மணிக்கெல்லாம் பெருவியாழன் ஸ்பேஸ் ஸ்டேசனில் கொண்டு போய்விட்டுவிடும்.
பிறகு சுராஞ்சிப்பயணம். சுராஞ்சி மூன்றாம் சூரியனின் ஐந்தாம் கோள்.பூமியின் பிரதி. பூமியில் மாலை நாலு மணிவாக்கில் சுராஞ்சிக்கு போய்விடலாம். சுராஞ்சியில் ஒரு நாளுக்கு நாற்பத்தெட்டு மணித்தியாலம் பகலெல்லாம் விடிந்து கொண்டேயிருக்கும் உணர்வு வந்தது எனக்கு.
ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்து பாதத்துவடாகத்துக்கு செல்லும் வஸ்காஸ்படகுப்பயணம் சுகமானது என்று சொல்லுவார்கள்.ஆனால் ஒன்று படகில் கொட்டாவி விடுவது குற்றம்.கொட்டாவி ஸ்கானர் பொருத்தியிருக்கிறார்கள்.கொட்டாவி வராமல் தடுப்பதில் என்கவனம் சிதறியதால் பயணத்தை அனுபவிக்க முடியவில்லை.
மறந்தும் தேங்காய் எடுத்துக்கொண்டு செல்லவேண்டாம்.சுராஞ்சியில் தேங்காயை போதை வஸ்துவில் சேர்த்திருக்கிறார்கள். நம்மவர் நிறையப்பேர் தேங்காய் எடுத்துக்கொண்டு போய்சிக்கல்பட்டிருக்கிறார்கள்.
வாழ்வில் ஒரு முறையாவது வானைக்கால் முட்டுக்கு போய்வர வேண்டும். பூமிக் குச்சில் அடைபட்டுக்கிடப்பதா?
**********
14 comments:
சார் எப்படி சார் இவ்வளவு சூப்பரா எழுதறீங்க?
நீங்க மருத்துவ டாக்டரா இல்லை இலக்கிய டாக்டரான்னு இதைப் படிச்சதும் சந்தேகம் வருது. வர்ணனைகள் அவ்வளவு அற்புதமா இருக்கு.
கதையைக் கொஞ்சம் மெல்லக் கொண்டு போங்க டாக்டர். மூன்றே பத்திகளில் வேற்று கிரகம் செல்வதெல்லாம் ரொம்ப ஸ்பீட்!
படிக்கும்போதே மூச்சு வாங்குது :)
அப்புறம் என்ன ஆச்சு?
புகழும்படிக்கு ஒன்றுமில்லை சார்.இது சும்மா.அப்புறம் கதை ஒன்று இதில் இல்லை.கொஞ்சம் கிறுக்குத்தனம் அவ்வளவுதான்.
நல்லாயிருக்கு.. பொதுவா வேற்றுக்கிரகத்துல இருந்து வந்து பூமியை ரசிக்கிறது மாதிரிதான் எழுதியிருப்பாங்க.. இது வித்தியாசமா இருக்கு..
எல்லாம் சரிதான். ஆனா சூரியன்ல இருந்து ஐந்தாவது கிரகத்துல கொக்கா? (ஓகே. சயின்ஸ் பிக்ஷன்ல லாஜிக் பாக்கக் கூடாது இல்லையா?)
சயன்ஸ் பிக்சன் இது என்று எப்படிச்சொல்லுகிறீர்கள்?
இதில் எங்க சயன்ஸ் வந்தது?
திருத்தல யாத்திரை
அது சரி மூன்றாவது சூரியனின் ஐந்தாவது கோளில் கொக்கிருக்கக்கூடாது என்று ஏதாவது விதியிருக்கிறதா?
மாடு,வயல் எல்லாம் இருந்தது ஏன் ஆட்சேபிக்கவில்லை. :)
வாத்து இருக்காது என்று கணித ரீதியாக நிரூபிக்கலாம். அட போங்க சும்மா.
எல்லாச்சூரியனிலும் நம்ம பூமி இருக்கிற இடத்தில்தான் அந்தச்சூரியனுக்கு பூமி உண்டாகவேணுமா(ஸ்பேஸ் அறிவு எனக்கு இல்லை)நீங்க சொன்னாத்தான் உண்டு
மனித லொஜிக்:
பூமி மாதிரி ஒரு கிரகத்தைக்கண்டுபிடித்தால் எல்லாம் போய்விடும்.
இங்கு நான் இருக்குமிடத்தில் பல்லி இருக்குது.மாமரம் நிற்கிறது. எங்கிருந்து வந்ததென்றால் நம்ம இடத்திலிருந்துதான் வந்திருக்கிறது.
உலகம் ஒரு சிலநூறு வருடங்களில் குளோபல் வில்லேஜ் ஆகிவிட்டது.
ஒரு அபத்தப்பதிவு
@Abarajithan அண்ணா, இது எல்லாமே நம்மளோட மிரர் இமேஜ் யூனிவர்ஸ்ல நடக்கற கதைங்க'ண்ணா! "
கவனமா படிங்க- " சுராஞ்சி மூன்றாம் சூரியனின் ஐந்தாம் கோள். பூமியின் பிரதி."
அப்ப அது என்ன மூன்றாம் சூரியன் அப்படின்னு கேப்பிங்க. கேப்பிங்கதானே?
இது உடைஞ்சு போன மிர்ரர்- அதாவது broken symmetry. இங்க இப்படிதான் இருக்கணும்: symmetry துண்டு துண்டா சிதறிப் போச்சு. அதில பல பிரதிகள். இது மூன்றாம் பிறதி.
நம்ம டாக்டர் தென் அமெரிக்க கலைஞர் ஆஸ்கார் மூனோ பாணியில இதை எழுதப் போறாருன்னு தோணுது-
"Whilst Muñoz's work subtly alludes to the impact of the war in Colombia - a country immersed in political and social turmoil for over 50 years - his themes have a more universal appeal. Muñoz reinforces this: "My work today arises from my interest in understanding how a society comes to accept war - or rather, a dark and corrupted succession of wars over more than 50 years and which have not yet ended - as part of the routine of living, where both the past and the present are plagued with daily violent events which are persistently repeated.""
ஆஸ்கார் மூனோ புகைப்படமாக செய்ததை இவர் வார்த்தைகளில் வடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.
தொடர்புடைய சுட்டிகள்:
Oscar Muñoz: Mirror Image- http://universes-in-universe.org/magazine/articles/2008/oscar_munoz
Mirror Matter - the Invisible Universe- http://www.bbc.co.uk/dna/h2g2/A1300429
இந்தக் கதை எப்படி போகுது என்பதை கணினியை என் மடியின் நுனியில் அமர்த்திக்கொண்டு ஆவலாக அவதானித்துக் கொண்டிருக்கிறேன்.
தொடர்ந்து எழுதுங்க டாக்டர். உங்க கிறுக்கல்கள் எங்க கிறுகிறுக்கல்சைப் போக்கும் மருந்து!
@வரசித்தன்
என்ன சார் அவசரப்பட்டு டேமேஜ் பண்ணிட்டீங்க! கொஞ்சம் பொறுத்திருக்கக் கூடாதா!!!
நான் ஆஸ்கார் மூனோவைத் தேடிப் பிடிச்சுக் கூட்டியாரதுக்குள்ள காரியத்தைக் கெடுத்திட்டீங்களே! :(
இந்த உலகத்துல அபத்தம்னு எதுவுமே இல்ல டாக்டர்.
அர்த்தம் வெச்சு சொன்ன வார்த்தைக்கு ஒரு அர்த்தம். அபத்தமா நினைச்சு சொன்ன வார்த்தைக்கு ஆயிரம் அர்த்தம்!
இது வரசித்தன் பஞ்ச்!
@ நட்பாஸ்
அட இப்படி நீங்கள் எழுதபோவதாய்த்தெரிந்திருந்தால் அப்படி எழுதுவதாய் பாவ்லா காட்டிட்டிருந்திருப்பேனே
:)
உங்கள் எழுத்தின் தனித்தன்மை சொல்வதை விட சொல்லாமல் காட்டுவதுதான் அதிகம். இந்த பூடகத்தன்மை மிக அபூர்வமான ஒன்று. எஸ் ராமகிருஷ்ணன் பார்க்க வந்த இல்லை என்று ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதைப் படித்தபின் இலையைப் பற்றி சொல்ல ஒன்றுமேயில்லை என்றாகி விடும். அவ்வளவு அட்டகாசமாக அதை செய்கிறார்.
ஆனால் நீங்கள் எழுதியதைப் படிக்கும்போது அப்படியில்லை. ஸ்படிகம் மணி மாலையில் திடீரென ஒரு ஒளிக்கீற்று பட்டுத் தெறிக்கும். அந்த மாதிரி நீங்கள் எழுதுவதிலும் சாதாரணமாக போகிற போக்கில் சொல்லிக் கொண்டு போகிற மாதிரியான ஒரு வாக்கியம் அல்லது சொற்றொடர், எழுதிய எல்லாவற்றுக்கும் புது வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இருக்கிறது. இது உங்கள் தனித் தன்மை. இயல்பாக நிகழ்கிறது என்று நினைக்கிறேன்.
நீங்கள் அபத்தம் என்று சொல்லும் இந்தப் பதிவிலேயே, "வெயில் உச்சிக்கு ஏற வெயிலில் தங்கமும் வெள்ளியும் கலந்தது போல வெளி பளபளத்துக் கிடந்தது. மனம் உருகி எங்கும் வெளியெங்கும் பரவுவது போலத் தோன்றியது," என்ற வாக்கியங்கள் மூலம் நமக்குக் கிடைக்கிற காட்சி வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.
வானைக்கால்முட்டுக்குப் பத்து மெயில் கிழக்கே இருக்கிற வானைக்கால்முட்டுக்குப் போனவரைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவல் தருகிறது இந்த வரிகள்- இது தவிர, வெற்றுக் கிரகத்தின் சூழல் என்று சொல்வதால் வெயிலில் தங்கமும் வெள்ளியும் கலந்த மாதிரி பிரகாசிக்கும் வெளி எப்படி இருக்கும் என்ற கற்பனை மனதில் விரிகிறது.
"
உள்ளி யோஎன அலறிநின் றேத்தி
உருகி நெக்கிலா உளத்தன்யான் எனினும்
வள்ளி யோய்உனை மறக்கவும் மாட்டேன்
மற்றைத் தேவரை மதிக்கவும் மாட்டேன்
வெள்ளி யோவெனப் பொன்மகிழ் சிறக்க
விரைந்து மும்மதில் வில்வளைத் தெரித்தோய்
தெள்ளி யோர்புகழ்ந் தரகர என்னத்
திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
என்ற வள்ளலாரின் பாடலும் நினைவுக்கு வருகிறது. திரிபுர சம்காரத்தில் தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் கட்டப்பட்ட கோட்டைகள் எரிந்தபோது வெளிச்சம் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனை விரிகிறது. மனதில் உள்ள ஆணவம், கன்மம், மாயை மூன்று கோட்டைகளையும் இது உருவகப்படுத்துகிறது என்றும் சொல்வார்கள். தங்கமும் வெள்ளியும் கலந்தது போல் பிரகாசிக்கும் வெளியில் உருகிக் கலந்த உள்ளம் எனக்கு இதையெல்லாம் நினைவூட்டுகிறது :)
நீங்கள் எதை வேண்டுமானாலும் எழுதுங்கள், எத்தனை அபத்தமாய் வேண்டுமானாலும் எழுதுங்கள். ஆனால் உங்கள் இயல்புக்கு அபத்தமாய் எதுவும் எழுத வராது என்று தோன்றுகிறது!
நல்ல ஒரு வாசிப்பனுபவம் கொடுத்திருக்கிறீர்கள் நன்றி!
இன்னும் கூட இருக்கிறது- அங்கே தேங்காய் என்ற போதைப் பொருளைக் கொண்டு போகக் கூடாது என்று சட்டம் இருக்கிறது என்று எழுதி இருக்கிறீர்கள். தேங்காய் என்பது நம் மரபில் அகங்காரத்தின் உருவகமல்லவா? அதை விட அதிக போதை தரும் பொருள் எங்கே இருக்கிறது!
திரிபுர சம்காரம் நடக்கிற இடத்துக்குத் தேங்காயைக் கொண்டு போனால் பொசுக்கி விட மாட்டார்கள்!
நல்ல ஒரு ஆன்மீக-அறிவியல் புனை கதையின் தளத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். யாரோ கொக்கு பற்றி என்னமோ கேட்டார் என்று இதைப் பாதியிலேயே நிறுத்தி விட வேண்டாம் என்றுக் கேட்டுக் கொள்கிறேன்.
(இந்தக் கதையில் கொக்கு வருவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அந்தக் குறியீட்டையும் விளக்க முடியும், வேண்டாம் என்று பார்க்கிறேன்!)
விண்ணானப் புனைகதை என்பதன் உண்மைப் பொருளும் இந்த ப்யூஸ் போன ட்யூப் லைட்டுக்கு இப்போதுதான் புரிகிறது.
நான் என்ற ஆணவம் ஒரு புனைகதை? அது மறைந்து வெளியாகி விண்ணாய் விரிவதுதானே கதை?
விஞ்ஞானப் புனைகதை- சூப்பர் டைட்டில்- ""வெயில் உச்சிக்கு ஏற வெயிலில் தங்கமும் வெள்ளியும் கலந்தது போல வெளி பளபளத்துக் கிடந்தது. மனம் உருகி எங்கும் வெளியெங்கும் பரவுவது போலத் தோன்றியது."
மலைக்க வைக்கும் விவரிப்பு.
"கயிறறுந்து கிணற்றுள் விழுந்த வாளி போல சட்டென்று அமைதியில் விழுந்து எழுந்த அலைகள் அடங்க மெல்ல சரிந்து இறங்கி மூழ்கி அசைவற்றுப்போனது மனம். உடலின் அடைபட்டுக்கிடந்த ஆயிரமாயிரம் துளைகள் திறந்துகொண்டன."
இதுகூட ஆழ்நிலை தியான அனுபவம்தானே?
கலக்கறீங்க சித்தரே!
உங்க மூணு பேரு மேல சத்தியமா எனக்கு ஒண்ணும் புரியலைங்க.
நல்ல வருணனை. அதை மட்டும் ரசிக்க இயன்றது.
@"ஸஸரிரி" கிரி
எனக்குத் தமிழ்ல புடிக்காத வார்த்தை இதுதான். இதை ஒரு கட்டிடக் கலைஞனைப் பாத்து சொல்வீங்களா? அது ஏன் ஒரு, ஸாரி, மூணு எழுத்தாளர்களைப் பாத்தா மட்டும் உங்களுக்கு அப்படி சொல்லத் தோணுது?
@ கிரி, நட்பாஸ்
என்னைய வச்சு நீங்க காமடி கீமடி பண்ணலயே.
:)))
Post a Comment