கனவிலிருந்து விழித்தபோது கனவில் கண்ட இருள் அறையில் பரவியிருப்பதை உணர்ந்தேன். அன்றும் இவ்வாறேதான் ஒரு கனவிலிருந்து விழித்தபோது அறை சுருங்கி ஒரு பெட்டியாக மாறியிருப்பதான பிரமை தொடர்ந்து இருந்தது.பெட்டியைப்பிய்த்துக்கொண்டு ஓடுவதற்கான முயற்சியில் நான் சிறிது நேரம் ஈடுபட்டிருந்தேன்.
அறையில் இருந்து படித்துக்கொண்டிருந்த வாசு என்னைத் திரும்பிப் பார்த்துக் கொண்டேயிருந்தான் ஒன்றுமே பேசவில்லை
அவனும் நானும் பேசுவதை நிறுத்திக்கொண்டு சில மாதங்களாயிருக்குமென்று நினைக்கின்றேன்.ஒரு அறையில் இருந்து கொண்டு எப்படிப்பேசாதிருக்கிறோமென்று எனக்கு ஆச்சரியமாயிருக்கும்.அப்படித் தோன்றுவது கூட மிகச் சில பொழுதுகளில்தான்.அவன் என்னோடு பேசுவதற்கு எந்த முயற்சியும் எடுத்துக் கொள்வதில்லை.
அது ஒரு பழைய குவாட்டர்ஸ்.தடித்த சுவரும் யன்னலின் ஓராள் ஏறியிருக்கக்கூடியதுமான அகன்ற விளிம்பில் எங்கள் சிறு பொருட்களைப்பரப்பி வைத்திருந்தோம். சீப்பு, மல்லிகை மணக்கும் ஒரு பவுடர் ரின். என்னுடைய சீப்பு ஊதாநிறம்.சீப்பு மாத்திரமல்ல பிரஷும் தான். அவனுடையது நீல நிறம்.
அன்றிரவு மூச்சுத்திணறிய கனவு வந்தபோதும் அவன் அறையில் இருந்தான்.நான் பதகளித்து ஓடி யன்னலில் இருந்து வெளியில் பார்த்துக்கொண்டிருந்த அவனை தள்ளி தலையை வெளியில் நீட்டி மூச்சை உள்ளே இழுத்தேன்.காற்று குளிர் ஏறிப்போயிருந்தது அன்றைக்கு. திறந்த யன்னலூடாக தூரத்து வைத்தியசாலையின் விளக்குகள் தெரிந்தன.இரவு அடர்ந்து வெளியில் கிடந்தது.சில நிமிடங்களுக்குப்பின்னர்தான் என்னுள்ளும் குளிர் பரவி அமைதி உள்ளேயும் சில்லிடத்தொடங்கியது.
என்னுடைய திணறல் பதற்றம் எதையும் அவன் கவனித்ததாக தெரியவில்லை.அவன் எதையுமே பேசாமல் தன் கட்டிலில் போய் உட்கார்ந்து கொண்டிருந்தான்.
காற்று மலைகளுக்கிடையில் கூவும்சத்தமும் தூரத்தே எங்கோ ஜெனெரேட்டர் ஓடும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது அறையில் குளிர் பரவத்தொடங்க யன்னலை இழுத்து மூடினேன்.
அவனுடையதும் என்னுடையதுமான கட்டில் விளக்குகளின் ஒளித்தடுப்பின் நிழல்கள் சந்தித்த இடத்தில் அறை இருளாய்க்கிடந்தது. அவன் கண்களைச்சந்திப்பதை தவிர்ப்பதற்காக சுற்றிக்கொண்டு அந்த இருளினூடாக என் கட்டிலுக்குத்திரும்பினேன்.உட்கார்ந்து பெருமூச்சு விட்டுக்கொண்டு கைக்கடிகாரத்தைப்பார்த்தேன் காலை மூன்று மணியாகிக் கொண்டிருந்தது.
காலை மூன்று மணிக்கு யன்னலில் நின்று என்ன செய்கிறான் என்று யோசனை உடனே தோன்றி மறைந்தது.
எதையும் எனக்கு கேட்கத்தோன்றுவதில்லை.வார்த்தைகள் உள்ளிழுக்கப்படுவிடுவது போல.பேசுவது அந்த இரவின் மௌனத்தை பெரிய கண்ணாடி விழுந்து சிதறுவது போல உடைக்கும் என்று மனதில் தோன்றி உடல் கூசியது.கேட்டாலும் என் குரல் அவன் காதில் விழாதவாறு வார்த்தைகள் பிரிந்து அர்த்தமற்ற ஒலிகளாய் சிதறி அறையெங்கும் பரவும் போலத்தோன்றியது.உச்சரிக்கப்பட்டுக் காற்றில் விடப்படுகிற வார்த்தைகள் பற்றிய பயம் எனக்கு எப்படி வந்ததென்று ஞாபகமில்லை.
வாசு என்னிடமிருந்து வார்த்தைகளை பிடுங்கிக் கொள்வதில்லை. பேசுவதற்கான பிரியமற்றவனாகவே இருந்தான்.அறையின் இரு பக்கத்து சுவர்களைப்போலவே நாங்கள் இருந்தோம்.
கட்டிலில் சரிந்து என் விளக்கை அணைத்தேன்.மீண்டும்போர்வை இழுத்துமூடியபோது கமரா கண்சிமிட்டுவது போல அவனைப்பார்த்து விட்டேன்.
கட்டிலில் கால்களைச்சேர்த்து சுவரோடு சாய்ந்து உட்கார்ந்திருந்தான். படிக்கும் பல்ப்பின் மேல் கவிந்திருந்த விளக்கின் தடுப்பு நிழல் அவன் கண்களை மறைத்திருந்தது.
உதடுகளும் மெல்லிய வரி மீசையும் ஒருபக்கம் ஒளியூட்டப்பட்டிருந்தது.மெல்லிய ஒடுங்கியமுகம் கூர்மையான உடைந்துவிடலாமென்று தோன்றுகிற மூக்கு.பெரிய உதடுகள் நடுங்கிக்கொண்டிருந்தன.ஏதோ சத்தமின்றி உச்சரிப்பது போலவும் தோன்றியது. நடுங்குவதைப்போலவும்தோன்றியது. வெளிச்சத்தில் தெரிந்தகன்னப்பகுதியில் கோடாய் ஈரம் பளபளத்தது விளக்கொளியின் நிழலில் அழுதுகொண்டிருப்பவனின் ஓவியம் போலத்தோன்றினான்.
தலை வரை போர்வையை இழுத்துக் கண்களை மூடிக்கொண்ட பின்பும் அவனுடைய அரையிருளில் மூழ்கிய தோற்றம் மனத்தில் படமாய்த்தோன்றிக்கொண்டிருந்தது.அழுகிறானா என்று உற்றுக்கேட்டேன்.கடிகாரத்தின் முள்ளின் ஒலி மட்டும் காதில் விழுந்து கொண்டிருந்தது.இரவு சலனமின்றித்தொடர்ந்தும் கிடந்தது.வழமைபோலவே சட்டென்று உறங்கிப்போனேன்.
காலையில் வாசுவை நான் காணவில்லை. காலையென்றென்ன மாலையாகி இருண்டும் அவன் வரவில்லை.பேசிக் கொள்வது நின்று விட்டதிலிருந்து அவன் போகுமிடம் ஒன்றும் சொல்லிக்கொள்வதில்லை.
.ஒரு வாரம் ஓடியும் அவன் திரும்பவில்லை.சிலவேளை அவன் இப்படித்தான்.ஒரு வாரம் இரண்டுவாரம் அறைக்கு வராமல் இருந்திருக்கிறான்.
அவனுடைய கட்டில் விரித்தபடியே இருக்கும்.மடிப்புகளில்லாமல் அழுத்திவிட்டதுபோல நீலவிரிப்பில் அவனுடைய சில பொருட்களை வைத்திருப்பான்.கட்டிலுக்கு கிழே அவன் ஒரு பை இருந்தது.காது வளைந்த வெளிறிய பையைக்காணவில்லை.
வாசு மலைத்திருப்பத்திலிருந்த அலுவலகத்தில் தான் வேலை செய்தான்.என்ன வேலை செய்தான் என்று கூட நான் கேட்டதில்லை. கேட்கத்தோன்றவில்லை அவன் என்னைக்கேட்டதாகவும் ஞாபகமில்லை.கூட இருக்கிற ஆறு மாதத்தில் தொடக்கத்தில் பேசிக்கொண்டோம்.அதுவும் சிலவார்த்தைகள்.
கனவில் வந்த இருட்டு மெல்லக்கலைந்து போக அறை பிரகாசமாவது போலிருந்தது.மதியப்பொழுத்து சாய்ந்துவிட்டது.
கதவில் மென்மையாக யாரோ தட்டினார்கள்.
அவனைத்தேடியோ என்னைத்தேடியோ யாரும் வந்ததில்லை. நான் எழுந்து ஓடிச்சென்று கதவைத்திறந்தேன்.
மெலிந்த சிறு உருவமான வயோதிபப்பெண் நின்றிருந்தாள்.காற்று கொண்டு வந்து ஒதுக்கிய சருகு போலிருந்தாள்.கண்கள் உள்ளிறங்கி முகம் ஒடுங்கி கன்ன எலும்புகளின் பின்னால் தெரிந்த கண்கள் இன்னொரு உலகத்தின் வாசல்போலத்தோன்றின.மெல்லிய நீல வெளிறிப்போன சேலையும் மை நீலத்தில் சட்டையும் அணிந்திருந்தாள்
‘’நான் வாசுவின் அம்மா’’
மிக மெல்லிய குரலில் காற்றும் அசையாத வண்ணம் அவள் பேசினாள்.
நான் வழிவிட்டேன். அவள் உள்ளே மெல்ல நடந்து வந்தாள்.
பிரம்புக்கதிரையில் விளிம்பில் உட்கார்ந்து கொண்டபோது அவள் இன்னும் சிறுத்துவிட்டது போல தோன்றியது.
’அவன் உங்களுக்கு ஒண்டும் சொல்லவில்லையே’’
நான் ஒன்றும் பேசவில்லை.
.
அவள் எனக்கு எல்லாந்தெரிந்திருப்பதாக நினத்து பேசத் தொடங்கினாள்.பேசத்தொடங்க அவள் கண்களில் கண்கள் பளபளத்து கண்ணீர் தளும்பியது.
அது கடலைப் போல நீல நிறமாயிருந்தது. இன்னொரு உலகத்திலிருந்து திரண்டு வருமாப்போல இருந்தது.அவள் பேசுகிற வார்த்தைகள் எதுவும் எனக்குப்புரியவில்லை.காது அடைத்துக்கொண்டுவிட்டது.கண்களை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன். வார்த்தைகள் கண்ணீரில் மிதந்தன.பேசப்பேச வார்த்தைகள் சேர்ந்து பெருக்கெடுத்து அவை அலையாக பொங்கின.அவள் குலுங்கியிருக்கவேண்டும்.
கண்ணீர் உடைந்து கன்னத்தில் வழிய அவள் விம்மினாள்.
பேச்சு நின்று புறங்கையால் கண்களைத்துடைத்தபடி.
‘தம்பியின்ரை பொருட்களைத்தாறீங்களா’’
அவள் அழுத்திக்கேட்கத்தான் என் மனம் அவள் கண்களிலிருந்து அறுத்துக்கொண்டது. நான் விருட்டென்று எழுந்தேன்.
வாசுவின் பொருட்கள் அதிகமில்லை
வெளிறிப்போன பையைத்தூக்கிக்கொண்டு அவள் ஒடுங்கிய பலகைப்படிக்கட்டில் மெல்ல மெல்ல இறங்கினாள்.நான் கதவில் சாய்ந்து நின்று அவள் இறங்குவதைப்பார்த்துக்கொண்டிருந்தேன்.
இறங்கி நின்று திரும்பி நிமிர்ந்து என்னை ஒருமுறை பார்த்தாள்.மாலைச்சூரியனின் வெளிச்சம் கதவின் வழியாக அவள் முகத்தில் விழுந்து ,நிழல் முகத்திலிருந்து இறங்கி கீழ்தளம் முழுவதும் நீண்டிருந்தது. .
அவள் நடந்து பார்வையிலிருந்து மறைந்த பின் அறைக்குத்திரும்பினேன்.
அறையெங்கும் மெல்லிய நீலம் பரவியிருந்தது போல தோன்றியது.கண்ணீரிலிருந்து சிதறிய வார்த்தைகள் அருவமாகி அறையெங்கும் மிதந்துகொண்டிருப்பதுபோல அதை நான் மூச்சோடு உள்ளே இழுத்துக்கொண்டிருப்பதான உணர்வு எழுந்தது.
எனக்கு மூச்சுத்திணறத்தொடங்கியது கனவில் வருவதுபோலவே.அந்தரித்து ஓடி யன்னலை அடித்துத்திறந்தேன்.
காற்று குளிர்க்கையால் கன்னங்களை வருடியது.வானம் வெளித்து நீலம் எங்கும் பரவிக்கிடந்தது.
8 comments:
அற்புதமான கதை. வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை!
மிக்க நன்றி.
உங்களது எழுத்து நடை சிறப்பாக இருக்கிறது...
@நட்பாஸ்
குறை சொல்லுங்க சார்.
@philosophy prabhaharan
நன்றி
வேணா ஒரு குறை சொல்லலாம்.
கதையை இவ்வளவு நல்லா எழுதிட்டு ஏன் சரியா பத்தி பிரிச்சு படிக்க அழகா இருக்கற மாதிரி போட மாட்டேங்கறீங்க என்று தெரியவில்லை.
பள்ளி ஆசிரியர் பாடமெடுக்கும்போது கரும்பலகையில் எழுதிய குறிப்புகள் மாதிரி ஒவ்வொரு பத்தியும் ஒவ்வொரு இடத்திலிருந்துத் துவங்குகின்றன!
சொல்லி சொல்லி அலுத்துப் போய் விட்டது. இப்போது படித்துப் படித்து இந்த வடிவம் பழகியும் போய் விட்டது. குறையாகவே தெரியவில்லை.
கதை கவிதை மாதிரி இது ஒரு புது வடிவம் போலிருக்கிறது! :)
@நட்பாஸ்
நன்றி சார்.
கையெழுத்து குப்பையாயிருக்கிறதே என்று த்ட்டெழுத்து வர சந்தோசப்பட்டேன்.திருத்த முடியாதோ.
நிறுத்தக்குறிகள் பந்தி இவற்றில் நான் கவனம் செலுத்துவதில்லை
மன்னிக்கவும்.திருத்திவிடுகிறேன்.
சே சே! முதலில் ஒரு மாதிரியாக இருந்தது. இப்போது இதுவும் ஒரு தனித்தன்மையுடன் வித்தியாசமான வடிவில் அழகாகத்தான் இருக்கிறது. இதையே தொடரலாமே?
வேறு யாராவது எதுவாவது சொல்கிறார்களா பார்ப்போம்....
@நட்பாஸ்
மற்றவர்கள் சொல்வது அல்ல.தவறு என்பதுதெரிகிறது.திருத்திக்கொள்ளவேண்டும்.
தவறுகள் முதலில் தனித்தன்மையுடன் இருக்கும்.அடிக்கடி நிகழ்ந்தால் பழகிவிடும்.:)
:)
நான் அந்த பொருளில் சொல்லவில்லை மேலை நாட்டு இலக்கியவாதிகள் சில பேர் காற்புள்ளி முற்றுப்புள்ளி எதையுமே கையாளாமல் மூச்சைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுகிற மாதிரி ஒரே மூச்சாய் ஒற்றை வரி கொண்ட ஒரே பத்தியில் பெரிய பெரிய கதைகள் நாவல்களை எழுதி முடித்து விடுகிறார்கள் அவை தரமானப் படைப்புகள் என்று புகழப்படவும் செய்கின்றன என்றிருக்கையில் உங்களை மட்டும் பத்தி பிரித்து அழகாக பதிவு போடுங்கள் என்று சொல்வது ஒரு இலக்கியவாதிக்கு எவ்வளவு பெரிய அவமானம் என்பது எனக்கு மிகத் தாமதமாகத்தான் தோன்றியது நான் இடக்கை பழக்கம் உள்ளவன் அப்படியானால் நான் எழுதுவது எல்லாமே தப்பு தப்பாய் எழுதப்படுவதுதானே ஆனால் அதை அப்படி சொல்லி விட முடியுமா நீங்கள் இப்படியே தொடருங்கள் இதில் சரி தவறு என்ற பேச்சே இல்லை பழகிவிட்டால் இந்த மாதிரி இருப்பதும் படிப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது சாதாரண கதையிலிருந்து வடிவத்திலேயே வேறுபட்டு நிற்கிறது
Post a Comment