நெற்றியில் விழுந்தமுடியை ,ஊறிய வியர்வையை புறங்கையால் துடைத்தபடி ’’சூ..’’ என்று காகங்களை கை வீசித் துரத்தியபடி பச்சை நிறமாயிருந்த குளத்து மீனின் செதில்கள் சுரண்டி கால் பெருவிரலுக்குள் மல்லாக்கப்படுதிருந்த பாளைக்கத்தியில் தேய்த்து செதில்களை உதிர்த்து மீனை நாலுகூறுகளாய் அரிந்தாள் அன்னராணி.
மண்சட்டியில் துண்டுகளைப்போட்டு பிளாஸ்ரிக் வாளியின் விளிம்பைப்பற்றியபடி மறுகையால் தன் நொய்ந்தஅழுக்குக்கரடிபொம்மையை தண்ணீரில் தோய்த்துக்கொண்டிருந்த குழந்தையினுடைய கைகளை விலக்கி வாளியை இழுத்து சரித்து சட்டியில் நீரை விட்டு விளாவினாள்.
கழுவிய தண்ணீரை சோகைபிடித்துபோயிருந்த வாழைக்குட்டிகளின் பக்கமாக எற்றியெறிந்தாள்.காகங்கள் எழுந்து சிதறிப்பறந்து வாழையடியில் மினுங்கிய செதில்களை கொத்தத்தொடங்கின.
குழந்தை மண்ணில் தொப்பென்று இருந்து அழுதபடி கையிலிருந்த ஈரம் ஊறிஒட்டிப்போயிருந்த கரடிபொம்மையை வீசியெறிந்தது.
கழுவி முடித்த சட்டி மீனை தூக்கி எட்டிக்குழந்தையை மறுகையால் அள்ளி இடுப்பில் இருத்திக்கொண்டு குடிசையின் தடுக்கை காலால் தள்ளி உள்ளே நுழைந்தாள்.
சோமன் ஓலைப்பாயில் குப்புறப்படுத்திருந்தான்.குடிசை முழுவதும் சாராய நெடி அடர்ந்திருந்தது.
குழந்தையை அவனருகில் இறக்கியிருத்தி குடிசையின் நீட்டமாய் பின்புறமாய் இருந்த மட்டைவரிந்த சின்ன அடுக்களைக்கூட்டுக்குள்
குனிந்து புகுந்தாள்.
குழந்தை உட்காரவில்லை துடித்தால்போல உதறியபடி எழுந்து தத்தி நடந்து வாசல் தடுக்கைக்கடந்து வெளியே வந்தது.
எறிந்துவிட்டு வந்த கரடிப்பொம்மையை நோக்கித்தொடர்ந்தும் விசைப்பொம்மையாக ஆடி நடக்கத்தொடங்கியது.
இன்னும் சில காகங்கள் வாழையடியில் உட்கார்ந்திருந்தன.
விழுந்த இடத்திலேயே குளிப்பு முடிக்கக்காத்துக்கொண்டிருந்தது கரடிப்பொம்மை.
வெயில் நிழலற்ற இடமெங்கும் படர்ந்தபடி ஊர்ந்து கொண்டேயிருந்தது.
2 comments:
அவ்வளவுதானா?
அப்புறம் என்ன ஆச்சு?
அப்புறம்...
ஒரு வரியோடு கதை முடிகிறது.
Post a Comment