இணையத்தைத்திறந்தேன்.எழுதத்தொடங்கினேன் பதிவின் முதலாவது வாக்கியம்’வேதாளம் முருங்கை மரத்தில் மீண்டும் ஏறிக்கொண்டது’’ விசைப்பலகையை அழுத்த கணனித்திரையில் எழுத்துக்கள் எழுந்தன.
அப்போது சுந்தரராமனின் கால் வந்தது. அவனோடு நிறையவும் பேசவில்லை. அவன் வள வள. எனக்குப்பேசுவதை விட எழுதினால்பிடிக்கும்.அவன் சொன்னதற்கு சரி என்று பேச்சை முறித்து கைபேசியை அணைத்துவிட்டு கணனித்திரையைப்பார்த்தேன் அடித்த வாக்கியத்தை காணவில்லை.
கைதவறி அழித்துவிட்டேனோ என்று நினைத்துக்கொண்டு ‘’வேதாளம் முருங்கை மரத்தில் மீண்டும் ஏறிக்கொண்டது ’’என்று மீண்டும் அடித்தேன் .
வார்த்தைகள் கணணித்திரையில் தோன்றின. எழுத்துக்கள் தங்கவில்லை. பூக்களைப்போல உதிர்ந்து விழுந்தன.
அப்பொழுதான் கவனித்தேன்.முதலாவது வாக்கியத்தின் எழுத்துக்கள் விசைப்பலகையிலும் கணனிக்கு அடியிலும் சிதறிக்கிடந்தன. ஆச்சரியமாக இருந்தது . ‘க’ என்று அழுத்தினேன். எழுத்துத்தோன்றி மீண்டும் வெளியில் விழுந்தது.
விழுந்திருந்த எழுத்துக்களில் ஒன்றை சுட்டுவிரலினால் வருடிப்பார்த்தேன் மிருதுவாக இறகைப்போல இருந்தது.வழுக்கவும் செய்தது.பாகுபோலவும் இருந்தது.திண்மம் திரவம் பாகு இப்படி நான் இதுவரை அறிந்த பொருட்களுக்கப்பாற்பட்ட கலவையான விசித்திரத்தன்மையோடு இருந்தது.
விழுந்த எழுத்தை விபரிக்கவேண்டுமென்றால் எந்தவார்த்தையைப்பயன்படுத்துவது என்ற வினா இயல்பாக மனத்தில் எழுந்தது.
என் பதிவின் பக்கங்களை திறந்தேன் பாத்திர அடுக்குகளிலிருந்து தவறுதலாகச்சரிந்த அரிசிப்பாத்திரத்திலிருந்து கொட்டுகிற அரிசி போல எழுத்துக்கள் கணனித்திரையிலிருந்து கொட்டி மேசை விசைப்பலகை குவிந்து தரையிலும் சிந்தின.
எங்கும் கருகிய வாசனை ஒன்று பரவியது.
எழுத்துக்கள் வடிந்து என் பதிவு வெற்றுத்தாளாகக்கிடந்தது.
என்ன நடக்கிறது என்று எனக்குப்புரியவில்லை . இன்னொரு பதிவின் பக்கத்தைத்திறந்தேன்.அந்தப்பதிவிலிருந்த எழுத்துக்களும் கொட்டுண்டன. இப்போது அறையெங்கும் சுகந்தம் பரவியது.
விசைப்பலகையை கையிலெடுத்து எழுத்துக்கள் எல்லாவற்றையும் உதறிக்கொட்டினேன்.
எனக்குத்தெரிந்த எல்லாப்பதிவுகளையும் ஒவ்வொன்றாக திறக்கத்தொடங்கினேன்.
ஒவ்வொருபக்கங்களிலிருந்தும் எழுத்துக்கள் விதம்விதமாக வெளியில் விழுந்தன.தெறித்து விழுந்தன.அறுந்துவிழுந்தன. பாப்கார்ன் போல வெடித்துப்பறந்தன புழுதி ,பூச்சு போல உதிர்ந்தன. இறகுபோல காற்றில் தவழந்து வந்தன.வாக்கியங்கள் கொத்தாக விழுந்து சிதறின.கோலிக்கொண்டுகள் போல உருண்டோடின. ஜவ்வு போல இழுபட்டு விழுந்தன.
பதிவுகளையும் பக்கங்களையும் திறக்க எழுத்துக்கள் கொட்டுவதும் தாள்கள் வெறுமையடைவதும்
எனக்கு எல்லையில்லாத ஒரு கிளர்ச்சியைத்தந்தது.எழுத்துக்கள் விழுவது அனுபவித்திராத அனுபவம் வெறிகொண்டவனாக பக்கங்களைத்திறந்துகொண்டேயிருந்தேன். விதம் விதமான எழுத்துக்கள் தொடர்ந்து குவிந்து கொண்டேயிருந்தன.
எழுத்துக்கள் வெளியில் உதிர்ந்து பரவ கூடவே எழுந்த வாசனைகள் மாறிக்கொண்டேயிருந்தன. பக்கங்களுக்கேற்றவாறு நறுமணத்திலிருந்து முடை நாற்றம் ,அழுகிய எலி,மலச்சிக்கல் குசு,புளித்த கள்ளு, சாக்கடை,இரத்தம் ,பிணம் இப்படி வாழ்வின் அறையெங்கும் நறுமணமும் நாற்றமும் பரவிக்கொண்டேயிருந்தன..ஒரு கட்டத்தில் நான் நுகர்வுத்திறனை இழந்துவிட்டிருந்தேன்.
பலவித வண்ணங்களில் இருந்த எழுத்துக்கள் சில வெதுவெதுப்பாக கதகதப்பாக இருந்தன.சுடச்சட ஆவிபறக்க வந்து விழுந்த எழுத்துகளும் இருந்தன. குளிர்ந்தபடி பனிபடர்ந்தபடி குளிர்வீசி வெம்மைபரப்பி எழுத்துக்களின் வகைகளில் நான் என்னனை மறந்துபோயிருந்தேன்
காற்றில் தவழ்ந்த எழுத்து என் மூக்குக்குள் புகுந்துகொண்டபோது தும்மல் வந்து விட்டது.பலமான தும்மல் .எச்சிலில் நனைந்தபடி எழுத்துக்கள் என்னைச்சுற்றி சுழன்றன.
அப்போதுதான் இந்த மயக்கத்திலிருந்து விடுபட்டு அவதானித்தேன்.
அறை எழுத்துக்களின் மூட்டத்தால் நிறைந்திருந்தது.தூசைப்போல சாம்பலைபோல எங்கும் எழுத்துக்கள்படர்ந்திருந்தன. அறையில் எழுத்துத்தேங்கத்தொடங்கியிருந்தது.
மனக் கிளர்ச்சி சட்டென்று வடிந்தது.கொஞ்சமாக பயம் எட்டிப்பார்த்தது.நான் அறையைவிட்டு வெளியேற நினைத்து. எழமுயன்றேன் முடியவில்லை.கால்கள் எழுத்துகளினுள் புதைந்திருந்தன.கட்டிப்போடும் எழுத்துக்கள்.
உடல் விதிர்விதிர்த்துப்போனது..நெஞ்சுபடபடத்து வியர்க்கத்தொடங்கியது. என்வியர்வையில் எழுத்துக்கள் ஒட்டத்தொடங்கியிருந்தன.நெஞ்சின் படபடப்போடு எழுத்துக்களும் சேர்ந்து அதிர்ந்தன. மூச்சை வேகமாக இழுக்க எழுத்துகள் நெருங்கிவந்தன.கைகளை அசைத்து எழுத்துக்களை விலக்கிக்கொண்டே கைபேசியைத்தேடினேன் கைபேசியைக்காணவில்லை எழுத்துக்குள் மறைந்துவிட்டிருந்தது.
விசைப்பலகை இழுத்து மீண்டும் உதறி எழுத்துக்களை ஒதுக்கித்தள்ளிவிட்டு நடுக்கத்தோடு வேகமாக அடித்தேன்.கூகுள் திறந்துவிட்டது.
நான் கூகுளைத்திறந்திருக்கக்கூடாது.
அது திறக்கக்கூடாதகதவு. திறந்ததுதான் தாமதம் எழுத்துக்கள் மிகவேகமாக கணனியிலிருந்து சொரியத்தொடங்கின.கோடிக்கணக்க்கான விதம்விதமான உலகின் எல்லாமொழிகளிலுமிருக்கும் எழுத்துக்கள் ஸ்ஸ்ஸ் என்ற ஒரு வகை டிஜிட்டல் இரைச்சலோடு கணனியின் திரையிலிருந்து பாயத்தொடங்கின
எழுத்துக்கள் அறையில் நிறைந்து உயர்ந்து யன்னல்கள் வழியே வழிந்து ஆறாகி வெளியே ஆறு போல ஓடின.அறையெங்கும் வண்ணமயமாக எழுத்துக்கள் மேலும் பரவி படர்ந்து அடர்ந்தன
என்னைச்சுற்றி எழுத்துக்கள் சுழிகொண்டு சுழலத்தொடங்கின. நான் மூழ்கிக்கொண்டிருந்தேன்.மூச்சோடு எழுத்துக்கள் உட்சென்று வெளிவந்துகொண்டிருந்தன. படர்ந்தும் மூச்சோடு ஊடுருவியும் எழுத்துக்கள் என் உடலெங்கும் பரவத்தொடங்கியிருந்தன.
’எழுத்துக்களில் என்னைத்தேடுங்கள்’ என்று எழுதவேண்டும் போல கடைசிக்கணத்தில் எனக்குத்தோன்றியது

3 comments:
அருமையான கதை. கற்பனை என்றால் இப்படி இருக்க வேண்டும். இந்தக் கதையைப் பற்றி எழுதுவதானால் எவ்வளவோ எழுதலாம்.
நல்ல வாசிப்பனுபவம். மிக்க நன்றி.
@நட்பாஸ்
ஊக்கத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சார்.
நீங்கள் ஆறு என்று உருவகப்படுத்தியதுதான் இது
ஊக்கமெல்லாம் இல்லை. உள்ளதைச் சொன்னேன்.
நான் சுட்டிக்காட்டிய ஆற்றைவிட ஆழமும் அகலமும் நிறைந்தது நீங்கள் எழுதியுள்ள விஷயம். இதை கரை காண முடியாத மகா சமுத்திரத்தின் ஒரு அலை என்றே சொல்லலாம். நீங்கள் எழுதியுள்ளதன் உட்பொருள் அவ்வளவு கனமானது.
இன்றுகூட நண்பர் ஒருவர், "எழுத்தை எழுத்தால் எழுதிக்கொண்டிருக்கிறது எழுத்து," என்று எழுதியிருந்ததைப் படிக்க நேர்ந்தது. அப்போது உங்கள் இந்தக் கதை நினைவுக்கு வந்துதான் இங்கே திரும்ப வருகிறேன்.
பிரம்மன் நம் தலையில் எழுதியதில் ஆரம்பித்து நாம் நம் நாட்களின் ஒவ்வொரு கணமும் மனதில் ஏதோ எழுதிக் கொண்டே இருக்கிறோம், எழுத்தாளர்களாக இல்லாதவர்களும்கூட. narrative therapy பற்றி நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை.
வார்த்தைகள் அற்ற உலகில் மனிதர்கள் இருக்க முடியுமா? அவர்கள் மனிதர்களாக இருந்திருக்க முடியுமா?
நாம் எழுத்தால் நிறைந்திருக்கிறோம். நம் உலகை எழுத்தே நிறைக்கிறது.
//.’எழுத்துக்களில் என்னைத் தேடுங்கள்’ என்று எழுத வேண்டும் போல கடைசிக் கணத்தில் எனக்குத் தோன்றியது// என்று எழுதியுள்ளீர்கள். உண்மையைச் சொல்வதானால் எழுத்துக்கு வெளியே நம்மைக் கண்டுபிடிக்க முடியாது.
மொழியில்தான் நாம் வாழ்ந்து மடிகிறோம்.
மிக்க நன்றி.
Post a Comment