Sunday, August 7, 2011

-கிணற்றுத்தவளைகள்-


கிணற்றில் தவளைகளின் உலகம் பரபரப்பாக இருந்தது.அதற்குக்காரணம் கிணற்றின் சொந்தக்காரவீட்டுக்கு வந்திருக்கிற புதுமருமகள்!
எல்லாத் தவளைகளும்அவளைப்பற்றித்தான்,வியப்பாகப்பேசிக்
கொண்டிருந்தன.

மாரி முடிந்து கோடையேறிக்கொண்டிருந்ததால் கிணற்றின் நீர் வற்றத்தொடங்கியிருந்தது.மாரிக்குள் பிறந்த பல இளந்தவளைகள் அங்கிருந்தன.ஒரு கிழட்டுத்தவளை நீண்டகாலமாக அங்கிருக்கிறது.
அந்த கிழட்டுத்தவளை பேச்சுக்களையெல்லாம் கேட்டுக்கொண்டு ஒரு மூலையாக நீரில்தொங்கிக்கொண்டிருந்தது. அதற்கு இப்போதெல்லாம் சரியாகப்பார்வைதெரிவதில்லை. கேட்குந்திறன் கூடக்குறைந்து வரத்தொடங்கியிருந்தது.

அந்தக்கிணறு ஆழமானது.தண்ணீரும் நிறையவே இருந்தது.சுவர்கள் பொழிந்த கற்கள் அடுக்கப்பட்டு கட்டப்பட்டவை.சில கற்களின் இடுக்குகளின் இடையில் இருந்து செடிகள் முளைக்கும்.. அழிந்து போகும். கிணற்றில் இறங்குவதற்கு
சுவரிலிருந்து நீட்டியபடி நடுவில் துவாரத்துடன் பல படிக்கற்கள் மேலிருந்து கீழிறங்கி நீரில் மறைந்தன. இந்தப்படிக்கல்லில் ஏறித்தவளைகள் குதிக்கின்ற சத்தம் கிணற்றின் சுவரில் எதிரொலித்துக்கொண்டிருக்கும்.கிணறு வளவின் பின்மூலையில் இருந்தது.வளவைச்சூழ இரண்டாள் உயரமதில் எழுப்பப்பட்டிருந்தது.

வழமையாக அந்த வீட்டுக்காரர்கள் அமைதியானவர்கள்.அதிகம் பேசுவதில்லை.அவசர அவசரமாக தண்ணீரள்ளி ஊற்றிவிட்டு வீட்டுக்குள் ஓடுவார்கள்.வீட்டில் இரண்டு பையன்களும் ஒரு பெண்ணும். பையன்கள் ஒரே தோற்றமானவர்கள். பெண் கொஞ்சம் குள்ளமானவள். வருவார்கள் போவார்கள் கூடி நின்று பேசிக்கொள்வதில்லை. விருந்தாளிகள் என்று யாரும் வருவதில்லை.வீட்டுக்காரருக்கு தடித்தமீசையோடு தடித்த குரலும். பல்விளக்கும் போது அடித்தொண்டையில் கைவிட்டு அவர் ஓங்காளம் செய்கிற போது பல தவளைகள் பயந்துபோய் நீருக்குள் மூழ்கி அடிக்குச்சென்றுவிடும்.. சிலவேளைகளில் வீட்டுக்காரார் கோபத்தில் கத்தித்திட்டுவதும் கேட்கும்.இறுகிப்போனமுகத்தோடுதான் ஏதோ யோசனையில் இருப்பவர்களாக நீரள்ளுவார்கள் . வீட்டுக்காரம்மா மாத்திரம் நீண்ட நேரம் கிணற்றடியில் நிற்பாள்.கப்பியை மெதுவாக உருட்டி வாளியை கீழேவிடும்போது அவளுடைய தடித்த கைகளும் உருண்டை முகமும் தெரியும். அவள் கூடச்சிரிப்பதில்லை பொம்மைபோலத்தெரிவாள்.தவளைகள் அவளுடைய பிரசன்னத்தைப்பொருட்படுத்துவதில்லை. வாளி நீரில் மோதும்போது விலகியிருப்பதில் கவனமாக இருந்துகொள்வார்கள்.

கிணற்றின் நீர்மட்டத்தில் இருந்து பார்க்கிறபோது கிணற்றின் விளிம்பு  மேலாக வானம் வட்டமாகத் தெரியும் கிண்ணற்றைச்சூழ நிறைய மரங்கள் நின்றுகொண்டிருந்தன.அவற்றின் கிளைகள் நீளுகிறபோது சிறு இலைகளும் பூச்சிகளும் கூட நீரில் விழும்.அப்படி விழுவது தவளைகளுக்கு கொண்டாட்டமாயிருக்கும்.
ஆனால் மூத்த தவளைகள் இது அழிவின் அறிகுறி என்று சொல்வார்கள்.
கிளைகள் நீளும்போது வீட்டுக்காரர் ஆட்களை வைத்து அவற்றை வெட்டி அகற்றி விடுவார்.
வானம் தெளிவாயிருக்கிறபோது சூரியவெளிச்சம் சிலவேளைகளில் நீரைத்தொடும்.உத்தராயண காலத்தில் சூரியனைக்காணலாம் என்று சில மூத்த தவளைகள் சொல்லியிருக்கின்றன. சில வேளைகளின் கிணற்றின் சுவரோரமாக நின்று பார்க்கிறபோது நிலவைக் காணக்கூடியதாயிருந்திருக்கிறது. அதுவும் தண்ணீர் நிறைந்த மாரிகாலத்தில்தான் சாத்தியாமாகியிருக்கிறது.
ஆனால் அந்தக்கிழட்டுத்தவளை மூன்று முறை முயன்று நிலவைப்பார்த்திருக்கிறது.அது ஒரு சாகசக்கதை. நிலவு பார்த்தகதைகளை கிழட்டுத்தவளை சொல்ல இளந்தவளைகள் ஆச்சரியமாக கேட்டுக்கொண்டிருக்கும்.

நட்சத்திரங்களும் முகில்களும் மழைகளும் நீரில் நடக்கும் பூச்சிகளும் தவளைகளுக்கு நண்பர்களாக இருந்தன.வெயில் உயருகிறபோது சுவரில் விழுகிற கோலங்களை தவளைகள் பார்த்து ரசிக்கும்.
மழை நாட்கள் மிகவும் கொண்டாட்டமானவை.தவளைகள் சேர்ந்து பாடுவதும் உண்டு. 
கோடையோடு வருகிற அசதி எங்கும் சூழ்ந்திருந்தபோதுதான்  புது மருமகள் வந்து சேர்ந்தாள்.
அவள் மற்றவர்களைப்போல இருக்கவில்லை.காலில் சலங்கை அணிந்திருந்தாள்.கைகளில் நிறைய தங்கவளையல்கள் அணிந்திருந்தாள். குழந்தை போல ஒரு துள்ளல் அவளிடமிருந்தது.அவளுடைய கலகலவென்ற பேச்சும் சிரிப்பும் கிணற்றின் சுவர்களில் எதிரொலிக்கத்தொடங்கியது. இன்னும் புதுமணப்பெண்ணாயிருந்ததால் நகைகளை தொடர்ந்தும் அணிந்திருந்தாள். காதுகளில் சிமிக்கிகள் ஆடிக்கொண்டேயிருக்கும். கழுத்தில் புதுத்தாலி மின்னிக்கொண்டிருக்கும்.
புதுத்தம்பதிகளுக்கு வளவின் மூலையில் இருக்கும் மரங்கள் சூழ்ந்த கிணற்றடி தனிமைப்பிரதேசமாக இருந்தது.செல்லப்பேசுக்களும் சிணுங்கல்களும் சிரிப்பொலிகளும் சலங்கைச்சத்தமும் காப்புகளின் குலுங்கல்களும் கிணற்றுத்தவளைகளுக்கு புதுமையாயிருந்தன குதூகலத்தை அளித்தன. அவளுடைய நகைகளில் வெயில் பட்டுமின்னித்தெறிப்பதை  திறந்தவாய் மூடாது தவளைகள் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும்.

குளிக்கும் நேரங்களில் தலைமுடியை உயர்த்திக்கட்டியிருப்பாள். அவள் நல்ல நிறம். சிலவேளைகளில்அடர்ந்த நீண்ட கருமையான கூந்தலை விரித்துதோள்களில் படரவிட்டிருப்பாள்..சிமிக்கிகள் அசைய அவள்வெள்ளைப்பற்கள் தெரியும் சிரிப்பு மின்ன நீரிலிருந்து பார்க்கும்போது தவளைகளுக்கு அவள் முகம்,   இரவுவானத்தில் நட்சத்திரங்கள் சூழ்ந்து பிராகாசிக்கும் நிலவுபோலத்தோன்றும் 

கணவன் வீட்டிலில்லாத நேரங்களில், கோடைவெயில் ஏறும்போது மருமகள் குளிர்மைக்காக கிணற்றுக்கட்டில் உட்கார்ந்திருப்பாள்.
கிணற்றை எட்டிப்பார்த்து தெரியும் தன்பிம்பத்தை,பார்த்துக்கொண்டிருப்பாள்.பிம்பத்துக்கு பழித்துக்காட்டுவாள்.
கூவி அழைத்து கிணற்றில் எதிரொலிக்கும் குரலைக்கேட்டு ரசிப்பாள்.பிம்பத்தோடு பேசவும் செய்வாள்.
தம்மோடு பேசுவதாக தவளைகள் நினைத்துக்கொள்ளும் நீர்மட்டத்தில் எல்லாத்தவளைகளும் கூடிநின்று பிரமிப்போடு கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டுமிருக்கும்

 வீட்டின் மூத்தபையன் அதுதான் அவளது கணவன் அவனும் மாலைநேரங்களில் அவளோடு சேர்ந்து கொள்ளுவான்.கப்பி மரத்தையோ பழைய துலாக்கட்டையோ பிடித்துக்கொண்டு நிற்பான்.முன்பெல்லாம் இறுக்கிப்போனமுகத்தோடு கிணற்றினுள் தெரியும் அவன் முகம் இப்போது பிரகாசமாய் சிரிப்புத்தெறித்தபடி தோன்றும்.
அப்போது அவள் பாடவும் செய்வாள். அவளுக்கு அழகான குரல்.
கிணற்றினுள் கால்களைத்தொங்கவிட்டுக்கொண்டும் அவள் உட்கார்ந்திருப்பதுண்டு.சலங்கையணிந்த கால்களை கிணற்றுச்சுவரோடு தாளத்தோடு மோதும்போது இதுவரை தவளைகள் அறிந்திராத இனிய நாதத்தால் கிணறு நிறையும்.சின்ன ரேடியோப்பெட்டி ஒன்றை கிணற்றுக்கட்டில் வைத்து பாடவிட்டபடி அவள் குளிப்பதுமுண்டு..அதிலிருந்து எழும் சங்கீதமும் அதிர்வுகளும் கிணற்றை நிரப்பி தவளைகளை மயங்கச்செய்யும்.

ஒரு முறை அவள் கிணற்றுக்கட்டில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்துப்பார்த்துக்கொண்டிருந்தாள். மாலைச்சூரிய வெளிச்சத்தை அதில் பிரதிபலித்து கிணற்றினுள் பாய்ச்சினாள்.அது விளிம்புள்ள கண்ணாடி. கிணற்றினுள் ஒளி வண்ணங்களாய்ப்பிரிந்தது.கிணற்றுத்தவளைகள் முதன் முதலாய் வானவில்லை கண்டன.

இப்படி சட்டென்று தம்வாழ்வு வசந்தமானதைப்பற்றி தவளைகள் ஓயாது பேசிக்கொண்டிருந்தன.கிணறெங்கும் ஒரு குதூகலம் நிலவியது. இளந்தவளைகள் துள்ளித்திரிந்தன மகிழ்ச்சியோடு. தண்ணீர் வற்றி எட்டாமல் போய்விட்ட படிக்கல்லுக்கும் சில உற்சாகத்தவளைகள் பாய்ந்தேறி சாகசம் புரிந்தன.அந்தப்படியிலிருந்து பார்க்கிறபோது நிலவு முகம் கிட்டத்தெரியும்,நாதங்கள் துல்லியமாகும் என்பது இளந்தவளைகளுக்கு ஒரு சாதனையாகப்போனது.

எல்லாப்பேச்சுக்களிலும் உற்சாகத்திலும் இந்தக்கிழட்டுத்தவளையால் பங்கெடுக்கமுடியவில்லை.அதற்கு அந்தப்பெண்ணைப் பார்க்கமுடியவில்லை.ஒரு மட்டத்துக்கு அப்பால் எல்லாமே பாசிபடர்ந்தாற்போலத்தான் தெரிந்தது.வானங்கூட நீலநிறப்பாசி.சங்கீதங்கள் பேச்சொலிகள் கூட காதில் விழாமல் யாரோ உறிஞ்சிக்கொண்டுவிடுகிறார்கள் போலிருந்தது.

அது நீர்மட்டத்துக்கு சில அங்குலங்கள் உயர்வாயிருந்த ஒருபடிக்கல்லில் ஏறி ஒரு நாள் முழுக்க உட்கார்ந்துகூடப் பார்த்தது.அதன் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை.காதுகள் ஒலிகளைக்குழைத்துக்கொண்டிருந்தன,

மற்றைய தவளைகளுக்கு வாழ்வின் மாற்றம் தொடர்ந்து கொண்டாட்டமாய்த்தான் இருந்தது.தவளைகள் அந்தப்பெண்ணுக்கு தங்கநிலவு என்று செல்லப்பயர்ச்சூட்டியிருந்தன. 
அவள் சலங்கையொலியைகேட்கிறபோது, காதுக்கூர்மையுள்ள ஒரு தவளை நிலவு வருகிறது என்று பரபரப்பாய் குரல்வைக்கும்.மூழ்கியிருக்கிற தவளைகளும் நீர்மட்டத்துக்கு வந்துவிடும். எல்லோரும் நீரின் எதிர்பக்கமாகப்போய் அவளுடைய முகத்தை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
  
கிழட்டுத்தவளைக்கு நாளுக்கு நாள் விரக்தியும் கோபமும் அதிகரித்தது.
‘நிலவு என்று அந்தப்பெண்ணை யாரும் சொல்லக்கூடாது.’’ 
ஒரு முறை அடக்கமாட்டது அது உரத்த குரலில் சொன்னது.

”நான் நிலவைப்பார்த்திருக்கிறேன் அதன் அழகு எனக்கு மாத்திரந்தான் தெரியும். நீங்கள் யாருமே நிலவைப்பார்த்ததில்லை”

அது கிணற்றுள் பெரும்வாதங்களைக்கிளப்பிவிட்டது.

’நீரும் இந்தப்பெண்ணின் முகத்தைப்பார்த்ததில்லை பார்த்துவிட்டுச்சொல்லும் அதன் பிறகு சொன்னால் ஏற்றுக்கொள்ளுகிறோம்’’
என்றன இளந்தவளைகள் இறுதியாக.

கிழட்டுத்தவளையால் பதில் சொல்லமுடியவில்லை.
பெண்ணைப்பார்க்கவேண்டுமென்ற ஆவல்கட்டுக்கடங்காததாய் ஒரு தன்மானத்துக்கான சவால் போல அதன் முன் எழுந்தது.

துள்ளும் வயதில் கிழட்டுத்தவளை துணிந்த பொல்லாத தவளையாயிருந்தது. மூன்று முறை வாளிக்குள் குதித்து மேலேறி நிலவைப்பார்த்துவிட்டு மீண்டு வந்திருந்தது.அது ஒரு அசாத்தியமான சாதனை.அன்றிலிருந்து இன்றுவரை  அது கிணற்றினுள் கம்பீரமாக உலவிக்கொண்டிருந்தது.
இன்றும் அந்தத்துணிச்சல் மீதமிருந்தது.ஆனால் உடல் தளர்ந்துபோய்விட்டிருந்தது. இளந்தவளைகளின் எதிர்விவாதம் அதனை உசுப்பேற்றியிருந்தது.இரவு முழுவது அது உறங்கவில்லை.

விடிந்து சந்தடியடங்கியபோதுதான் மருமகள் கிணற்றடிக்கு வந்திருந்தாள்.மார்புக்குக்குறுக்காக பாவாடையைக்கட்டியிருந்தாள் தலையைவிரித்துவிட்டிருந்தாள்.எல்லாத்தவளைகளும் எதிர்ப்புறமாக நின்று அவளைப்பார்த்துக்கொண்டிருந்தன.அவள் மார்பில் அணிந்திருந்த ஒரு பதக்கம் மின்னிக்கொண்டிருந்தது.

கிழட்டுத்தவளை வாளி தண்ணீரோடு மோதுமிடத்துக்கருகில் நீந்திச்சென்று அடுத்த வாளிக்காகக்காத்துக்கொண்டிருந்தது.அதற்கு எந்த இடத்தில் நின்றால் வாளிக்குள் தாவலாம் என்ற கணிப்பு தெரியும்.
வாளி நளினமாக இறங்கிவந்தது.அப்படித்தான் அவள் நீரள்ளுவதை தவளைகள் பேசிக்கொள்ளும்.அந்தப்பெண் தண்ணீருக்கும் நோகாமால் வாளிக்கும் நோகாமால் நீரள்ளுவாள் என்று.

முதலில் மற்றத்தவளைக்களுக்கு கிழட்டுத்தவளையின் நோக்கம் புரியவில்லை.
அவைகள் இந்தச்சாகசம்பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றன. பார்த்ததில்லை.
எதிர்பார்க்கவுமில்லை.வழமைபோல கிழட்டுத்தவளை ஒதுங்கிப்போகிறது என்று நினைத்தார்கள்.

கிழட்டுத்தவளை வாளிசரிந்து நீர் நிரம்பும் வரை காத்திருந்தது.வாளி நிமிரும்போது பாய்ந்து ஏறிக்கொண்டது.அதனால் வாளியினுள்ளே சட்டென்று குதிக்கமுடியவில்லை வாலியின் விளிம்பைப்பற்றி தொங்கிக்கொண்டிருக்கத்தான் முடிந்தது. அது பதற்றமடையவில்லை.வயது போய்விட்டது என்று தனக்குள் சொல்லிக்கொண்டது.

வாளி தவளையோடு வேகமாக மேலெறியது. 
எல்லாத்தவளைகளும் மூச்சடைத்துப்போயிருந்தன.கண்கள் விரிய அண்ணாந்து தொங்கிக்கொண்டிருக்கும் தவளையைப்பார்த்துக்கொண்டிருந்தன.

மருமகள் வாளியை இழுத்து வெளியில் எடுத்தபோது அதன் வெளி விளிம்பில் கண்களைவிரித்து அவளை உற்றுப்பார்த்தபடி மூச்சிரைத்தபடி தொங்கிக்கொண்டிருந்த அசிங்கமான ஒரு தவளையைக்கண்டாள்.

திடுக்கிட்டு கைகளை உதறி வாளியை கிணற்றினுள் எறிந்து ஓவென்றலறியபடி பின்வாங்கி அழுதுகொண்டு வீட்டை நோக்கி ஓடினாள்.

கப்பி சுழல வாளி கிணற்றுள் வேகமாக இறங்கிச்சுவரில் மோதி நீர் சிதற பெரும் சப்தத்துடன் நீரில் மோதி மூழ்கியது. தவளைகள் பதகளித்து சிதறிப்பாய்ந்தன.நீரில் முழ்கி மறைந்தன.

கிழட்டுத்தவளை மறுநாள் மல்லாந்தபடி நீரில் மிதந்தது.

கிணற்றைக்கலக்கி இறைத்தவர்கள் வீட்டின் புதுமருமகள் தவளைகளுக்கு பயம் என்று பேசிக்கொண்டார்கள்

மாரி நெருங்கிவிட்டது.  இப்போதெல்லாம் மருமகள் ஏதோ யோசித்தபடியேதான் தண்ணீரள்ளுகிறாள்.
மாலை நேரங்களில், கிணற்றுக்கட்டில் தனித்திருந்து அழுதுகொண்டிருக்கவும் தொடங்கியிருக்கிறாள்.

ஆனால் அவள் அழுவதை எந்தத்தவளைகளும் பார்த்துக் கொண்டிருப்பதில்லை.
ஏனென்றால் கிணறு கலக்கி இறைக்கப்பட்டபோது ஒரு தவளை கூட தப்பவில்லை. மாரிக்கு மீண்டும் புதிதாய்த் தவளைகள் வரும்.
              
                  o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o