Wednesday, November 24, 2010

முற்றுகை!

வெளிச்சம் கசியும்
லாந்தர் விளக்கு
இருளில் திணறிக்கொண்டே
இருக்கும்


முன்னே
பாட்டி
நீட்டி அமரும்
காலின் நிழல் நீண்டு,
வீடு முழுதுமாய்
விழுங்கி
வெளியிருட்டோடு கலந்திருக்கும்.

காலின் நிழலைப்பற்றி
பேய்கள் உள்ளே
நுழைந்து விடும்
என்ற பயத்தோடு
தொடங்கும்
என் இரவுப்பொழுதுகள்

பாட்டி சொல்லும் கதைகளில்,

பனைகளை விட
உயர்ந்த மலைகள்!

வாய்க்கால்களை விட
அகலமான
ஆறுகள்!

ஊரைவிடப்பரந்த
மலைக்கோட்டை
சூழ அகழியும்
முதலைகளும்!

வாள்களைச்சுழற்றியபடியே
வரும்
கருப்புக்குதிரை வீரர்கள்..

வெண்பட்டு
சரசரக்க
மயில் தோகை
கூந்தல் காற்றிலாட
மெல்ல நடக்கும்
இளவரசி..

அரும்புமீசை
சாகச இளவரசன்
உருவும்
வாள்
சுழன்று எழும்
மின்னல்..

அவன்
வெண்புரவியின்
குளம்பொலிகள்..

எல்லாம்
எழுந்து ஆடி ஒடுங்க
இருளற்றுப்போய்
விடியும், 

பாட்டியுடனான இரவுகளில்
என் வீர
சாம்ராஜ்யம்
விரிந்துகொண்டே வந்தது


இன்றிரவு


இடையறாது
துடித்துக்கொண்டேயிருக்கிறது
தலைமாட்டு விளக்கின்
சுடர்
அசைவற்றுக்கிடக்கிறாள்
பாட்டி

நிழல் ஓடி முற்றத்தில்
விழுகிறது


விட்டுச்சென்ற
வெளி எங்கும்
திரண்டுகொண்டிருக்கின்றன
கருப்பு நிறக்குதிரைகள்.


**************************************** 

6 comments:

natbas said...

அற்புதமாக இருக்கிறது. சொற்கள் காட்சியைக் கண் முன் கொண்டு வருகின்றன.

பகிர்வுக்கு நன்றி டாக்டர்.

வரசித்தன் said...

@நட்பாஸ்

நன்றி.
சின்னத்திருத்தம் செய்தேன் கவனித்தீர்களா.

natbas said...

@வரசித்தன்

//நிழல் ஓடி முற்றத்தில்
விழுகிறது//?

இதுவும் இளவரசியும்தான் புதுசு போலத் தெரிகிறது...

நீங்களே சொல்லுங்கள், கவிதை எழுதுவது எப்படி என்று நானும் கொஞ்சம் உங்கள் மன ஓட்டத்தை பாலோ பண்ணித் தெரிந்து கொள்கிறேன்!

வரசித்தன் said...

@நட்பாஸ்

விட்டுச்சென்ற வெளியெங்கும் ‘ என்பது புதுசு.

சார் இதைக் கவிதை என்று போட்டிருக்கிறேன்.ஆனால்..

இது ஒரு கவிதையா? என்று யாராவது சொன்னால் இது கவிதையில்லை.
அட கவிதை என்று சொன்னால் கவிதை.
இப்படியிருக்கும்போது எழுதுவதைப் பற்றி எப்படிச் சொல்லுவது?

natbas said...

@வரசித்தன்

:( என் நினைவுத் திறன் அவ்வளவுதான். தப்பாக நினைத்துக் கொல்லாதீர்கள்.

இப்படி எல்லாவற்றையும் உன் நினைப்பு போல் என்று விட்டு விட முடியுமா?

என்னைப் பொருத்தவரை கவிதைக்கு என்று சில இயல்புகள் இருக்கின்றன. அவை சொல்லக் கூடியனவாக இல்லாதிருக்கலாம். அதனால் எல்லாமே வாசகன் கையில் என்று சொல்லி விட முடியாது.

நீங்கள் இங்கு எழுதி இருப்பதை எவனாவது கவிதை இல்லை என்று சொன்னால் நான் அவனை எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியாத முட்டாள் என்றுதான் சொல்வேன்.

VELU.G said...

ரொம்ப அருமையாக விவரித்துள்ளீர்கள்