நான் படிக்கத்தொடங்கியபோது
நீங்கள்
போராடத்தொடங்கியிருந்தீர்கள்
நான் வகுப்பறைகளில்
புத்தகங்களிலும்
இலக்கியத்திலும்
மூழ்கியிருந்தபோது
நீங்கள்
காடுகளிலும் காவலரண்களிலும்
உறக்கம் தவிர்த்திருந்தீர்கள்
உங்கள் உடலங்கள்
ஊர் திரும்புகிறபோதுகளில்
கறுப்புக்கொடி கட்டி
தோரணங்களைத்தொங்கவிட்டு
அஞ்சலி செலுத்துவேன்
ஆயினும்
அடுத்த பரீட்சைக்காக
என் படிப்பு
தொடர்ந்து கொண்டேயிருக்கும்
இடம் பெயரும்போது
புத்தகங்களையும் காவியபடிதான்
ஓடியிருக்கிறேன்.
ஷெல்களுக்கும்
விமானம் வீசும் குண்டுகளுக்கும்
விழுந்து படுத்துவிட்டு
ஓய்ந்தபின்
எழுந்து படிக்க
என்னால் முடிந்திருக்கிறது.
காய்ந்து இறுகிய
கரங்களில்
துப்பாக்கிகளோடு
நீங்கள்,..
என்
மென்மையான
கைகளில் புத்தகங்களோடு
நான்..
எத்தனைமுறை
கடந்து சென்றிருப்போம்
ஏன்
என்னைக்குறுக்கிடவேயில்லை
நீங்கள்?
படிப்பில் நான்
வென்றுவிட்டதாக
சொல்லிக்கொள்கிறார்கள்.
இப்போது….
நீங்கள்
போராடிக்கொண்டிருந்தபோதுதான்
நான் படித்துக்கொண்டிருந்தேன்.
8 comments:
great kittu
வலி நிறைந்த கவிதை கிட்டு...... ஞாபங்கள் மனச்சாட்சியை உறுத்துகின்றது...
சில விஷயங்கள் பாராட்டுதல்களுக்கு அப்பாற்பட்டவை.
அப்படிப்பட்ட ஒன்று இது.
மிக்க நன்றி.
விளக்கம்: நீங்கள் மீண்டும் கவிதை எழுதத் துவங்கியுள்ளதற்கே அந்த நன்றிகள்.
கிட்டு, மிக்க நன்றி- அரசியலை வெளியிலிருந்தே விமர்சித்துக் கொண்டிருந்த"அறிவாளிகளின்" உள்ளங்களைத் தொடும் இந்தக்கவிதைக்காக-சுதா
மனது உறுத்துகின்றது !!!
I CAN FEEL IT. BUT I AM NOT HAPPY WITH CURRENT STATUS OF MINE
உங்கள் ஒத்துணர்வுக்கு நன்றிகள்
Post a Comment