Tuesday, April 26, 2011

ஆஸ்திரேலியா மூலக்குடிகள் -காலம் கற்றுத்தந்த பாடம்!


மருத்துவமனையின் அறையில் அருகிலிருந்த பாகிஸ்தானிய டொக்டரோடு பேசிக்கொண்டிருந்தபோது ஓய்வுக்குப்போயிருந்த கணினி சிலிர்த்துக்கொண்டது

ஆஸ்திரேலியாவின் மூலக்குடிகளுக்கும்-(அபொரிஜனிஸ்-Aborigines) மற்றையவர்களுக்குமான இடைவெளியை நிரப்புதல் என்ற இலட்சியம் சித்திரிக்கப்படுகிற ஸ்கிரீன் சேர்வர் திரையில் தோன்றி அசையத்தொடங்கியது

மூலக்குடி ஆஸ்திரேலியர்கள், உடல்நலத்தில் மற்றையவர்களை விட பத்து ஆண்டுகள் மேலாக பின்தங்கியிருக்கிறார்கள்(உடல்நலத்தில் மாத்திரமல்ல).அதை இட்டு நிரவுவதற்காக அரசு முயன்று வருகிறது.

மூலக்குடி ஆஸ்திரேலியர்களுக்கான சுகநலத்திட்டங்களில் முக்கியமான அங்கமாக சுகாதாரப்பணியாளர்களுக்கு மூலக்குடிகளின்  பாரம்பரியம், பண்பாடு, ,அவர்கள் கடந்து வந்த கொடூரமான வரலாறு உள்ளடங்கிய ஒரு பயிற்சி நெறி வகுக்கப்பட்டிருக்கிறது.

1770 களில் இருந்து வெள்ளையினத்தவர் குடியேறிய நாள்களில் இருந்து மூலக்குடிகள் தொடர்பாக வேறுபட்ட அணுகுமுறைகளை கையாண்டு வந்திருக்கிறார்கள்.
300000 முதல் மில்லியன் எண்ணிக்கையாக இருந்த மூலக்குடிமக்களின் எண்ணிக்கை 1920 களில் 60000 ஆக குறைந்து விட்டிருந்தது.
நிலத்துக்கான போராட்டத்தில் துப்பாக்கிகளுக்கெதிராக ஈட்டிகளால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை.படுகொலைகளைத்தவிர குடியேற்றக்காரர்கள் கொண்டுவந்த நோய்களும் திணிக்கப்பட்ட வாழ்க்கைமுறைகளும் உயிரிழப்புகளுக்கு பங்களித்தன.
இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த ,மண்ணை தம்மில் ஒரு பகுதியாக கருதிய அவர்களின் இன்றைய பிரச்சினைகளுக்கு காரணமாக கூறப்படுவது Dispossession பறிகொடுத்தமை என்கிறார்கள்.

ஆஸ்திரேலியர்கள் தேசத்தினை முழுமையாக்குவதற்கு இவர்களின் துயரத்தை நூற்றாண்டுக்காலமாய் தொடர்ந்து வருகிற இடைவெளியை எவ்வாறு நிரப்புவதென்று சிந்தித்திருக்கிறார்கள்.பல நூல்கள் உண்மைகளை நேர்மையாக வெளிப்படுத்தி வெளிவந்திருக்கின்றன. ஆய்வுகளும் அப்படியே.
.
அதன் விளைவாக நடந்த கொள்கை மாற்றங்களால் உருவான இந்த மூலக்குடிகளுக்கான வைத்தியசேவைக்கான பயிற்சித்திட்டத்தில் வரலாற்றுப்பாடம் இப்படித்தொடங்குகிறது

‘’ஆஸ்திரேலியாவுக்கு மூலக்குடி மக்கள் குடியேறிவாழத்தொடங்கிய காலம் ஒரு மணித்தியாலமாக( நாற்பதாயிரம் வருடங்களாகிறது)  இருந்தால் , பகிர்ந்து கொள்கிற குடியேற்ற(ஆங்கிலேயர்)காலம்  19 செக்கன்கள் தான்.”


மூலக்குடிகள் நாற்பதாயிரம் வருடங்களாக வாழ்கிறார்கள்.ஆங்கிலேயர் குடியேறி 209 வருடங்களாகிறது.

750 விதமான குழுக்கள்,250 மொழிகள், 40000 வருடங்கள்

கற்பிக்கப்படும் இந்த வரலாறு மூலக்குடிகளின் இழப்பின் பிரமாண்டம் பற்றி மீண்டும் மீண்டும் வலியுறுத்திச்சொல்வதுடன்
காலப்போக்கில் ஆஸ்திரேலிய அரசு கடைப்பிடித்து வந்த கொள்கைகளையும் அதன் விளைவுகளையும் விளக்கிச்செல்கிறது.

ஆரம்பத்தில் அபொரிஜன்களை விரட்டி ஒதுக்கிவைத்தார்கள்.காலப்போக்கில் உள்வாங்கிக்கொள்ளும் சேர்த்துக்கொள்ளும் முயற்சிகளை(Assimilation) கலாச்சார மாற்ற முயற்சிகளை செய்தார்கள்.விளைவுகள் எதிர்மறையாகவே இருந்தன. திருடப்பட்ட தலைமுறை(stolen generations) ஒன்று உருவாகியது

உலக சுகாதார தாபனத்தின்(WHO) ஆரோக்கியம் என்பதன் வரைவிலக்கணம் ஒருவரின் உடல், உள ஆரோக்கியத்தோடு ,சமூகத்தில் அவருடைய ஆரோக்கியமான நிலை என்பதாகும்.
இது ஒரு தனியொருவரின் நலம் பற்றிய கருதுகோள்  தனிநபர் அலகாகாக அணுகுவதிலிருந்து பிறந்தது(individualism)

மூலக்குடிமக்களுக்கான ஆரோக்கியமென்பது உடல் உள சமுக ஆரோக்கியத்தோடு உணர்வு, ஆன்மீக ,கலாச்சார பண்பாடு என்பவற்றை உள்ளடக்கி முழுச்சமுகத்தின் ஆரோக்கியம் என்று விரிவான கருதுகோளாக்கப்பட்டிருக்கிறது.
காரணம் மேலைத்தேயச்சிந்தனைகளின் அடிப்படையிலான தனிநபர் அணுகுமுறைகள் மூலக்குடிகளுக்கு பொருத்தமானதாக இல்லை என்பதாகும்.
அவர்கள் ஒரு சமூகக்குழுவாக இயற்கையோடு ஒன்றி வாழ்ந்துவந்தவர்கள்.நிலத்தோடும் பாரம்பரியத்தோடும் சகமனிதர்களோடுமான அவர்கள் பிணைப்பு தனித்துவமானது.
அவர்களுடைய கலாச்சாரத்தின் வழி ஒருவர் நோய்வாய்ப்படும்போது ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தவேண்டுமென்றால் அவரை மாத்திரம் அணுகினால் போதுமானதல்ல.அது எந்த மாற்றத்தினையும் ஏற்படுத்தாதென்பதாகும்
குடும்பத்தலைவர், சமுகத்தலைவர் பெரியவர்கள் என்ற ஒரு வட்டத்தினூடாக அணுகவேண்டும்.
அவர்களுடைய அடையாளம் கலாச்சார நம்பிக்கைகளினூடாக அணுகவேண்டும் என்பதாகும்.
உள்வாங்குதல் –assimilation என உருவாக்கப்பட்ட கொள்கைகளால் மூலக்குடிச்சிறுவர்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ‘’நாகரிகம்’’ கற்பிக்கப்பட்டது.
அதன் விளைவுகளை, தன் இயல்பான கலாச்சாரத்திலிருந்து பிரிக்கப்பட்டு சுய அடையாளத்தை இழத்தலின் விளைவுகளை திருடப்பட்ட தலைமுறைகளின் வழியாக ஆஸ்திரேலிய புரிந்துகொண்டிருக்கிறது.
மண்ணுக்கும் அவர்களுக்குமான உறவின் ஆழமும் அது பறிக்கப்பட்டதன் தாக்கமும் உணரப்படுகிறது

அதுமாத்திரமல்ல தமது சொந்தக்காலில் தம்மைப்பற்றிய திட்டங்களை தீர்மானிக்கவும் செயற்படுத்தவுமான ஆற்றலை தகர்த்தழித்ததன் மூலம் அபொரிஜன்களை பாலண்டா(Balanda) என அவர்களால் அழைக்கப்படும் வெள்ளையின ஆட்சியின் நுகர்வோர்களாக அல்லது உதவித்தொகைகளில் வாழ்பவராக காலப்போக்கில் உருவாக்கிவிட்ட ஆஸ்திரேலிய அரசு கொள்கையளவில் அவர்களை மீண்டும் சுதந்திர உணர்வுடையவராக மாற்ற முனைகிறது.ஒத்து வாழ்தலின் புதிய கண்ணோட்டம் -(Reconciliation)உருவாகியிருக்கிறது.அந்தச்சமூகத்தின் ஆரோக்கியம் அதன் வெளிப்பாடு 

ஆரோக்கியம் என்பது முதலில் தம்மை ஏற்றுக்கொள்வதிலிருந்து தொடங்குகிறது. மூலக்குடி என்கிற அடையாளம் தனித்துவமானது பெருமைமிக்கது.அவர்களுடைய கலைகள் சிந்தனை முறைகள் மதிக்கப்படுவன என்ற உணர்வை அவர்களில் உருவாக்க வேண்டும் அல்லது வழங்கப்படுகிற சேவைகள் அவர்களை அப்படி உணரவைக்க வேண்டும் என்று பயிற்சி நெறி சொல்கிறது
அவர்களுடைய ஆரோக்கியம் அவர்களுடைய சிந்தனை வழிக்கூடாகவே நிகழ்த்தப்படமுடியும். மேலைத்தேயச்சிந்தனை தாம் சரியென்று கருத்துவதை திணிப்பதன் மூலம் அல்ல என்பதை ஆஸ்திரேலியாவின் சுகாதாரக்கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து செயற்பட முனைகிறார்கள். அது முழுச்சமூகத்தையும் ஆரோக்கியமாக மாற்றுகிற செயற்த்திட்டமாக இருக்கிறது.முழுமையான அணுகுமுறை( wholistic) கொண்டதாக இருக்கிறது

பயிற்சி நெறி மேலும் எப்படி மூலக்குடிமக்களுடன் எப்படி புண்படுத்தாத முறையில் ,நல்ல முறையில் உரையாடுவது என்பதையும் கலாச்சார அதிர்ச்சியை (culture shock)விளங்கிக்கொண்டு அணுகுவதையும் சொல்லித்தருகிறது.
‘’அவர்கள் கண்களைப்பார்த்துப்பேசுவதில்லை.
நேரடிக்கேள்விகளை மரியாதைக்குறைவாக கருதுவார்கள்’
நேரம் என்பது பற்றிய அவர்களது பார்வைக்கும் மற்றைய ஆஸ்திரேலியரின் பார்வைக்கும் வேறுபாடு இருக்கிறது.வாழ்வின் செயல்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள் கால அட்டவனைக்கு அல்ல’
இப்படி அவர்களுடைய பண்பாட்டுக்கூறுகளை புரியவைக்கிறது


அதுமாத்திரமல்ல ’அவர்கள் அப்படித்தான் திருத்தமுடியாது’ என்கிற சாக்குப்போக்குகளை நிராகரிக்கிறது

அவர்களுடைய நிலைக்கு அவர்கள் காரணமல்ல என்பதையும் வெள்ளையினத்தவர் வருவதற்குமுன்னர் அவர்கள் தம்மை நிர்ணயித்துக்கொள்கிறவர்களாகத்தான் இருந்தார்கள். பறிகொடுத்தலின் விளைவே இது என்பதை வலியுறுத்துகிறது.
இதனூடாக அவர்களை பழைய நிலைக்குகொண்டு வருவதற்கான பொறுப்புணர்வை மீண்டும் வலியுறுத்துகிறது

இப்படி அந்தப்பயிற்சி நெறி பலவற்றை விபரித்துச்செல்லுகிறது.

அவர்களோடு உரையாடும்போது அவர்களுடைய பண்பாடு கலாச்சாரத்தைப்புரிந்து வைத்திருங்கள். அவர்களுக்குப்பின்னால் ஒரு நீண்ட காயம் பட்ட வரலாறும் அதன் மனத்தாக்கங்களும் இருக்கிறதென்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.அப்போதுதான் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் வெறும் மருந்துகளும் அட்டவணைப்படுத்தப்பட்ட சேவைகளுமல்ல’’-  இப்படி அந்த கல்வி நெறி சொல்வதை சுருக்கமாக சொல்லலாம்..
இலக்குகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அறிவும் தெளிவும் ஊட்டப்படுகிறது. நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தாலும் சட்டங்களும் திட்டங்களும் இதை நோக்கி ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
விளைவைக் காலம் சொல்லும் 
 இரவு, ஆஸ்திரேலிய வரலாற்றுப்புத்தகப்பக்கங்களை புரட்டிக்கொண்டிருந்தேன்.தொலைக்காட்சியில் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது
 தன் நிலமொன்றிலிருந்து அபொரிஜனை வெளியேறச்சொல்லிவிட்டு  நடந்தபடி போலண்டா(வெ.ஆஸ்திரேலியன்) பாடிக்கொண்டிருந்தான்
‘’இந்த நிலம் என்னுடையது ''This Land is mine..............''
எதிர்ப்பக்கமாக பரந்த நிலத்தின் புதர்களுக்கிடையே நடந்தபடி மூலக்குடி ஆஸ்திரேலியன் பாடிக்கொண்டிருந்தான்
’’இந்த நிலம் நான்.  ''This Land is me........''
{பாடல்: '' This land is mine''       One night the moon என்ற ஆஸ்திரேலியத்திரைப்படத்திலிருந்து)}


வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றது.

Friday, April 22, 2011

இன்னும் இருந்துகொண்டேயிருக்கிறது ..இல்லை!


இதுவரை
நடந்ததெல்லாம்.. 
சொல்லும் சாட்சியாக
யாரும்
துணியவுமில்லை

இருந்து,
இல்லாமல்போன,
அடையாளம் எதையும்
விட்டுச்செல்லவுமில்லை.. அது.

திட்டமிட்ட
ஒரு அமாவாசை நாளின்
தீர்மானத்தினால்
இல்லை
என்றாகிவிட்டிருந்தது
நிலவு!

ஆயினும் 
இதோ
வெளிப்பட்டு
வளர்ந்துகொண்டேயிருக்கிறது!.

தேய்வதற்கும்,
மறைவதற்கும்,
வளர்வதற்கும்,
அப்பால்…

எப்போதும்,
நிலவுகிறது
உண்மை!


Monday, April 18, 2011

நிழலற்ற இடமெங்கும்....


நெற்றியில் விழுந்தமுடியை ,ஊறிய வியர்வையை புறங்கையால் துடைத்தபடி ’’சூ..’’ என்று காகங்களை கை வீசித் துரத்தியபடி பச்சை நிறமாயிருந்த குளத்து மீனின் செதில்கள் சுரண்டி  கால் பெருவிரலுக்குள் மல்லாக்கப்படுதிருந்த பாளைக்கத்தியில் தேய்த்து செதில்களை உதிர்த்து மீனை நாலுகூறுகளாய் அரிந்தாள் அன்னராணி.
மண்சட்டியில் துண்டுகளைப்போட்டு பிளாஸ்ரிக் வாளியின்  விளிம்பைப்பற்றியபடி மறுகையால் தன் நொய்ந்தஅழுக்குக்கரடிபொம்மையை தண்ணீரில் தோய்த்துக்கொண்டிருந்த குழந்தையினுடைய கைகளை விலக்கி வாளியை இழுத்து சரித்து  சட்டியில் நீரை விட்டு விளாவினாள்.
கழுவிய தண்ணீரை சோகைபிடித்துபோயிருந்த வாழைக்குட்டிகளின் பக்கமாக எற்றியெறிந்தாள்.காகங்கள் எழுந்து சிதறிப்பறந்து வாழையடியில் மினுங்கிய செதில்களை கொத்தத்தொடங்கின.

குழந்தை மண்ணில் தொப்பென்று இருந்து அழுதபடி கையிலிருந்த ஈரம் ஊறிஒட்டிப்போயிருந்த கரடிபொம்மையை வீசியெறிந்தது.
கழுவி முடித்த சட்டி மீனை தூக்கி எட்டிக்குழந்தையை மறுகையால் அள்ளி இடுப்பில் இருத்திக்கொண்டு குடிசையின் தடுக்கை காலால் தள்ளி உள்ளே நுழைந்தாள்.
சோமன் ஓலைப்பாயில் குப்புறப்படுத்திருந்தான்.குடிசை முழுவதும் சாராய நெடி அடர்ந்திருந்தது.
குழந்தையை அவனருகில் இறக்கியிருத்தி குடிசையின் நீட்டமாய் பின்புறமாய் இருந்த மட்டைவரிந்த  சின்ன அடுக்களைக்கூட்டுக்குள்
குனிந்து புகுந்தாள்.

குழந்தை உட்காரவில்லை துடித்தால்போல உதறியபடி எழுந்து தத்தி நடந்து  வாசல் தடுக்கைக்கடந்து வெளியே வந்தது.

எறிந்துவிட்டு வந்த கரடிப்பொம்மையை நோக்கித்தொடர்ந்தும் விசைப்பொம்மையாக ஆடி நடக்கத்தொடங்கியது.
இன்னும் சில காகங்கள் வாழையடியில் உட்கார்ந்திருந்தன.

விழுந்த இடத்திலேயே குளிப்பு முடிக்கக்காத்துக்கொண்டிருந்தது கரடிப்பொம்மை.
வெயில் நிழலற்ற இடமெங்கும் படர்ந்தபடி ஊர்ந்து கொண்டேயிருந்தது.
 ************************************************************************************

Sunday, April 10, 2011

முதலில் பேசுவோம்..... வாருங்கள்!



’’நான் ஒன்று கேக்கட்டா டொக்டர். “

’’தாராளமாய்க்கேளுங்கோ”

’’நீங்கள் டொக்டரில்லைத்தானே .அட்டெண்டனோ அல்லது பைத்திய ஆஸ்பத்திரியிலை இருந்து ஓடி வந்து டொக்டர் மாதிரி நடிக்கிற ஆள்தானோ என்னவோ …….டவுட்டாயிருக்குது .…… எத்தனை தமிழ்ப்படம் பாத்திருக்கிறன். இப்பிடித்தான் இந்தமாதிரிக்கதைகள்  முடியும் சொல்லுங்க நீங்கள் உண்மையில் யார்?’
  
’’ஏன் அப்படிச்சொல்லிறியள்”

 ஏன் அப்படி அந்த நாயிடம் கடிபட்டவர் உணர்கிறார் என்பதை சொல்லி விளக்கத்தேவையில்லை.
 **************************************************************************

மருத்துவர்கள் நோயாளர்களுடன் உரையாடுவது சிகிச்சையில் மிகமுக்கியமான பாகம்.
மருத்துவக்கல்விக்காலம் முழுவதும் நோயாளியுடன் உரையாடுவதற்கான திறமையை மருத்துவ மாணவன் கட்டியெழுப்பவேண்டியது கட்டாயமானதாக இருக்கிறது.

மீண்டும் மீண்டும் பயற்சி செய்யப்பட்ட ஒரு பேச்சு முறை காலப்போக்கில் இயல்பாக மாறிவிடுகிறது.
நல்லுறவைக்கட்டியெழுப்புதல்,நம்பிக்கை உருவாக்குதல், ஒத்துணர்வுடன் பரிவோடு பேசுதல், மதிப்போடு,நோயாளியின் உரிமையை, அவருடைய கலாச்சாரத்தை புரிந்து கொண்டு பேசுதல் ,மதிப்பீடற்ற வெளிப்பாடு(rapport, empathy,respect, non judgmental). 

  
”புகைத்தல்,குடி இப்படி கெட்ட பழக்கம் ஏதாவது இருக்கிறதா”? என்று கேட்பது மதிப்பீட்டுக்குள் வருகிறது. புகைப்பவர்கள் கெட்டவர்கள் என்கிற டொக்டரின் தனிப்பட்ட அபிப்பிராயத்தின் தீர்ப்பு அடங்குவது நோயாளியின் நுண்ணுணர்வை,தன் மதிப்பை பாதிக்கும். டொக்டர் என்னை கெட்டவனாக நினைத்துவிடுவார் என்று தவறான தகவல்களைக்கூட தரக்கூடும்.
“ சிச்சீ நான் குடிக்கிறதில்லை”
“புகைப்பவரா? எத்தனை சிகரட்?/ மது அருந்துபவரா?” இவை மதிப்பீடற்ற வினாக்கள். கலாச்சாரம் பற்றிய பின்னணி அறிவு மருத்துவருக்கு அவசியமாகிறது. தர்மசங்கடங்களைத்தவிர்க்கும்

இப்படி பல நுண்ணிய அம்சங்களைக்கொண்டிருக்கிறது மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்குமான உரையாடல்.

தவிர நோயின் தன்மையை நோயாளிக்கு விளங்கக்கூடிய மொழியில் புரியவைக்கவேண்டியது ஒரு மருத்துவரின்கடமை. சந்தேகங்களுக்கெல்லாம் பதிலளித்து தெளியவைக்கவேண்டியது சிகிச்சையின் ஒரு பகுதி.

மருத்துவர் நல்ல ஒரு உரையாடலை நிகழ்த்தி நோய்பற்றிய பரிபூரணமான பின்னணித்தகவல்களையும் சிகிச்சையைத்தீர்மானிப்பதற்கான தகவல்களையும் ஒரு சேரபெற்றுக்கொள்கிறார்.
உதாரணமாக  நெஞ்சு வலி என்று சொல்லிவருபவரிடம் நெஞ்சுவலி பற்றிய விவரணத்தோடு ,புகைத்தல் குடிப்பழக்கம் உணவுப்பழக்கம் வாழ்க்கைச்சிக்கல் என பல்வேறு விஷயங்களை கேட்டறிவார்.அத்தோடு மருந்துகளுக்கான அலர்ஜி பற்றியும் கேட்டறிவார்கள்.இவை பின்னர் சிகிச்சைமுறைகளைத்தீர்மானிப்பதில் உதவுகின்றன.

நல்ல உரையாடலைத்தொடங்குவதற்கு பொதுவாக இரண்டுவிதமான கேள்வி முறைகளை உபயோகிக்கிறார்கள்.
 திறந்த கேள்வி;Open questions
‘’ நெஞ்சு வலியா? விளக்கமாக முதல்லை இருந்து சொல்லுங்கோ ‘’ என்று கேட்டால் போதுமானது.
சிலர் கொட்டித்தீர்த்துவிடுவார்கள்.சிலர் ஓரிரு வார்த்தைகளோடு நிறுத்தவும் செய்வார்கள்.
இது நோயாளியின் இயல்பை ,அடிப்படை அறிவைப்ப்பொறுத்தது.
சிலர் மிக விஸ்தாரமாக தொடங்குவார்கள்

‘’ எனக்கு இரண்டு வயசாக இருக்கும் போது ஒரு முறை  விழுந்து நெஞ்சில் அடிபட்டது. ஒரு நாள் முழுவதும் அழுதுகொண்டேயிருந்தனாம்.”
இப்படி 50 வயது மனிதர் தொடங்குவார்.நீண்ட கதைக்க்கு தயர்ப்படுத்தவேண்டியதுதான்.
ஆனால் சன அடர்த்திமிக்க ஒரு கிளினிக்கில் இது நிகழ வாய்ப்பேயில்லை.
மருத்துவர் ஊடறுத்து  பொருத்தமான கேள்விகளைக்கேட்கத்தொடங்கிவிடுவார்.
ஆனால் சொல்லிமுடிக்காத அந்தக்கதையிலுள்ள பலசந்தேகங்கள் பற்றிய பயம் அந்த நோயாளியிடம் சிகிச்சை முடிந்தாலும் மீதமிருக்கும்.

நெருக்கடி நிறைந்த எமது சிகிச்சை அறைகளில் இந்த திறந்த வினாக்களுக்கான நேரம் கிடைப்பதில்லை.
அனேகமாக விடை நோக்கிய வினாக்களை- directed questions தொடுத்து முடிவெடுக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுவிடுவார்கள்.

’’நெஞ்சுவலி’’

’’எங்கே வலிக்கிறது’’

’’நெஞ்சின் நடுப்பகுதியில்’’

’’வலி எப்படியானதன்மை?  பாரமாயிருக்கிறதா? எரிக்கிறதா? சுள் சுள் என்று குத்தி வலிக்கிறதா? இழுத்து இழுத்துக்குத்துகிறதா?’’

இப்படி கேள்விகளை அடுக்கி நோய்பற்றிய தகவல்களை அவசரமாக மருத்துவர் உருவியெடுத்துவிடுவார் .

திறந்த வினாக்கள் சிறந்தவை. நோயாளி பற்றிய பல தகவல்களை அவர்களின் பேச்சில் இருந்து கவனித்துக்கொள்ளலாம். அவர்களுடைய நம்பிக்கைகள், பயங்கள், சிக்கல்கள் இயல்பாக வெளிப்படும்.
’’ மூண்டு நாளைக்கு முந்தி ஒரு செத்தவீட்டுக்குப்போனனான் டொக்டர். இரவு வந்து தோஞ்சதாக்கும் அடுத்த நாள் ஒரு மாதிரி இருந்துது.இண்டையிலிருந்து சரியான காய்ச்சல். கொத்தமல்லித்தண்ணி அவிச்சும்குடிச்சன் சரிவரேல்லை”

இப்படித்தொடங்கும்போது அவர்கள் தங்கள் நோயையும் தாங்கள் நம்பும் நோய்க்கான காரணத்தையும் சேர்த்து சமூக ப்பொருளாதாரபினணியோடு பிசைந்து சொல்லத்தொடங்குவார்கள்.
தங்கள் பயங்களை அவிழ்த்து அதற்கான விளக்கங்களை அறிந்து கொள்ளும்போது பாதி நோய் தீர்ந்து விடுகிறது.
ஒரு திறந்த வினாவைத்தொடர்ந்து விடுபட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப மருத்துவர் மேலும் பல விடயங்களை நேரடிக்கேள்விகளாகக்கேட்டறிவார்.

ஒரு நாளைக்கு 400 நோயாளிகள் வந்துகாத்திருக்கிற இடத்தில் நேரம் பங்கிடப்படுகிறது. வைத்தியர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கை, கதைக்கும் நேரம் தேனீர் இடைவேளை இப்படி  நேரம் நிறுவனத்தாலும் மருத்துவர்களாலும் பணியாளர்களாலும் பிரக்ஞை இன்றி பங்கிடப்படும்போது ஒரு நோயாளிக்கு 3-5 நிமிடங்களே மிஞ்சும்.
 காத்திருக்கும் நோயாளிகள் நேரம் பற்றிய முழுப்பிரக்ஞையோடு காத்திருப்புக்கும் சந்திப்புக்குமான நேர இடைவெளிகளில் விரக்தியை நிரப்பிக்கொண்டிருப்பார்கள் 
3-5 நிமிடங்களில் சொல்லப்படமுடியாதவைகள் நோயின் மீதிகளாய்ப் பின் தொடரும்.

‘’குளிக்க வாக்கலாமோ? எண்ணெய்ச்சாப்பாடு குடுக்கலாமோ. எல்லாம் கேட்டுவந்தனிங்களே” அம்மா கேட்பாள்

“ கேக்கேல்லை” அப்பா சுரத்தில்லாமல் சொல்வார்.
‘’சரியான சனம்’’ பதில் முனகலாக தொடரும்.
 ‘’இதுதான் இந்த மனுசனோடை பிள்ளையளை அனுப்புறதில்லை. வாயைத்திறக்காது    ஒரு சனத்தைக்காணப்படாது வாயடச்சுப்போடும்..”
  
விளைவு, மருந்துமுடியும் வரை பையன் குளிக்கமாட்டான். எல்லாரும் வடை சாப்பிட்டால் மருந்து முடியட்டும் காத்திருக்கவேண்டி வரும்.
மருந்து முடிய வடை மீது ஒரு வெறியே வந்துவிட்டிருக்கும்
சங்கடந்தான்..

.

Friday, April 8, 2011

தர்மசங்கட வைத்திய ரகசியங்கள்-I


"சொல்லுங்கோ  என்ன பிரச்சினை?"

"எனக்கு நாய் கடிச்சுபோட்டுது டொக்டர்"

"அட ஏன் நாய்க்குக்குக்கிட்டபோனனிங்கள்"

"நான் தெருவாலை போய்க்கொண்டிருந்தன். நாய் பின்னாலை வந்து" கடிச்சுட்டுது

”அ.. நாய் பின்னாலை வந்து ?
…… நாய்க்குபின்னாலை வாயில்லையே முன்னாலைதானே இருக்கு.”

”நாய் எனக்குப்பின்னாலை வந்ததது எண்டதைத்தான் அப்படிச்சொன்னனான்.”

”சரி. என்ன பெயர் சொல்லுங்கோ.”

”நாயின்ரை பெயர் தெரியாது. கறுப்பு நாய்.”

”நாயின்ரை பெயரைக்கேட்கேல்லை. உங்கடை பெயரைக்கேட்கிறன்.”

”ராமப்பா செல்லம்”

”ராம் அப்பா செல்லம்?  ஏன் காணும் நீர் அம்மா செல்லம் இல்லை?உம்மட பெயரைச்சொன்னாக்காணும் நீங்கள் ஆற்ரை செல்லம் என்றது வைத்தியத்துக்குத்தேவையில்லை சரியா?”

”இல்லை டொக்டர் என்ரை பெயர்தான் செல்லம். அப்பான்ரை பெயர் ராமப்பா.”

”நல்ல  சூட்சுமமான பெயர். சரி…நாய் எங்க கடிச்சது”

”சிறாம்பியடியிலை மெயின்றோட்டிலை ஏற முன்னம் ஒரு மதகு வருமே அதடியிலை ஓடியந்து கடிச்சுது.

”மதகு வருகுதோ.....அதை நான் கேட்கேல்லை. உடம்பிலை எங்க ”.

”அட இங்கினை கெண்டைக்காலிலை கவ்வினது.இரண்டு பல்லு பட்டிருக்குது இஞ்சை பாருங்கோ டொக்டர்”.

”ஆழமில்லைக்காயம் தோல் கிழிபடேல்லை……
நீங்க நடந்து வாற நேரம் நாய் சும்மா வந்து கடிச்சதோ”

”டொக்டர் என்ன கேக்கிறியள் நாய் சும்மாதானே திரியும்.கோட்டுச்சூட்டு போட்டுக்கொண்டா திரியும்”.

”இவனாரடா…..அதைக்கேக்கேல்லை.சும்மா தெருவாலை போகேக்கை ஒரு நாய் வந்து கடிக்குதெண்டா…...........”

‘’நான் சும்மா போகேல்லை டொக்டர்”

‘’ அதுதானே பார்த்தன் நாயைக்கண்டு வெருண்டிருப்பியள்.கல்லையும் கண்டு நாயையும் கண்டா விடமாட்டியளே’’

‘’ எனக்கு அந்த வியாதியெல்லாம் கிடையாது. நானும் நாய்வளர்க்கிறவன். என்ரை பாட்டிலை ஏதோ யோசனையாப்போய்க்கொண்டிருந்தனான்’’

‘’நாயின்ரை வாலைக்கீலை யோசனையிலை மிதிச்சியிருப்பியள்’’

‘’டொக்டர்………….நான் நாய் கடிச்சு நொந்து போய் வந்திருக்கிறன். நீங்கள் நாய்ப்பக்கம் இருந்து பேசுறமாதிரியிருக்குது. ரோட்டால் சும்மா போய்க்கொண்டிருக்கிறவனை ஒரு நாய் வந்து கடிக்கிறதெண்டா கடிவேண்டினவனிலை என்ன குற்றம்?”

’’ நான் பக்கச்சார்பில்லாத ...ஆள்.....ஓ..இப்ப என்னத்துக்கு......அதை .....ஏன் கேட்டனெண்டா அப்பிடி ஒரு நாய் தூண்டுதலுமில்லாமல் வந்து கடிக்குதெண்டா அது வெறிநாயாயிருக்கலாம் எண்டுதான்’’

‘’ பாக்க அப்படித்தெரியேல்லை கழுத்துப்பட்டி கட்டியிருந்தது’’

‘’ நானுந்தான் கழுத்துப்பட்டி கட்டியிருக்கிறன்........”



************************************************************************ 
.........திக்... திக்..... தொடரும் ..........




Saturday, April 2, 2011

பிர...பஞ்ச.. ஞானம்!


நீங்கள் வித்தியாசமான ஆள்தான்”

“ஏன் அப்படிச்சொல்லுறியள்”

“இல்லை எல்லாச்சனமும் அந்தப்பக்கமா சேர்ந்து ஓடுது நீங்க மாத்திரம் தனியாளா இருந்து புத்தகம் படிச்சுக்கொண்டிருக்கிறியள் அதுதான் கேட்டன்”

”சனங்கள் மந்தை மாதிரி.ஒரு செம்மறி ஓடினால் எல்லாம் ஓடும் பின்னாலை”

“நீங்கள் படிச்சவர் எல்லாத்தையும் யோசிச்சு பகுத்தறிஞ்சுதான் செய்வியள்”

” நான் அப்பிடித்தான்.எல்லாருஞ்செய்யினமெண்டதுக்காக நான் ஒண்டையுஞ்செய்யிறதில்லை.முதல்ல எனக்குச்சரியெண்டு படோணும். அறிவுக்கு பொருந்தோணும்.கன சனத்துக்கு பிரபஞ்ச அடிப்படை தத்துவ அறிவு இல்லை.பொருளுக்கூடான பார்வைதான் பொதுவாய் இருக்குது. உள்ளிருந்தபடியே வெளியிலிருந்து பார்க்கிற பார்வையை ஞானம் தரும்.சனங்களைக்குற்றஞ்சொல்லவும் முடியாது அவங்கள்ட அறிவு அவ்வளவுதான்... ”

“என்னவோ சொல்றியள்.....உண்மையச்சொன்னால் எனக்கு நீங்கள் சொல்றது விளங்கேல்லை… என்ரை மூளை மந்தம்..நீங்கள் படிச்சவர்..சொன்னாச்சரிதான். ...’ஊரோடு ஒத்து ஓடு’ .ஏன் கரைச்சலை …இதுதான் என்ரை பொலிசி”

“அது சரி எல்லாச்சனமும் ஓடுது .நீங்கள் ஏன் போகாமா இருக்கிறியள்”.

“என்ன நீங்கள்!....... நான் போகேல்லையா? …ஹா..ஹா. நான்தான் முதல் ஆளாய் அங்க நிண்டனான் மூண்டுலீற்றர் எடுத்துக்கொண்டு வந்து வீட்டை வச்சுட்டுத்தானே வந்திருந்து உங்களோடை கதைக்கிறன். ”

“அஹ்… என்ன.. குடுக்குறாங்கள் அங்கை”

“அடக்கடவுளே….   மண்ணெண்ணை குடுக்கிறாங்கள்... வெளியிலை எட்டிப்பாத்திருந்திருப்பியளெண்டா தெரிந்திருக்கும்.தெருவெல்லாம் கானோடு  சனங்கள்.குடும்பத்துக்கு மூண்டு லீற்றர் தர்றாங்கள் மூண்டு மாதத்துக்கு விளக்கெரிக்கலாம் கொஞ்சந்தான் வந்திருக்குதாம் முடிஞ்சு போடும் எண்டும் சொன்னாங்கள் அதுதான் ஓடுதுகள் நெருப்பு விலை வெளியிலை; 

‘’ஓ...முன்னமே ஏன் சொல்லேல்லை.இருட்டுக்குள்ளை கிடக்கிறன் .......எண்ணையில்லாமல்”

புத்தகத்தை போட்டுவிட்டு ’கான்’ எடுத்துக்கொண்டு வெளியில் ஒடினார் அவர்.