’’நான் ஒன்று கேக்கட்டா டொக்டர். “
’’தாராளமாய்க்கேளுங்கோ”
’’நீங்கள் டொக்டரில்லைத்தானே .அட்டெண்டனோ அல்லது பைத்திய ஆஸ்பத்திரியிலை இருந்து ஓடி வந்து டொக்டர் மாதிரி நடிக்கிற ஆள்தானோ என்னவோ …….டவுட்டாயிருக்குது .…… எத்தனை தமிழ்ப்படம் பாத்திருக்கிறன். இப்பிடித்தான் இந்தமாதிரிக்கதைகள் முடியும் சொல்லுங்க நீங்கள் உண்மையில் யார்?’
’’ஏன் அப்படிச்சொல்லிறியள்”
ஏன் அப்படி அந்த நாயிடம் கடிபட்டவர் உணர்கிறார் என்பதை சொல்லி விளக்கத்தேவையில்லை.
மருத்துவர்கள் நோயாளர்களுடன் உரையாடுவது சிகிச்சையில் மிகமுக்கியமான பாகம்.
மருத்துவக்கல்விக்காலம் முழுவதும் நோயாளியுடன் உரையாடுவதற்கான திறமையை மருத்துவ மாணவன் கட்டியெழுப்பவேண்டியது கட்டாயமானதாக இருக்கிறது.
மீண்டும் மீண்டும் பயற்சி செய்யப்பட்ட ஒரு பேச்சு முறை காலப்போக்கில் இயல்பாக மாறிவிடுகிறது.
நல்லுறவைக்கட்டியெழுப்புதல்,நம்பிக்கை உருவாக்குதல், ஒத்துணர்வுடன் பரிவோடு பேசுதல், மதிப்போடு,நோயாளியின் உரிமையை, அவருடைய கலாச்சாரத்தை புரிந்து கொண்டு பேசுதல் ,மதிப்பீடற்ற வெளிப்பாடு(rapport, empathy,respect, non judgmental).
”புகைத்தல்,குடி இப்படி கெட்ட பழக்கம் ஏதாவது இருக்கிறதா”? என்று கேட்பது மதிப்பீட்டுக்குள் வருகிறது. புகைப்பவர்கள் கெட்டவர்கள் என்கிற டொக்டரின் தனிப்பட்ட அபிப்பிராயத்தின் தீர்ப்பு அடங்குவது நோயாளியின் நுண்ணுணர்வை,தன் மதிப்பை பாதிக்கும். டொக்டர் என்னை கெட்டவனாக நினைத்துவிடுவார் என்று தவறான தகவல்களைக்கூட தரக்கூடும்.
“ சிச்சீ நான் குடிக்கிறதில்லை”
“புகைப்பவரா? எத்தனை சிகரட்?/ மது அருந்துபவரா?” இவை மதிப்பீடற்ற வினாக்கள். கலாச்சாரம் பற்றிய பின்னணி அறிவு மருத்துவருக்கு அவசியமாகிறது. தர்மசங்கடங்களைத்தவிர்க்கும்
இப்படி பல நுண்ணிய அம்சங்களைக்கொண்டிருக்கிறது மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்குமான உரையாடல்.
தவிர நோயின் தன்மையை நோயாளிக்கு விளங்கக்கூடிய மொழியில் புரியவைக்கவேண்டியது ஒரு மருத்துவரின்கடமை. சந்தேகங்களுக்கெல்லாம் பதிலளித்து தெளியவைக்கவேண்டியது சிகிச்சையின் ஒரு பகுதி.
மருத்துவர் நல்ல ஒரு உரையாடலை நிகழ்த்தி நோய்பற்றிய பரிபூரணமான பின்னணித்தகவல்களையும் சிகிச்சையைத்தீர்மானிப்பதற்கான தகவல்களையும் ஒரு சேரபெற்றுக்கொள்கிறார்.
உதாரணமாக நெஞ்சு வலி என்று சொல்லிவருபவரிடம் நெஞ்சுவலி பற்றிய விவரணத்தோடு ,புகைத்தல் குடிப்பழக்கம் உணவுப்பழக்கம் வாழ்க்கைச்சிக்கல் என பல்வேறு விஷயங்களை கேட்டறிவார்.அத்தோடு மருந்துகளுக்கான அலர்ஜி பற்றியும் கேட்டறிவார்கள்.இவை பின்னர் சிகிச்சைமுறைகளைத்தீர்மானிப்பதில் உதவுகின்றன.
நல்ல உரையாடலைத்தொடங்குவதற்கு பொதுவாக இரண்டுவிதமான கேள்வி முறைகளை உபயோகிக்கிறார்கள்.
திறந்த கேள்வி;Open questions
‘’ நெஞ்சு வலியா? விளக்கமாக முதல்லை இருந்து சொல்லுங்கோ ‘’ என்று கேட்டால் போதுமானது.
சிலர் கொட்டித்தீர்த்துவிடுவார்கள்.சிலர் ஓரிரு வார்த்தைகளோடு நிறுத்தவும் செய்வார்கள்.
இது நோயாளியின் இயல்பை ,அடிப்படை அறிவைப்ப்பொறுத்தது.
சிலர் மிக விஸ்தாரமாக தொடங்குவார்கள்
‘’ எனக்கு இரண்டு வயசாக இருக்கும் போது ஒரு முறை விழுந்து நெஞ்சில் அடிபட்டது. ஒரு நாள் முழுவதும் அழுதுகொண்டேயிருந்தனாம்.”
இப்படி 50 வயது மனிதர் தொடங்குவார்.நீண்ட கதைக்க்கு தயர்ப்படுத்தவேண்டியதுதான்.
ஆனால் சன அடர்த்திமிக்க ஒரு கிளினிக்கில் இது நிகழ வாய்ப்பேயில்லை.
மருத்துவர் ஊடறுத்து பொருத்தமான கேள்விகளைக்கேட்கத்தொடங்கிவிடுவார்.
ஆனால் சொல்லிமுடிக்காத அந்தக்கதையிலுள்ள பலசந்தேகங்கள் பற்றிய பயம் அந்த நோயாளியிடம் சிகிச்சை முடிந்தாலும் மீதமிருக்கும்.
நெருக்கடி நிறைந்த எமது சிகிச்சை அறைகளில் இந்த திறந்த வினாக்களுக்கான நேரம் கிடைப்பதில்லை.
அனேகமாக விடை நோக்கிய வினாக்களை- directed questions தொடுத்து முடிவெடுக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுவிடுவார்கள்.
’’நெஞ்சுவலி’’
’’எங்கே வலிக்கிறது’’
’’நெஞ்சின் நடுப்பகுதியில்’’
’’வலி எப்படியானதன்மை? பாரமாயிருக்கிறதா? எரிக்கிறதா? சுள் சுள் என்று குத்தி வலிக்கிறதா? இழுத்து இழுத்துக்குத்துகிறதா?’’
இப்படி கேள்விகளை அடுக்கி நோய்பற்றிய தகவல்களை அவசரமாக மருத்துவர் உருவியெடுத்துவிடுவார் .
திறந்த வினாக்கள் சிறந்தவை. நோயாளி பற்றிய பல தகவல்களை அவர்களின் பேச்சில் இருந்து கவனித்துக்கொள்ளலாம். அவர்களுடைய நம்பிக்கைகள், பயங்கள், சிக்கல்கள் இயல்பாக வெளிப்படும்.
’’ மூண்டு நாளைக்கு முந்தி ஒரு செத்தவீட்டுக்குப்போனனான் டொக்டர். இரவு வந்து தோஞ்சதாக்கும் அடுத்த நாள் ஒரு மாதிரி இருந்துது.இண்டையிலிருந்து சரியான காய்ச்சல். கொத்தமல்லித்தண்ணி அவிச்சும்குடிச்சன் சரிவரேல்லை”
இப்படித்தொடங்கும்போது அவர்கள் தங்கள் நோயையும் தாங்கள் நம்பும் நோய்க்கான காரணத்தையும் சேர்த்து சமூக ப்பொருளாதாரபினணியோடு பிசைந்து சொல்லத்தொடங்குவார்கள்.
தங்கள் பயங்களை அவிழ்த்து அதற்கான விளக்கங்களை அறிந்து கொள்ளும்போது பாதி நோய் தீர்ந்து விடுகிறது.
ஒரு திறந்த வினாவைத்தொடர்ந்து விடுபட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப மருத்துவர் மேலும் பல விடயங்களை நேரடிக்கேள்விகளாகக்கேட்டறிவார்.
ஒரு நாளைக்கு 400 நோயாளிகள் வந்துகாத்திருக்கிற இடத்தில் நேரம் பங்கிடப்படுகிறது. வைத்தியர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கை, கதைக்கும் நேரம் தேனீர் இடைவேளை இப்படி நேரம் நிறுவனத்தாலும் மருத்துவர்களாலும் பணியாளர்களாலும் பிரக்ஞை இன்றி பங்கிடப்படும்போது ஒரு நோயாளிக்கு 3-5 நிமிடங்களே மிஞ்சும்.
காத்திருக்கும் நோயாளிகள் நேரம் பற்றிய முழுப்பிரக்ஞையோடு காத்திருப்புக்கும் சந்திப்புக்குமான நேர இடைவெளிகளில் விரக்தியை நிரப்பிக்கொண்டிருப்பார்கள்
3-5 நிமிடங்களில் சொல்லப்படமுடியாதவைகள் நோயின் மீதிகளாய்ப் பின் தொடரும்.
‘’குளிக்க வாக்கலாமோ? எண்ணெய்ச்சாப்பாடு குடுக்கலாமோ. எல்லாம் கேட்டுவந்தனிங்களே” அம்மா கேட்பாள்
“ கேக்கேல்லை” அப்பா சுரத்தில்லாமல் சொல்வார்.
‘’சரியான சனம்’’ பதில் முனகலாக தொடரும்.
விளைவு, மருந்துமுடியும் வரை பையன் குளிக்கமாட்டான். எல்லாரும் வடை சாப்பிட்டால் மருந்து முடியட்டும் காத்திருக்கவேண்டி வரும்.
மருந்து முடிய வடை மீது ஒரு வெறியே வந்துவிட்டிருக்கும்
சங்கடந்தான்..
.
6 comments:
மருத்துவர்களைப் புரிந்து கொள்ள உதவும் பதிவு. நன்றி டோக்டோர்!
நோயளர்களை நாம் புரிந்து கொள்ள முயல்வது போல உங்கள் கட்டுரை அவர்களுக்கு எங்கள் நிலையை விளக்கும் கட்டுரை. பகிர்ந்துகொள்கிறேன். எனது Facebook ல்
@நட்பாஸ்
நன்றீ டாக்டரை புரிந்து கொண்டால் ...அப்புறம்... :)
@Dr.எம்.கே.முருகானந்தன்
உங்கள் பகிர்வுக்கும் கருத்துக்கும் நன்றி.ஊட்டந்தருகிறது
மிக்க நல்ல கருத்து
மிக்க பயனுள்ளது
மிக்க நல்ல கருத்து
Post a Comment