Tuesday, April 26, 2011

ஆஸ்திரேலியா மூலக்குடிகள் -காலம் கற்றுத்தந்த பாடம்!


மருத்துவமனையின் அறையில் அருகிலிருந்த பாகிஸ்தானிய டொக்டரோடு பேசிக்கொண்டிருந்தபோது ஓய்வுக்குப்போயிருந்த கணினி சிலிர்த்துக்கொண்டது

ஆஸ்திரேலியாவின் மூலக்குடிகளுக்கும்-(அபொரிஜனிஸ்-Aborigines) மற்றையவர்களுக்குமான இடைவெளியை நிரப்புதல் என்ற இலட்சியம் சித்திரிக்கப்படுகிற ஸ்கிரீன் சேர்வர் திரையில் தோன்றி அசையத்தொடங்கியது

மூலக்குடி ஆஸ்திரேலியர்கள், உடல்நலத்தில் மற்றையவர்களை விட பத்து ஆண்டுகள் மேலாக பின்தங்கியிருக்கிறார்கள்(உடல்நலத்தில் மாத்திரமல்ல).அதை இட்டு நிரவுவதற்காக அரசு முயன்று வருகிறது.

மூலக்குடி ஆஸ்திரேலியர்களுக்கான சுகநலத்திட்டங்களில் முக்கியமான அங்கமாக சுகாதாரப்பணியாளர்களுக்கு மூலக்குடிகளின்  பாரம்பரியம், பண்பாடு, ,அவர்கள் கடந்து வந்த கொடூரமான வரலாறு உள்ளடங்கிய ஒரு பயிற்சி நெறி வகுக்கப்பட்டிருக்கிறது.

1770 களில் இருந்து வெள்ளையினத்தவர் குடியேறிய நாள்களில் இருந்து மூலக்குடிகள் தொடர்பாக வேறுபட்ட அணுகுமுறைகளை கையாண்டு வந்திருக்கிறார்கள்.
300000 முதல் மில்லியன் எண்ணிக்கையாக இருந்த மூலக்குடிமக்களின் எண்ணிக்கை 1920 களில் 60000 ஆக குறைந்து விட்டிருந்தது.
நிலத்துக்கான போராட்டத்தில் துப்பாக்கிகளுக்கெதிராக ஈட்டிகளால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை.படுகொலைகளைத்தவிர குடியேற்றக்காரர்கள் கொண்டுவந்த நோய்களும் திணிக்கப்பட்ட வாழ்க்கைமுறைகளும் உயிரிழப்புகளுக்கு பங்களித்தன.
இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த ,மண்ணை தம்மில் ஒரு பகுதியாக கருதிய அவர்களின் இன்றைய பிரச்சினைகளுக்கு காரணமாக கூறப்படுவது Dispossession பறிகொடுத்தமை என்கிறார்கள்.

ஆஸ்திரேலியர்கள் தேசத்தினை முழுமையாக்குவதற்கு இவர்களின் துயரத்தை நூற்றாண்டுக்காலமாய் தொடர்ந்து வருகிற இடைவெளியை எவ்வாறு நிரப்புவதென்று சிந்தித்திருக்கிறார்கள்.பல நூல்கள் உண்மைகளை நேர்மையாக வெளிப்படுத்தி வெளிவந்திருக்கின்றன. ஆய்வுகளும் அப்படியே.
.
அதன் விளைவாக நடந்த கொள்கை மாற்றங்களால் உருவான இந்த மூலக்குடிகளுக்கான வைத்தியசேவைக்கான பயிற்சித்திட்டத்தில் வரலாற்றுப்பாடம் இப்படித்தொடங்குகிறது

‘’ஆஸ்திரேலியாவுக்கு மூலக்குடி மக்கள் குடியேறிவாழத்தொடங்கிய காலம் ஒரு மணித்தியாலமாக( நாற்பதாயிரம் வருடங்களாகிறது)  இருந்தால் , பகிர்ந்து கொள்கிற குடியேற்ற(ஆங்கிலேயர்)காலம்  19 செக்கன்கள் தான்.”


மூலக்குடிகள் நாற்பதாயிரம் வருடங்களாக வாழ்கிறார்கள்.ஆங்கிலேயர் குடியேறி 209 வருடங்களாகிறது.

750 விதமான குழுக்கள்,250 மொழிகள், 40000 வருடங்கள்

கற்பிக்கப்படும் இந்த வரலாறு மூலக்குடிகளின் இழப்பின் பிரமாண்டம் பற்றி மீண்டும் மீண்டும் வலியுறுத்திச்சொல்வதுடன்
காலப்போக்கில் ஆஸ்திரேலிய அரசு கடைப்பிடித்து வந்த கொள்கைகளையும் அதன் விளைவுகளையும் விளக்கிச்செல்கிறது.

ஆரம்பத்தில் அபொரிஜன்களை விரட்டி ஒதுக்கிவைத்தார்கள்.காலப்போக்கில் உள்வாங்கிக்கொள்ளும் சேர்த்துக்கொள்ளும் முயற்சிகளை(Assimilation) கலாச்சார மாற்ற முயற்சிகளை செய்தார்கள்.விளைவுகள் எதிர்மறையாகவே இருந்தன. திருடப்பட்ட தலைமுறை(stolen generations) ஒன்று உருவாகியது

உலக சுகாதார தாபனத்தின்(WHO) ஆரோக்கியம் என்பதன் வரைவிலக்கணம் ஒருவரின் உடல், உள ஆரோக்கியத்தோடு ,சமூகத்தில் அவருடைய ஆரோக்கியமான நிலை என்பதாகும்.
இது ஒரு தனியொருவரின் நலம் பற்றிய கருதுகோள்  தனிநபர் அலகாகாக அணுகுவதிலிருந்து பிறந்தது(individualism)

மூலக்குடிமக்களுக்கான ஆரோக்கியமென்பது உடல் உள சமுக ஆரோக்கியத்தோடு உணர்வு, ஆன்மீக ,கலாச்சார பண்பாடு என்பவற்றை உள்ளடக்கி முழுச்சமுகத்தின் ஆரோக்கியம் என்று விரிவான கருதுகோளாக்கப்பட்டிருக்கிறது.
காரணம் மேலைத்தேயச்சிந்தனைகளின் அடிப்படையிலான தனிநபர் அணுகுமுறைகள் மூலக்குடிகளுக்கு பொருத்தமானதாக இல்லை என்பதாகும்.
அவர்கள் ஒரு சமூகக்குழுவாக இயற்கையோடு ஒன்றி வாழ்ந்துவந்தவர்கள்.நிலத்தோடும் பாரம்பரியத்தோடும் சகமனிதர்களோடுமான அவர்கள் பிணைப்பு தனித்துவமானது.
அவர்களுடைய கலாச்சாரத்தின் வழி ஒருவர் நோய்வாய்ப்படும்போது ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தவேண்டுமென்றால் அவரை மாத்திரம் அணுகினால் போதுமானதல்ல.அது எந்த மாற்றத்தினையும் ஏற்படுத்தாதென்பதாகும்
குடும்பத்தலைவர், சமுகத்தலைவர் பெரியவர்கள் என்ற ஒரு வட்டத்தினூடாக அணுகவேண்டும்.
அவர்களுடைய அடையாளம் கலாச்சார நம்பிக்கைகளினூடாக அணுகவேண்டும் என்பதாகும்.
உள்வாங்குதல் –assimilation என உருவாக்கப்பட்ட கொள்கைகளால் மூலக்குடிச்சிறுவர்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ‘’நாகரிகம்’’ கற்பிக்கப்பட்டது.
அதன் விளைவுகளை, தன் இயல்பான கலாச்சாரத்திலிருந்து பிரிக்கப்பட்டு சுய அடையாளத்தை இழத்தலின் விளைவுகளை திருடப்பட்ட தலைமுறைகளின் வழியாக ஆஸ்திரேலிய புரிந்துகொண்டிருக்கிறது.
மண்ணுக்கும் அவர்களுக்குமான உறவின் ஆழமும் அது பறிக்கப்பட்டதன் தாக்கமும் உணரப்படுகிறது

அதுமாத்திரமல்ல தமது சொந்தக்காலில் தம்மைப்பற்றிய திட்டங்களை தீர்மானிக்கவும் செயற்படுத்தவுமான ஆற்றலை தகர்த்தழித்ததன் மூலம் அபொரிஜன்களை பாலண்டா(Balanda) என அவர்களால் அழைக்கப்படும் வெள்ளையின ஆட்சியின் நுகர்வோர்களாக அல்லது உதவித்தொகைகளில் வாழ்பவராக காலப்போக்கில் உருவாக்கிவிட்ட ஆஸ்திரேலிய அரசு கொள்கையளவில் அவர்களை மீண்டும் சுதந்திர உணர்வுடையவராக மாற்ற முனைகிறது.ஒத்து வாழ்தலின் புதிய கண்ணோட்டம் -(Reconciliation)உருவாகியிருக்கிறது.அந்தச்சமூகத்தின் ஆரோக்கியம் அதன் வெளிப்பாடு 

ஆரோக்கியம் என்பது முதலில் தம்மை ஏற்றுக்கொள்வதிலிருந்து தொடங்குகிறது. மூலக்குடி என்கிற அடையாளம் தனித்துவமானது பெருமைமிக்கது.அவர்களுடைய கலைகள் சிந்தனை முறைகள் மதிக்கப்படுவன என்ற உணர்வை அவர்களில் உருவாக்க வேண்டும் அல்லது வழங்கப்படுகிற சேவைகள் அவர்களை அப்படி உணரவைக்க வேண்டும் என்று பயிற்சி நெறி சொல்கிறது
அவர்களுடைய ஆரோக்கியம் அவர்களுடைய சிந்தனை வழிக்கூடாகவே நிகழ்த்தப்படமுடியும். மேலைத்தேயச்சிந்தனை தாம் சரியென்று கருத்துவதை திணிப்பதன் மூலம் அல்ல என்பதை ஆஸ்திரேலியாவின் சுகாதாரக்கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து செயற்பட முனைகிறார்கள். அது முழுச்சமூகத்தையும் ஆரோக்கியமாக மாற்றுகிற செயற்த்திட்டமாக இருக்கிறது.முழுமையான அணுகுமுறை( wholistic) கொண்டதாக இருக்கிறது

பயிற்சி நெறி மேலும் எப்படி மூலக்குடிமக்களுடன் எப்படி புண்படுத்தாத முறையில் ,நல்ல முறையில் உரையாடுவது என்பதையும் கலாச்சார அதிர்ச்சியை (culture shock)விளங்கிக்கொண்டு அணுகுவதையும் சொல்லித்தருகிறது.
‘’அவர்கள் கண்களைப்பார்த்துப்பேசுவதில்லை.
நேரடிக்கேள்விகளை மரியாதைக்குறைவாக கருதுவார்கள்’
நேரம் என்பது பற்றிய அவர்களது பார்வைக்கும் மற்றைய ஆஸ்திரேலியரின் பார்வைக்கும் வேறுபாடு இருக்கிறது.வாழ்வின் செயல்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள் கால அட்டவனைக்கு அல்ல’
இப்படி அவர்களுடைய பண்பாட்டுக்கூறுகளை புரியவைக்கிறது


அதுமாத்திரமல்ல ’அவர்கள் அப்படித்தான் திருத்தமுடியாது’ என்கிற சாக்குப்போக்குகளை நிராகரிக்கிறது

அவர்களுடைய நிலைக்கு அவர்கள் காரணமல்ல என்பதையும் வெள்ளையினத்தவர் வருவதற்குமுன்னர் அவர்கள் தம்மை நிர்ணயித்துக்கொள்கிறவர்களாகத்தான் இருந்தார்கள். பறிகொடுத்தலின் விளைவே இது என்பதை வலியுறுத்துகிறது.
இதனூடாக அவர்களை பழைய நிலைக்குகொண்டு வருவதற்கான பொறுப்புணர்வை மீண்டும் வலியுறுத்துகிறது

இப்படி அந்தப்பயிற்சி நெறி பலவற்றை விபரித்துச்செல்லுகிறது.

அவர்களோடு உரையாடும்போது அவர்களுடைய பண்பாடு கலாச்சாரத்தைப்புரிந்து வைத்திருங்கள். அவர்களுக்குப்பின்னால் ஒரு நீண்ட காயம் பட்ட வரலாறும் அதன் மனத்தாக்கங்களும் இருக்கிறதென்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.அப்போதுதான் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் வெறும் மருந்துகளும் அட்டவணைப்படுத்தப்பட்ட சேவைகளுமல்ல’’-  இப்படி அந்த கல்வி நெறி சொல்வதை சுருக்கமாக சொல்லலாம்..
இலக்குகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அறிவும் தெளிவும் ஊட்டப்படுகிறது. நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தாலும் சட்டங்களும் திட்டங்களும் இதை நோக்கி ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
விளைவைக் காலம் சொல்லும் 
 இரவு, ஆஸ்திரேலிய வரலாற்றுப்புத்தகப்பக்கங்களை புரட்டிக்கொண்டிருந்தேன்.தொலைக்காட்சியில் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது
 தன் நிலமொன்றிலிருந்து அபொரிஜனை வெளியேறச்சொல்லிவிட்டு  நடந்தபடி போலண்டா(வெ.ஆஸ்திரேலியன்) பாடிக்கொண்டிருந்தான்
‘’இந்த நிலம் என்னுடையது ''This Land is mine..............''
எதிர்ப்பக்கமாக பரந்த நிலத்தின் புதர்களுக்கிடையே நடந்தபடி மூலக்குடி ஆஸ்திரேலியன் பாடிக்கொண்டிருந்தான்
’’இந்த நிலம் நான்.  ''This Land is me........''
{பாடல்: '' This land is mine''       One night the moon என்ற ஆஸ்திரேலியத்திரைப்படத்திலிருந்து)}


வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றது.

4 comments:

sury said...

ஆஸ்திரிலேய கிரிக்கெட் வீரர் ஸைமான்ட்ஸ் இந்த மூலக்குடியேறிய வாசிகளில் ஒருவர் எனக்கருதுகிறேன்.
அவர்கள் அவர்களாகவே இருக்கவிடுவதே நாகரீகம் எனப்படுவது ஒரு நோக்கு.
யாருமே காலப்போக்கில்
" உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு."

என்னும் வள்ளுவட்பாவுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்வது நல்லது என்பதும் மற்றொரு நோக்கு.
(நம் தமிழகத்திலும் நரிக்குறவர்கள் நாடோடிகள் போன்று தனிப்பட்ட ஒரு மொழிதனையும் வாழ்க்கை தரத்தையும்
கொண்டவராக இருப்பதைக் காண்கிறோம். இருப்பினும் வாழ்க்கையின் வசதிகள் பல ( வீட்டு இருப்பிடம் தவிர)
மற்றவையில் பெரும்பான்மை அவர்களிடம் இருக்கின்றன.)

aborigines எனப்படும் சமூகத்தைப் பற்றியும் அவர்கள் வாழும் சூழ்னிலை பற்றியும் விரிவாக எழுதியது
சிறப்பாக உள்ளது.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
http://Sury-healthiswealth.blogspot.com

natbas said...

சிந்தனையைத் தூண்டும் கட்டுரை, மிக்க நன்றி.

ஆஸ்திரேலிய மூலக் குடியினரின் பண்பாடு வேறாயிருக்கலாம். ஆனால் அதற்காக அவர்களுக்கான மருத்துவ முறைகளும் மாறுபடுமா என்ன? வித்தியாசமான அணுகுமுறையாக இருக்கிறது.

A doctor said...

@ sury

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மாற்றம் பற்றிய உங்கள் கருத்து மிகப்பொருத்தமானது. மாற்றம் உலகுக்கு அவசியம்
நரிக்குறவர்களுக்கும் மூலகுடிகளுக்கும் உள்ள வித்தியாசம் இவர்கள் நிலத்தோடு தொடர்புடையவர்கள் என்று நினைக்கிறேன்.

@ நட்பாஸ்
நன்றி

மூலக்குடிகளுக்கு பொருந்துகிற பலவிஷ்யங்கள் எங்களுக்கும் பொருந்துகின்றன.
வெள்ளையினத்தவரில் ஆரோக்கியத்தைப்பேணுகிற சுகாதார அமைப்பும் கொள்கையும் ஏன் மூலக்குடிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவில்லை என்ற கேள்விக்கான தீர்வுதான் இது.

தனியே சிகிச்சை மாத்திரமல்ல தடுப்பு முறைகள் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மீட்டெடுத்தல் போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியிருக்கிறது. மருத்துவமுறை பொதுவான ஆங்கில அல்லது அலோப்பதி அடிப்படையிலானாதே.
primary care, secondary care, tertiary care மூன்றிலும் பண்பாடு தாக்கம் செலுத்துகிறது.

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

நேர்த்தியாக எழுதி இருக்கிறீர்கள் . ஒவ்வொரு வரிகளும் சிந்திக்கத் தூண்டும் வண்ணம் அமைந்திருக்கிறது . பகிர்ந்தமைக்கு நன்றி